இலங்கைக்குப் போனேன்
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது. அப்போது இலங்கையை ஒரு ராணி ஆண்டு வந்தார். விஜய்சிங் ராணியின் மனத்தைக் கவர்ந்தான். ராணி, அவனையே திருமணம் செய்து கொண்டாள். வஞ்சகனான அவன் ராணியையும் அவளைச் சேர்ந்தவர்களையும் காட்டுக்குத் துரத்திவிட்டுத் தன்னையே அரசனாகப் பிரகடனம் செய்து கொண்டான். ஒரிசாவுக்குப் போய் ஒரு ராஜகுமாரியையும் அழைத்து வந்தான். அதன் பிறகு ஒரிசா, பீஹார், வங்காளம் முதலிய வட மாநிலங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்து அங்கு குடியேறினர். சிங்களம் என்ற வார்த்தை, விஜய்சிங் என்ற பெயரிலிருந்தும் மற்றும் ஆளும் வம்சத்தின் உறுப்பினர்களின் பெயர்களின் இணைப்பிலிருந்தும் பிறப்பெடுத்திருக்கிறது. இலங்கையின் கிழக்கிலுள்ள தமிழ்ப் பரம்பரையினரின் காலம் மிகத் தொன்மையானது.

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் ஒரு கோப்பைத் தேநீர் வருவதற்குள் கொழும்பு போய்ச் சேர்ந்து விட்டது. அங்கே எல்லாம் ஒரு கனவு போல், சொர்க்கலோகம் போல் இருந்தது. எழிலான மரங்கள், இனிமையான காற்று, கண்கவரும் கிராமத்துக் குடிசைகள், அவற்றைச் சுற்றிச் சிறிய தோட்டங்கள் என யாவும் மிக அற்புதமாக இருந்தன. நாங்கள் கொழும்பிலுள்ள ஹோட்டலை அடைந்தபோது கனவு முடிவுக்கு வந்தது.

பதினான்காவது நூற்றாண்டில் சீனாவுக்குப் போப்பாண்டவரின் பிரதிநிதியாகச் சென்ற மாரி கோலினி என்பவர் ஸ்ரீலங்காவைப் பற்றிப் பின்வருமாறு கூறியிருக்கிறார். “இப்போது பூமியில் ஒரு சொர்க்கம் உண்டென்றால், அது நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட, கீழ்த்திசையில் உள்ள, ஊதா வண்ண மலர் பூத்த செடிகள் நிறைந்ததும், இந்தியாவின் மறுபக்கத்தில் செய்லான் மலைத் தொடர்களுக்கு எதிரில் உள்ளதுமான இலங்கைதான்". எனது கருத்தும் இதேதான். இதே காரணத்தால்தான் பெர்னாட்ஷா, மரணப்படுக்கையில் இருந்தபோது நான் மீண்டும் பிறந்தால் இலங்கையில் பிறப்பேன் என்ற தன் கடைசி விருப்பத்தைத் தெரிவித்தார்.

##Caption## கொழும்பில் மிகச்சிறந்த அழகு கொஞ்சும் இடம் 'கல்லே ஃபேஸ்' கடற்கரைதான். அனைத்து முக்கியமான கட்டிடங்களும் ஓட்டல்களும் கல்லேஃபேஸைச் சுற்றியே அமைந்துள்ளன. கடற்கரைக்கு மிக அருகில் உள்ள லங்கா ஓபராய் ஓட்டலில் நாங்கள் தங்கி இருந்தோம். ஆரம்பத்தில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அதுவும் ஒன்று. அதன் முகப்பில் இரண்டு பிரமாண்டமான துணியாலான தொம்பைகள் அலங்காரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. அதில் மாபெரும் சிங்கள மன்னர்கள், அரச குடும்பத்தினர் உருவங்கள், பண்டைய கலாசார சின்னங்கள் வரையப்பட்டிருந்தன.

தினமும் காலையில் கல்லே ஃபேஸ் புல்தரையில் நடந்து செல்வோம். கடற்கரையில் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு கிடைக்கிறது. தென்னிந்தியாவில் உள்ளதுபோல ஆப்பம், முட்டை ஆப்பம், இடியாப்பம் ஆகியவை கிடைக்கின்றன. ருசியான தித்திக்கும் கருப்புத் தேநீரும் பருகலாம்.

