ஸ்ரீ லலிதகான வித்யாலயா வழங்கிய 'அறுபடை வீடு'
பிப்ரவரி 25, 2006 அன்று பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கில் லதா ஸ்ரீராம் நடத்தும் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவைச் சேர்ந்த மாணவ மாணவியர் 'அறுபடை வீடு' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இது கான்கார்ட் கோவிலுக்கு நிதிதிரட்டும் முகமாக நடத்தப்பட்டது.

இறை வணக்கத்தை அடுத்து குஹமனோஹரி ராகத்தில் என்.எஸ். ராமச்சந்திரன் இயற்றி இசையமைத்த 'மயிலே' என்ற வர்ணத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. 'மஹா கணபதிம்' (நாட்டை), தியாகையரின் 'சரச சாம கான' (காபி நாராயணி), காவடிச்சிந்து என்று நிகழ்ச்சி களை கட்டியது. அடுத்து சிறுமி சந்தியா தீட்சிதரின் 'கைலாச நாதேன' என்ற காம்போஜி ராகக் க்ருதியை கல்பனா ஸ்வரத்தோடு பாடிக் கயிலை நாதனைக் கபர்லிக்கே வரவேற்றாள்.

லதாவின் மகன் சித்தார்த் பாடிய 'சங்கரி' என்ற ஷ்யாமா சாஸ்திரிகள் க்ருதி நிகழ்ச்சியின் நடுநாயகமாக விளங்கியது. சாவேரியில் ராகம்பாடி பின் நிரவல், கல்பனா ஸ்வரம் பாடியதைக் கேட்க நமக்கு வியப்பு மேலிட்டது. அத்தனை திறமை.

நடராஜன் ஸ்ரீனிவாசனின் மிருதங்கமும், கஞ்சிராவும் சந்தோஷ் ராவின் வயலினும் தேனோடு கலந்த தெள்ளமுதம். லதாவிடம் சிறப்புத் தேர்ச்சி பெரும் மாணவியர் பலர் உள்ளனர் போலும்! பைரவி ராகத்தில் 'சிந்தயமாம்' என்ற தீட்சதர் க்ருதியை கல்பனா ஸ்வரத்தோடு ஆறேழு மங்கையர் அடுத்துப் பாடினர். தொடர்ந்து வந்த தயாவதி ராகத் தில்லானாவைக் கேட்டு நிகழ்ச்சியின் இறுதி நெருங்கிவிட்டதோ என்று சோகமான நமக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் அடுத்து வந்த அடுக்கடுக்கான திருப்புகழ் பாடல்கள்.

தமிழ்க் கடவுள் முருகனின் அருள்பெற்று 16,000க்கும் மேற்பட்ட திருப்புகழ்ப் பாடல் களை அளித்தவர் மகான் அருணகிரிநாதர். அவற்றில் சுமார் 1365 பாடல்கள்தாம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் 425 பாடல்களுக்கு ராகம் அமைத்தவர் டில்லி குருஜி ஏ.எஸ். ராகவன். குருஜியைப் பின்பற்றிய 'திருப்புகழ் அன்பர்' ஒருவரிடம் பயின்ற லதா ஸ்ரீராம் சுமார் 15 திருப்புகழ்ப் பாடல்களைத் தன் மாணவ மாணவியர்கள் மூலம் அவ்வரங்கில் அளித்தார்.

கணேசத் திருப்புகழில் ஆரம்பித்து திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என்று ஒவ்வொரு தலமாக முருகனை வர்ணித்து வேல் வகுப்பு, மயில் விருத்தம் என்று பல பாடல்களைப் பாடிச் செவி களைக் குளிர்வித்தார். 'முத்தைத்தரு', 'நிறைமா முகமெனும்', 'பாதி மதி நதி', 'சிவனார் மனம் குளிர' ஆகியவை அவற்றுள் சில.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து தமிழ்கூடப் பேச தெரியாதவர்களிடையில் சிறுவர் முதல் பெரியோர் வரை கடினமான நாக்கைப் பிசையும் சொற்றொடர்கள் நிறைந்த திருப்புகழை உச்சரிப்பு மாறாமல், சந்தம் தவறாமல், வேகம் குறையாமல் பல்வேறு தாளங்களில் பாடியதைக் கேட்டு மெய்மறந்துதான் போனேன். அன்று சிவராத்திரி தினமென்பதை நினைவூட்டும் வகையில் சுமார் 70 மாணவ மாணவிகளும் ஒருங்கே சிவபஞ்சாக்ஷரத் தைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

அருணா நாராயணன்

© TamilOnline.com