ஆகஸ்டு 2010: வாசகர் கடிதம்
நான் தென்றல் ரசிகை. இணையதளத்திலும் படிப்பது உண்டு. ஜூலை மாதத் தென்றல் படித்தபோது பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. என்னுடைய மாதுளம்பழ சாதம் சமையல் குறிப்பு பிரசுரிக்கப்பட்டிருந்ததை ஒலி வடிவத்தில் கேட்க ஆச்சரியமாக இருந்தது. திருமதி. சரஸ்வதி தியாகராஜன் தமிழ் வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் புரியும்படியாகப் படித்தார். ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதை அதே இடத்தில் ஒலி வடிவத்திலும் வழங்குவது தென்றல் பத்திரிகைதான் முதன்முறையாகச் செய்கிறது என நினைக்கிறேன். தமிழ் தெரிந்தாலும் படிக்கத் தெரியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். புதுப்புது முறைகளை கண்டுபிடித்துச் சேர்த்து எல்லோரும் ரசித்துப் படிக்கும் பத்திரிகையாகத் தென்றல் விளங்குகிறது. ஆசிரியருக்கும் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பிரேமா நாராயணன்,
கேன்டன், மிச்சிகன்

*****


அமெரிக்காவில் ஆறுமாத காலம் தமிழ்ப் புத்தங்கங்கள் இல்லாமல் எப்படி இருப்பேன் என நினைத்த நான் ‘தென்றல்’ புத்தகத்தைப் பார்த்து, படித்து மகிழ்ந்து போனேன். தற்காலத் தமிழ் வார, மாத இதழ்களில் ஓரிரு பத்திரிகைகள் தவிர மற்றவைகள் சினிமா செய்திகளையே அதிகமாகத் தரும் வேளையில் நல்ல தரமான, நற்கருத்துகளோடு நல்ல தமிழில் வெளிவரும் தென்றல் பத்திரிகையை மனமாரப் பாராட்டுகிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நேர்காணல் அவர் இசையைப்போலவே இனிமையாக இருந்தது .

ரேவதி சுப்ரமணியன்,
சான் ஹோசே, கலி.

*****


தென்றல் ஜூலை இதழில் வெளிவந்த 'விகடனும் குமுதமும்' மிக நல்ல கதை. வாழ்த்துக்கள்.

சரவணராமன்,
சிவகாசி (தென்றல் இணையதளத்தில்)

*****

© TamilOnline.com