கொழும்பு நூற்றுக்கணக்கில் ஓட்டல்களையும் உணவருந்தும் இடங்களையும் கொண்டது. ஆனாலும், கல்லே ஃபேஸிலுள்ள தாஜ் சமுத்ராவின் 'கோல்டன் டிராகன்' போல வேறொரு சீன உணவகம் கிடையாது.

செரன்தீப் பயணம்
உள்ளூரில் எனது உபசரிப்பாளர், சென்னையில் உள்ள இலங்கை உதவி ஹைகமிஷனர் திரு. வால்சனின் சகோதரர். இவரும் இவரது மனைவியும் துறைமுகத்திற்கும், 'கங்காராமா' என்ற புத்தர் ஆலயத்திற்கும் அழைத்துச் சென்றனர். மாநகரத்தில் உள்ள இரண்டு முக்கிய விற்பனை மையங்களான 'கம்பீர மாநகரம்', 'சுதந்திரப் பேரரங்கம்' ஆகிய இடங்களுக்கும் சென்றோம்.

நெகம்போவில் (கத்தோலிக்க மக்கள் வாழும் மீன்பிடி கிராமம்) புகழ்பெற்ற கடலோரத்தில் உல்லாசமாகத் தங்க சுகமான இடம் உள்ளது. கொழும்பிலிருந்து ஒரு மணிநேரப் பயணம். ஸ்ரீலங்காவின் மற்ற இடங்களில் உள்ளது போலவே இங்கும் ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், கிறிஸ்தவராயினும், ஆங்கிலேயராயினும் வேறு எந்த மதத்தினராயினும் 'வேல் திருநாள்' விழாவில் பங்கு கொண்டு காவடியை எடுத்துக்கொண்டு மற்ற பிரார்த்தனை பொருள்களுடன் ஆறுமுகக் கடவுளை தரிசிக்கச் செல்கின்றனர்.

ஸ்ரீலங்காவில் எல்லோரும் அறிந்த தெய்வம் முருகன். கதிர்காமத்தில் உள்ள அக்கோவிலுக்கு பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்களும் வந்து வழிபடுகிறார்கள். அதே போல் எல்லா மதத்தவரும் சென்று வழிபடும் மற்றொரு கோவில் சிலாரில் (புட்லம்) இருக்கும் முனீஸ்வரன் கோவிலாகும். அதை 'சாபமிடும் கோவில்' என்றும் சொல்கிறார்கள். உங்களுக்கு யாராவது தீங்கு செய்தால் நீங்கள் முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அவனைச் (தீங்கு செய்தவனை) சபிக்கலாம். சகல வழிகளும் தோல்வி அடைந்த பிறகு கடவுளிடமிருந்து நீதி பெறுவதற்கு இது ஒரு வழி. அதே போல பண்டைய பெளத்த ஆலய வளாகத்தில் சுற்றுச்சுவர்களுக்கு உள்ளே இந்துக்கள் மற்றும் உள்ளூர் தெய்வங்கள், பெண் தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன. தினசரிப் பிரார்த்தனையின் போதும் திருவிழாச் சமயங்களிலும் இங்கு சடங்குகள் நடத்தப்படுகிறது.

கண்டி
இங்குதான் புத்தரின் 'பல் கோவில்' அமைந்துள்ளது. வட இந்தியாவில் யுத்தம் தொடங்கிய போது பல் இருந்த ஸ்தூபி அழிக்கப்படவோ அல்லது திருடப்படவோ சாத்தியம் இருந்தது. ஆகவே இளவரசி ஹேமமாலினி அதை எடுத்துத் தன் கொண்டைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தன் கணவன் ஹர்ஷவர்த்தனர் துணையுடன் இலங்கைக்கு வந்தாள். இப்படி புத்தரின் பல் சின்னம் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஸ்ரீலங்காவுக்கு வந்து சேர்ந்தது. அதற்கான கோவில் முதலில் அநுராதபுரத்தில் கட்டப்பட்டது. காட்டில் ஏற்பட்ட யுத்தம், அதிகாரப் போட்டி காரணமாகப் பிறகு வேறிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. யாரிடம் பல் இருக்கிறதோ அவரே நாட்டை ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே லேசாக அரசியல் தொந்தரவு ஏற்பட்டாலும் சந்நியாசிகள் அந்தப் பல்லுடன் மறைந்து, பிறகு வேறோரிடத்தில் வெளித்தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

