ஹைபோதைராய்டிஸம்
நின்றும் நடந்தும் நினைப்பது உன்னை என்று நம்மையறியாமல் நாம் செய்யும் பல காரியங்களைச் செய்ய வைக்கும் நாளமில்லாச் சுரப்பி தைராய்டு. நாம் தினப்படி செய்யும் வேலைகளைச் செய்யத் தூண்டும் வகையில் இந்தச் சுரப்பி தைராக்ஸின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த இயக்குநீரின் அளவு குறைவதால் ஏற்படும் நோய் ஹைபோதைராய்டிஸம்.

அறிகுறிகள்:
உடல் களைப்பு
சோர்வு
எப்போதும் தூங்கித் தூங்கி வழிதல்
உடல் எடை மிகவும் அதிகரித்தல்
மலச்சிக்கல்
தலைமுடி கொட்டுதல்
தோல் வறட்சி
மாதவிடாய் அதிகரித்தல்
மன உளைச்சல் (Depression)
கொழுப்புச் சத்து அதிகரித்தல்
குளிருக்கு அதிகமாக நடுங்குதல்
முகம் உப்பிக் காணப்படுதல்
கழுத்தில் 'Goitre' என்று சொல்லப்படும் தைராய்டு சுரப்பி வீங்கிக் காணப்படுதல்.

நோய் முற்றினால் உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு 'Myxedema Coma' ஏற்படலாம். இது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. இருதய நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

யாரைத் தாக்கும்?
இந்த நோய் சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். பாரம்பரியமாக மரபணுக்களின் வழியே பரவலாம். இதில் பெரும்பாலோனோருக்கு 'auto immune' என்று சொல்லப்படும், தன்னுயிர் அழிக்கும் வகையான 'Hashimoto’s disease' காணப்படுகிறது. இதற்கு நுண்ணுயிர்க் கிருமிகளின் தாக்கம் காரணமாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு நுண்ணுயிர்க் கிருமிகளின் மூலம் ஏற்படும் 'Thyroiditis' எனப்படும் ஹைபோதைராய்டிஸம் உண்டாகலாம்.

தைராய்டில் கட்டி அல்லது அபரிதமாகச் சுரக்கும் வியாதி இருப்பின், அதற்காகச் சாப்பிடும் மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை காரணமாகவும் ஹைபோதைராய்டிஸம் ஏற்படுவது உண்டு. முன்னாட்களில் உணவில் அயோடின் குறைவாக உட்கொண்டதாலும் இந்த நோய் அதிகம் காணப்பட்டது. அதனாலேயே இப்போதெல்லாம் அயோடின் கலந்த உப்பு விற்கப்படுகிறது.

##Caption## பரிசோதனைகள்
இந்த நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக முதன்மை மருத்துவரை நாடவேண்டும். இதற்கான ரத்தப் பரிசோதனை செய்யப்படும். 'TSH', Thyroxine என்கிற ஹார்மோன்களின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இதில் TSH அதிகமாகவும், Thyroxine குறைவாகவும் இருப்பின் ஹைபோதைராய்டிஸம் என்று ஊர்ஜிதம் செய்யப்படும்.

ஒரு சில வேளைகளில் thyroglobulin antibodies பரிசோதனை தேவைப்படலாம். மேற்கூறிய thyroiditis இருப்பவர்களுக்கு வேறு பரிசோதனைகள் செய்வதுண்டு.

சிகிச்சை முறைகள்
இதற்கு 'Thyroxine' மருந்து அளிக்கப்படும். இதை 'Synthyroid' அல்லது Levothyroxine என்று வழங்குவர். இதை 25 microgram muthal 200 microgram வரை அளிக்க வேண்டி வரலாம். இதைக் காலையில் தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். கூடுமானவரை வேறு மாத்திரைகள் அல்லது வைடமின்களுடன் கலக்காமல் தனியே உட்கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பாடு சாப்பிடலாம். மருந்து உட்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாவதை நோயாளிகள் உணர முடியும். ஆறு வாரங்கள் கழித்துத் திரும்பவும் ரத்தப் பரிசோதனை அவசியம். முதல் வருடத்தில் மருந்தின் அளவை மாற்ற நேரிடலாம். ஆனால் ஒரு சில வருடங்களில் அதே அளவு தீர்மானமாகலாம். அப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்தால் போதுமானது. அல்லது, அறிகுறிகள் தெரிந்தால் பரிசோதிக்கலாம். பெரும்பாலோனோர் இந்த மருந்தை ஆயுட்காலம் முழுதும் உட்கொள்ள வேண்டி வரலாம். ஒரு சிலருக்குக் காலப்போக்கில் மருந்தின் தேவை குறையலாம்.

மகப்பேறும் தைராய்டும்
தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகள் ஏற்படலாம். மகப்பேறு தள்ளிப் போகலாம். பெண்கள் கர்ப்பம் ஆகாமல் இருந்தால் முதலில் இந்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின்னர் கருவுற்றவர்கள் பலர் உண்டு. அதே நேரத்தில் ஒரு சிலருக்கு கர்ப்பமான பின்னர் இந்த நோய் கண்டுபிடிக்கப்படும். கர்ப்பம் ஆனதும் உடலின் இயக்கம் மாறுபட்டு, ஹோர்மோன்களின் தேவை அதிகரிப்பதால் இந்த நோய் வெளியில் தெரிய நேரிடலாம். இவர்களுக்கும் ரத்தப் பரிசோதனையில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டால், மருந்துகள் மூலம் தீர்வு காணப்படும். இந்த மருந்தை கர்ப்ப காலத்தில் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நோயைச் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை யென்றால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் மாதம் ஒருமுறை ரத்தப் பரிசோத்னை தேவைப்படும். மகப்பேறு மருத்துவர் தவிர நாளமில்லாச் சுரப்பி நிபுணரை (Endocrinologist) நாடவேண்டி வரலாம். குழந்தை பிறந்த பின்னர், தைராய்டின் அளவைப் பொறுத்து மருந்தின் அளவு குறைக்கப்படலாம்.

இந்த நோய் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாவிட்டாலும், நோயைக் கண்டறிந்தால் உடனடித் தீர்வு காணலாம்.

கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் கிடைக்கும் உடல் எடை குறைக்கும் மாத்திரைகளில் இந்த ஹார்மோன் கலந்திருக்கக் கூடும். இவற்றை நோய் இல்லாதவர்கள் வெறுமனே எடை குறைக்க உபயோகிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடும். ஆகையால் எச்சரிக்கை தேவை.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com