வட அமெரிக்கத் தமிழர் திருவிழா 2010
2010 ஜூலை 2-5 நாட்களில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) தனது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவை கனெக்டிக்கெட்டில் இருக்கும் வாட்டர்பரி நகரத்தில் சிறப்பாகக் கொண்டாடியது. விழா தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் தொடங்கியது. பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா, விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் பழனி சுந்தரம் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தி, விழாவுக்கு முன்னிலை வகித்துச் செயல்பட்டனர். அமெரிக்காவிலிருக்கும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலான தமிழ்ச் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பல்சுவை விருந்தளித்தனர்.

முக்கிய விருந்தினர்களாக பேரா. பர்வீன் சுல்தானா, தோழர் தியாகு, கவிஞர் தாமரை, பேரூர் அடிகளார், வாட்டர்பரி நகர மேயர் மைக்கேல் ஜரிஜுரா, மாகாண அரசு சட்டத்தரணி ரிச்சர்டு ப்லுமேந்த்தால், இயக்குனர் பாரதிராஜா, நடிகர்கள் விக்ரம், சந்தானம், ப்ரியாமணி, லக்ஷ்மி ராய் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முனைவர் பர்வீன் சுல்தானாவின் ‘மண் பயனுற வேண்டும்’ என்ற தலைப்பிலான சொற்பொழிவு, பனைநிலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘யார் தமிழர்?’ என்னும் தலைப்பிலான தெருக்கூத்து, ‘வேர்கள் தமிழில், விழுதுகள் உலகெங்கும்’ என்னும் தலைப்பில் கவிஞர் தாமரை அவர்களின் தலைமையில் கவியரங்கம், ‘எங்கிருந்தோ வந்தாள்’ என்ற நாடகம் முதலானவை இடம்பெற்றன.

அன்று மாலை, பேரா. ஃப்ரான்சிஸ் பாயில், பேரா. அடேல் பார்க்கர், மரு. அலென் ஷாண்டர், இயக்குனர் பாரதிராஜா ஆகியோரது பேச்சுகள் பல அரிய தகவல்களைக் கொடுத்து விழாவுக்குச் செறிவூட்டின.

இரண்டாம் நாள், சிறார்களுக்கான தமிழ்த் தேனீ போட்டி, நாஞ்சில் பீற்றர் வழங்கிய இலக்கிய வினாடி வினா, கவிஞர் தாமரையின் ‘அக்கம் பக்கம்’ என்னும் தலைப்பிலான உரை, முனைவர் ஜி. விஸ்வநாதனின் வாழ்த்துரை, தோழர் தியாகுவின் ‘அமுதென்று பேர்’ என்னும் தலைப்பிலான சிறப்புரை, முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையேற்ற பட்டிமன்றம் ஆகியவை சிறப்பாக இருந்தன.

இரண்டாம் நாள் மாலை, ‘மதுரைவீரன்’ தெருக்கூத்து திருவிழாவின் சிறப்பம்சம். தொடர்ந்து, அக்னி இசைக் குழுவினர் வழங்கிய மெல்லிசை இடம்பெற்றது. தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் ஹரீஷ் ராகவேந்திரா, சுசித்ரா மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் பல்வேறு பாடல்களைப் பாடினர்.

மூன்றாம் நாளன்று, இலக்கிய வட்டம் முன்னின்று நடத்திய நிகழ்ச்சிகளில் முனைவர் இர. பிரபாகரன் ‘புறநானூற்று வாழ்க்கை’, முனைவர் ஆறுமுகம் ‘நாட்டுப்புறக் கலைகளும் நாடகமும்’, முனைவர் பர்வீன் சுல்தானா ‘தமிழ் அன்றும் இன்றும்’, கவிஞர் தாமரை ‘தமிழ்த் திரைப்படங்களின் பொம்மைக் கதாநாயகிகள்’ ஆகிய சொற்பொழிவுகள் இடம்பெற்றன.



இது தவிர, தொழில்முனைவோர் கருத்தரங்கம், மருத்துவக் கருத்தரங்கம், தமிழ் வலைப்பதிவர்கள் கூட்டம், இளைஞர் கூட்டம், தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைகழகங்களின் முன்னாள் மாணவர் கூட்டம் எனப் பல நிகழ்வுகளும் இணையரங்குகளில் நடைபெற்றன.

அடுத்த ஆண்டு தமிழ்த் திருவிழா, தென்கரோலைனா மாகாணத்தின் சால்ஸ்டன் நகரில் இடம்பெறப் போவதாகப் பேரவையினர் அறிவித்துள்ளனர்.

பழமைபேசி,
கனெக்டிகட்.

© TamilOnline.com