Breeze Foundation: சிறுவர் படைப்புப் பயிலரங்கம்
மார்ச் 11, 2006 அன்று எழுத்து மற்றும் ஓவியப் பயிலரங்கம் ஒன்றைத் தென்றல் அறக்கட்டளை (Breeze Foundation) சான்டா கிளாரா நகர நூலகத்தில் நடத்தியது. இதில் முக்கிய விருந்தினர்களாகச் சிறுவர் எழுத்தாளர் உமா கிருஷ்ணசுவாமியும் ஓவியர் ஷிராஸ் பாபாவும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த குழந்தைகளின் முன் உமா கிருஷ்ணசுவாமி 'Closet Ghosts', 'The Happiest Tree' போன்ற தனது கதைகளிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காண்பித்தார். பங்குபெற்ற குழந்தைகள் தாமே கதை எழுதிப் படம் வரையும் வாய்ப்பையும் பெற்றனர். இந்தப் படைப்பு முயற்சியின்போது ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் விருந்தினர்களிடம் கேட்டுத் தீர்த்துக்கொள்ள முடிந்தது.

தமது எழுத்துக்களை மற்றவர் முன்னிலையில் படித்த சிறாருக்கு மேடைக் கூச்சத்தைப் போக்கித் தன்னம்பிக்கை வளர்க்கும் பயிற்சியாகவும் இது அமைந்தது. இதில் தனது மகனுடன் பங்குகொண்ட மஹேஷ் ஜகதாப் கூறுகிறார், "என் மகன் கிண்டர்கார்ட்டன் பள்ளியில் படிக்கிறான். இந்த நிகழ்ச்சி அவனுக்கு எவ்வளவு ஊக்கம் தந்தது என்றால், தனது நண்பனைப் படம் வரையச் சொல்லி அவன் கதை எழுதத் தொடங்கிவிட்டான்!" தனக்கேகூட பல பயனுள்ள தகவல்களை அறியமுடிந்த தாகவும் அவர் சொல்கிறார்.

நிகழ்ச்சியை நடத்த வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், சான்டா கிளாரா நூலகம் மற்றும் பல சமூக அமைப்புகள் உதவி செய்தன. ஆதரவு தந்த அமைப்புகளுக்கு தென்றல் அறக்கட்டளை அமைப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் கற்பனைத் திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்ப்பதாகவும், இனிமேலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்குமென்றால் கட்டாயம் பங்குகொள்வோம் என்று அங்கு வந்திருந்த பெற்றோர்கள் ஒருமுகமாகத் தெரிவித்தனர்.

© TamilOnline.com