##Caption## ஸ்ரீலங்காவின் கடைசி அரசர் கண்டியிலிருந்து ஆட்சி புரிந்தார். அவர்தான் தற்சமயம் உள்ள 'டால்டா மளிகா' என்ற கோவிலைக் கட்டினார். பல் சின்னம் வைரம் பதிக்கப்பட்ட தங்கத்தினாலான பெட்டிக்குள் அங்கு இருக்கிறது. நம்முடைய கோவில்களில் பரம்பரை வழக்கமாக நாதஸ்வரம் வாசிப்பது போல, காலையிலும், மாலையிலும் கோவில் திறந்த உடன் சங்கீதம் இசைக்கப்படுகிறது. கண்டி வருடாந்தரத் திருவிழாவில் கோவிலிலிருந்து பல் ஊர்வலமாகச் செல்கிறது. கண்டியில் உள்ள விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய நான்கு இந்துக் கோவில்களும் நாத தேவாலயம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு கோவில்களிலிருந்தும் உற்சவமூர்த்திகள், அர்ச்சகர்கள், சங்கீத வித்வான்கள், யானைகள் புடை சூழ ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழாவை 'கண்டி பெரிநாரா' என்று சொல்கிறார்கள். இது ஆகஸ்ட் மாதத்தை அடுத்துவரும் வைகாசி பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.

கண்டி மகாவெளி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதுதான் ஸ்ரீலங்காவின் உயிர்காக்கும் நதி. கண்டி செல்லும் பாதையில் முந்திரி நிறுத்தத்தில் அழகிய இளம் பெண்கள் விசித்திரமான லுங்கியும் ரவிக்கையும் உடுத்திக் கொண்டு வீட்டில் ஓடு உடைத்து எடுத்த முந்திரிப் பருப்பைக் கொண்டு வந்து விற்கின்றனர். என்னுடைய கண்ணாடி வளையல்களை அவர்கள் கேட்டார்கள். மகிழ்ச்சியோடு அதை அவர்களுக்குக் கொடுத்தேன்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் கண்டிதான் ஸ்ரீலங்காவின் தலைநகரம். ஸ்ரீலங்காவின் கடைசி அரசர் பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்டு வேலூர் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டு, அதிலேயே இறந்து போனார். அவர்களுடைய மூதாதையரான ஒரு அரசர், நாயர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கேரள ராஜகுமாரியை அழைத்து வந்து ராணியாக்கிக் கொண்டார். சந்ததி இல்லாமல் அவர் இறந்தார். நாயர் சமூக வழக்கப்படி ராணியின் தம்பி மகனுக்கு வாரிசு உரிமை மாறியது. அவரும் கூட கேரளத்தவர்தான். இப்படியான உறவுகள் கண்டிக்குத் தென்னிந்தியப் பழக்க வழக்கங்களை நிறையக் கொண்டு வந்தன.

கண்டிக்குப் போகும்போது தேயிலை தேசத்தை நெருங்கிக் கடக்க வேண்டும். சிலோன் தேயிலை உலகெங்கும் பெயர் பெற்றது. ஸ்ரீலங்காவில் மண்பாண்டத்தொழில் நன்கு அபிவிருத்தி அடைந்துள்ளது. ஜப்பானிய ஒத்துழைப்புடன் நொரடாகாவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான மண்பாண்டத் தொழிற்சாலை சுற்றுலாப் பயணிகளிடையே புகழ் பெற்றது. 'தேயிலை வாரியத்தில் தேயிலையும்', மசாலாப் பொருள் வாரியத்தில் மிளகு, கிராம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்றவைகளையும் ரத்தினக்கற்களை ரத்தினக்கற்கள் காட்சி அரங்கிலும் வாங்கலாம். தவறாமல் வாங்க வேண்டிய மற்றொன்று சாய வேலைப்பாடுள்ள துணிவகைகள். எல்லா கைவினைப் பொருள் கடையிலும் இவை கிடைக்கும். கோட்டையில் இனிய ஸ்ரீலங்கன் 'பைலா சங்கீத' ஒலிநாடாக்களை சிங்களம், தமிழ் இரண்டிலும் வாங்கலாம். எனது ஆச்சரியம்! இந்தி ஒலி நாடாக்களும் சில இருந்தன.

(தொடரும்)

ஆங்கிலமூலம்: கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com