தெரியுமா?: மொரீஷஸ் நாட்டில் CTA
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்குத் தமிழ் எழுத, படிக்க, பேச கற்பிக்கின்ற லாபநோக்கற்ற, தன்னார்வ அமைப்பாகும். 1998ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு இன்று அமெரிக்காவில் ஆறு ஊர்களில் கிளைகளும், 1800க்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர்.

செம்மொழி மாநாட்டுடன் ஒருசேர நடத்தப்பட்ட இணைய மாநாட்டில் CTA கலந்துகொண்டு 'அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி நடத்துவதில் தொழில்நுட்பப் பயன்பாடு' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியது. பல நாடுகளிலிருந்தும் வந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தொழில்நுட்பத் தமிழ் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையைப் பாராட்டித் தமது நாடுகளில் தமிழைப் பயிற்றுவது குறித்து விவாதித்தனர். இதையடுத்து மொரீஷஸ் நாட்டின் 'தமிழ் பேசுவோர் சங்கம்' (Tamil Speaking UNion of Mauritius) CTAவைத் தன் நாட்டுக்கு அழைத்தது. 'அமெரிக்காவில் தமிழைப் பேணுவதில் மாலைப் பள்ளியின் பங்கு' என்ற தலைப்பில் அங்கே ஆகஸ்ட் 14ம் நாள் ஒரு சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதில் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு தாசராஜன் பிள்ளை பங்கேற்றுச் சிறப்பித்தார்.

CTAவின் சார்பில் வெற்றிசெல்வி ராஜமாணிக்கம், ஸ்ரீவித்யா வேல்சாமி, கந்தசாமி பழனிசாமி, லோகநாதன் பழனிசாமி, இளங்கோ மெய்யப்பன் ஆகியோர் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்டனர்.

வரும் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இணையம் வழியே சேர்க்கவும், CTA குறித்து மேலும் அறியவும் பார்க்க: www.catamilacademy.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com