பால்வடை
தேவையான பொருட்கள்:
பால் - 1 டம்ளர்
அரிசி மாவு - 1 டம்ளர்
தண்ணீர் - தேவையான அளவு
பாசிப் பருப்பு - 1 சின்னக் கரண்டி
கடலைப் பருப்பு - 1 சின்னக் கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 1 டம்ளர்
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் பால் விட்டுச் சிறிது காய்ந்ததும் அரிசி மாவைப் போட்டு நன்றாகக் கிளறவும். (கிளறும்போது கட்டி தட்டாமல் பார்த்துக்கொள்ளவும். தேவையானால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்). மாவு கையில் ஒட்டாமல் இருந்தால் அடுப்பை அணைத்துவிடலாம். 5 நிமிடம் கழித்து மாவில் ஊறவைத்த பருப்புகளையும் தேங்காய்த் துருவலையும், மிளகாய்ப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு மாவை நன்றாகப் பிசைந்துகொள்ளவும். இப்பொழுது மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துகொண்டு வடை போல் தயார்செய்து வைத்துகொள்ளவும். அடுப்பில் நன்றாக எண்ணெய் காய்ந்ததும் தயார்செய்த வடைகளைப் பொரித்து எடுக்கவும். ருசியான பால்வடை தயார்.

கமலா சுவாமிநாதன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com