வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
ஜூலை 10, 2010 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் ஜெர்மன் டௌனில் உள்ள நார்த்வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் முத்தமிழ் விழாவைச் சிறப்புற நடத்தியது. ஆசான் கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் தமிழ் வாழ்த்துப்பா பாட விழா துவங்கியது.

முதல் நிகழ்ச்சியாக நடைபெற்ற மழலையர் நடனப் போட்டியில் எட்டுக் குழந்தைகள் பங்கேற்றுத் தம் திறமையால் அசர வைத்தனர். கல்பனா மெய்யப்பன் அவர்கள் ஒருங்கிணைப்பில், மேரிலாந்து மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை வழங்கினர்.

அடுத்து, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி தலைமையுரை ஆற்றினார். கல்பனா மெய்யப்பன் செயலர் உரையும், திரு. இராஜ் பாபு இ.ஆ.ப. முதன்மை விருந்தினர் உரையும் வழங்கினர்.

அடுத்துப் பேசிய முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள். அமெரிக்கத் தலைநகரில் தமிழ் மையம் நிறுவ இருப்பதை அறிவித்தார். வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள், தன் சொந்தப் பணமாக பத்தாயிரம் வெள்ளியும் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக முதல் தவணையாகப் பத்தாயிரம் வெள்ளியும் இதற்கென அறிவித்தார். இவற்றை விஞ்சி, திரு. ராஜ்பாபு கட்டிட நிதிக்காக ஐம்பதினாயிரம் வெள்ளியைக் கொடையாக அறிவிக்கவும் அரங்கமே அதிர்ந்தது.

அடுத்தபடியாக, கெளரி சிதம்பரம் பயிற்சியில், ‘இளமை இதோ இதோ’ என்னும் பாடலுக்கான நடனம் மேடையேறியது. காயாம்பு கண்ணன் அழைப்பு விடுக்க, தமிழ்ர் பண்பாடு குறித்துப் பேசினார் முனைவர் பர்வீன் சுல்தானா. பின்னர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தென்றல் முல்லை இதழ், அதன் ஆசிரியர் திரு. கோபிநாத் முன்னிலையில் வெளியிடப்பட்டது. திரு. எழிலரசன் என்கிற இராசாமணி, தமிழ் ஒலிப்பின் ழகர விழிப்புணர்ச்சியைப் பற்றிப் பாடல்களுடன் அழகுற விளக்கினார். இவரை அடுத்து, சொர்ணம் சங்கர் தோழர் தியாகுவை அறிமுகம் செய்தார். தியாகு தமிழின் செழுமை, வளமை, தமிழர் பண்பாடு குறித்து இலக்கிய மேற்கோள்களுடன் பேசினார்.

அடுத்து வந்த மாபெரும் கிராமிய நடன நிகழ்ச்சியில் தெருக்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் முதலான இருபத்தியொரு வகை நாட்டுப்புறக்கலைகள் இடம் பெற்றன. இதைக் கலைராணி நாட்டிய சாலை சிறப்புற வழங்கியது.

இடைவேளைக்குப் பின்னர், அனுகோபால், ஜான்சன் ஆகியோரது இயக்கத்தில் உருவான நடனங்கள் இடம்பெற்றன. லதா கண்ணன், கீர்த்தி, சகானா ஆகியோர் அளித்த இசைச் சங்கமத்திற்குப் பின்னர், ‘ஐந்தாவது தூண்’ அமைப்பின் சமூக விழிப்புணர்வு நாடகமான ‘சுதந்திர அடிமைகள்’, விஜய் ஆனந்த் நெறியாள்கையில் அரங்கேறியது. லஞ்ச ஊழல் குறித்த விழிப்புணர்வை அப்பட்டமாக விளக்கியது. அரசியல் தலைவர் போன்றதொரு கதாபாத்திரத்தில், அனாயசமாகக் கலக்கினார் லதா கண்ணன்.

‘மொழியும் இனமும்’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயராமன் பாண்டியன் பேசினார். இதற்கு முன்னதாக, முனைவர் பாலாஜி நடிகை ப்ரியாமணியுடன் கேள்வி பதில் நேரத்தை சுவாரசியமாக நடத்தினார். பதிவர் பழமைபேசி, கவிஞர் தாமரையுடன் ஒரு கலந்துரையாடலைத் தொகுத்தளித்தார்.

இறுதியாக, முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் ‘அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி மற்றும் பண்பாடு வளர்ப்பது ஆண்களா? பெண்களா?’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சுருக்கமாகவும், சுவையாகவும் நடத்தி முடித்தார்.

பழமைபேசி,
சார்ல்ஸ்டன், வடகரோலைனா

© TamilOnline.com