தென்றல் பேசுகிறது
இந்தியா பிரமிக்க வைக்கும் அதே நேரத்தில் நம்பிக்கை இழக்கவும் வைக்கிறது. ஒருபுறம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் தன்னிகரற்ற முன்னேற்றம். அதே வேகத்தில் லஞ்சம், தனிநபர் பாதுகாப்பின்மை, அரசியல்வாதிகளின் அட்டகாசம், கட்டைப்பஞ்சாயத்து, ஊடகங்களின் முதுகெலும்பின்மை என்று இவற்றிலும் இணையற்ற உயரங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. இவற்றை விவரிக்கப் புகுந்தால் இடம் போதாது. பிஹார், உத்திரப் பிரதேசம், ஒரிஸா போன்ற சில மாநிலங்களில் வறுமை சில ஆப்பிரிக்க நாடுகளை விட அதிகமாக இருக்கிறதென்று ஒரு கணிப்புக் கூறுகிறது. சென்னை ஓட்டல்களில் மேசை துடைக்கும் வேலைக்கு நேபாளிகளும் பிஹாரிகளும் போட்டி போடுகிறார்கள். நக்ஸலைட்டுகளும் மாவோயிஸ்டுகளும் ஆங்காங்கே வன்முறைத் தனியரசு நடத்துகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்குள் பங்களாதேசிகள் ஆயிரக்கணக்கில் வந்து குடியேறுகிறார்கள். அங்கே பூர்வீக இந்தியர்களுக்குக் கிடைக்காவிட்டாலும் சட்டத்தை உடைத்து வந்தேறியவர்களுக்கு முதலில் ரேஷன் கார்டு, வோட்டர் அடையாளமும் கிடைத்து விடுகிறதாம். அரசியல் நாணயமும், தலைமையிடங்களில் நேர்மையின்மையும் இவ்வளவு அவலத்துக்கும் காரணமாக இருந்த போதும், இவற்றையெல்லாம் மீறித்தான் இந்தியா, அதன் குடிகளின் அறிவாலும் உழைப்பாலும் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது.

*****



ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



சென்ற மூன்று மாதங்களாக நிதித்துறை நெறிப்படுத்தல் மசோதாவைச் சட்டமியற்றுவோர் பந்தாடிக்கொண்டிருந்தார்கள். அதன் முடிவுக்காகச் சந்தைப் பொருளாதாரம் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தது. கடலில் கசிந்த கச்சா எண்ணெய், யூரோப்பியக் கடன் பிரச்சனை போன்ற எதிர்மறையான செய்திகளும் பங்குச் சந்தையில் விலைச் சரிவை ஏற்படுத்தியது. இதனால் நுகர்வோர் நம்பிக்கை குறைவு பட்டது என்கிறது நுகர்வோர் குறியீட்டெண். அதே நேரத்தில் பணியிழப்பு விகிதம் குறைந்ததோடு, வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. போதாக்குறைக்கு ஆஃப்கனிஸ்தான்/பாகிஸ்தான் பாதுகாப்புச் செயல்பாடுகள் குறித்த ரகசிய ஆவண விக்கி-கசிவு வேறு. இவ்வளவுக்கும் நடுவே ஒபாமா அரசு தளராமல், தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும். வோட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே நமது வேண்டுகோளாக இருக்கும்.

*****


உழைப்பாலே மேம்படுதல் என்று கூறும்போது மால்கம் க்ளட்வெல் 'Outliers- The Story of Success ' என்ற நூலில் எழுதியது நினைவுக்கு வருகிறது. “வெற்றியின் உண்மை ரகசியம் மிக எளியது: மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில முக்கியத் திருப்பங்களைச் சார்ந்து இருக்கிறது அது; அவர்கள் வளரும் கலாசாரச் சூழல், அவர்கள் எவ்வாறு தம் நேரத்தைச் செலவழிக்கிறார்கள் என்பவை போல” என்கிறார் அவர். ஆறாவது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் கண்டதோடு நில்லாமல், திருமணத்துக்குப் பின் அமெரிக்காவுக்கு வந்து, இங்கே பரதநாட்டியம் என்ற சொல்கூட அறியப்படாதிருந்த காலத்தில், ஒரு நாட்டியப் பள்ளியைத் தொடங்கி 37 ஆண்டுகளாக அதை நடத்தி வரும் திருமதி ஹேமா ராஜ கோபாலன் ‘வெற்றி’ என்ற சொல்லுக்கு விளக்கமாக நிற்கிறார். அவரோடான உரையாடலும், அவரது நாட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றிய வண்ணப் படத்தொகுப்பும் இந்த இதழுக்குப் பெருமை சேர்க்கின்றன. டாக்டர் இரா. நாகசாமி உலகறிந்த இந்தியத் தொல்லியலாளர். அவருடைய சோழர் கால, பாஞ்சாலங்குறிச்சி அகழ்வாய்வுகளும், கட்டபொம்மன் கோட்டையைக் கட்ட எடுத்த முயற்சியும் எண்ணிப் பெருமைப்படத் தக்கவை. இந்த இதழின் மற்றுமொரு ரத்தினம் ஔவை. துரைசாமிப் பிள்ளையவர்கள் குறித்த ‘முன்னோடி’ கட்டுரை. தமிழரை விம்மிதமடையச் செய்யும் தமிழார்வமும் உழைப்பும் அவரது. அமெரிக்காவுக்கு வந்து தொழில்முறையில் வெற்றியும் செல்வமும் ஈட்டிய போதும், தம் தாய்மண்ணுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று தமிழக மருத்துவர்கள் (ATMA) அமைப்புரீதியாக எடுக்கும் அரிய முயற்களை விவரிக்கும் ‘ஆத்மாவின் ராகங்கள்’ கட்டுரையும் உங்களைத் தொடும். ‘அடைகாக்கும் சேவல்கள்’ ஒரு மாறுபட்ட கதை. எதைச் சொல்வது எதை விடுவது? உங்கள் கையில் இருக்கிறது தென்றல். நீங்களே வாசியுங்கள், எப்படி இருக்கிறதென்று எங்களுக்கு எழுதுங்கள்.

*****


தென்றல் வாசகர்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள். முகமதிய சகோதரர்களுக்கு ரமலான் நோன்பு இந்த மாதத்தில் தொடங்குகிறது. அவர்களுக்கும் தென்றலின் வாழ்த்துக்கள்.


ஆகஸ்டு 2010

© TamilOnline.com