இருப்பதை வைத்துக் கொண்டு...
ஒரு கிராமத்தில் பூங்காவனம் என்ற சோம்பேறி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சொந்த வயல் இருந்தது. அதிலிருந்து வந்த விளைச்சலால் அவன் வசதியாகவே வாழ்ந்து வந்தான். ஆனாலும் அவனுக்குத் திருப்தி இல்லை. தன்னைவிட வசதியாக வாழ்ந்த கந்தன் மீது அவனுக்குப் பொறாமை.

கந்தன் நல்ல உழைப்பாளி. அவனது அயராத உழைப்பினால் அவன் மேன்மை அடைந்தான். கந்தனை அழித்தாவது தான் உயர வேண்டும் என்று நினைத்தான் பூங்காவனம்.

அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். எப்படியாவது அவரை அணுகி, கந்தனைவிடத் தான் பணக்காரன் ஆக வரம் பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்த பூங்காவனம், அவரை அணுகினான்.யோகி, பூங்காவனத்தின் மனதில் இருப்பதை உணர்ந்து கொண்டார். அவன், “சுவாமி, கந்தனுக்கு என்ன கிடைக்கிறதோ அதைப்போல எல்லாம் இரு மடங்கு எனக்குக் கிடைக்க ஆசிர்வதியுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். துறவி, “அப்பா, எல்லாம் நீ நினைத்தபடியே நடக்கும். ஆனால் அதன் பிறகாவது நீ திருந்தி மன நிறைவோடு வாழ வேண்டும்!” என்று கூறி ஆசிர்வதித்தார். பூங்காவனம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

சில நாட்கள் கழிந்தன. கந்தன் வயலில் உழுவதற்காக புதிதாக இரண்டு காளை மாடுகளை வாங்கினான். மறுநாள் காலையில் பூங்காவனத்தின் வீட்டு வாசலில் நான்கு காளை மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதனைக் கண்ட பூங்காவனத்துக்கு ஒரே ஆச்சரியம். துறவியின் ஆசி பலித்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி கொண்டான்.

ஒருநாள் கந்தன் சந்தைக்குச் செல்வதற்காக ஒரு குதிரை வண்டியை வாங்கினான். பூங்காவனத்துக்கு அதைப் பார்த்துப் பொறாமை. மறுநாள் விடிந்ததும் பார்த்தால் அவன் வீட்டு வாசலில் இரண்டு குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினான் பூங்காவனம்.

ஞாயிற்றுக்கிழமை. சந்தையில் வியாபாரம் செய்ய குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டான் கந்தன். அதேபோலத் தானும் ஒரு குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டான் பூங்காவனம். கந்தன் செல்லும் வழியில் எதிர்பாராமல் ஓர் விபத்து ஏற்பட்டு விட்டது. அதில் சிக்கி அவனது ஒரு கால், கை உடைந்து விட்டது. அதேபோல பூங்காவனத்திற்கும் விபத்து ஏற்பட்டு, இரண்டு கை, கால்களும் முறிந்துவிட்டன. முதலில் வலியில் துடித்தவன், பின்னர் செயலற்றவன் ஆனான்.

என்ன செய்வான் பாவம், அவன் கேட்ட வரத்தின்படிதானே இது நடந்தது, இல்லையா!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com