TNF- எல்லாமே 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க'!
2010 மே 28, 29, 30 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளை தனது 35-ஆவது மாநாட்டைப் பென்சில்வெனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரிலுள்ள கிங் ஆஃப் ப்ருஷியா என்னும் பகுதியில் விமரிசையாகக் கொண்டாடியது. பங்கேற்றோர் அனைவருக்கும் 3 நாட்களும் தமிழகத்தில் இருந்ததுபோலத் தோன்றியதென்றால் மிகையல்ல. அறக்கட்டளை வரலாற்றில் கிட்டத்தட்ட 1500 நபர்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் மாநாடாக அமைந்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட 150 இளையோர் கலந்துகொண்ட பொதுமன்றம் கீழ்த்தளத்தில் தனியொரு மாநாடாகவே அரங்கேறியது.

முதல்நாள் வெள்ளியன்று இரவு சிறப்பு விருந்தினர்கள் சந்திப்பு அரங்கம். மறுநாள் காலை இறைவணக்கத்தைத் தொடர்ந்து மாநாட்டுத்தலைவர் சோமலெ சோமசுந்தரத்தின் வரவேற்புரையுடன் மாநாடு துவங்கியது. முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் மாநாட்டு மலரை வெளியிட்டுச் ‘செம்மொழியில் ஈகையும் நகைச்சுவையும்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றி வாழ்ந்துரை நல்கினார். தொடர்ந்து மஹதி சேகர் கர்நாடக இசைக் கச்சேரி நிகழ்த்தினார். அடுத்ததாக டாக்டர். சுதா சேஷய்யன் மாநாட்டின் குறிக்கோளான ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த விழா களைகட்டத் தொடங்கியது. தொடர்ந்து பேரா. அப்துல்காதர் தலைமையில் ‘வற்றாத நீரோட்டங்கள்’ என்னும் தலைப்பில் கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர்.

##Caption## வாஷிங்டன் வட்டார தம்பதிகள் மற்றும் குழந்தைகளின் திரையிசை நடனம், டெலவேர் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளது புதுமையான ‘Finding Nemo’ வில்லுப்பாட்டு எனப் பல்சுவை விருந்து தொடர்ந்தது. ஷெல்லி ஷீல் ‘ஆதரவற்ற இந்தியக் குழந்தைகள்’ என்னும் தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் ‘தமிழக கிராமங்கள்’ என்னும் தலைப்பிலும் சிற்றுரைகள் ஆற்றினுர். குருகுலம் வேதரத்தினம், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுல அரும்பணிகள் பற்றிய விளக்கவுரை மனதைத் தொட்டது. ‘வாழ்க்கை என்பது வாழ்வதற்கா? வாழவைப்பதற்கா?’ என்னும் தலைப்பிலான பட்டிமன்றத்தில் பேரா. அப்துல்காதர் அவர்கள் நடுவராக அமர, பங்கேற்றோர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர்.

ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களது ‘மௌனம் சங்கடம்’ என்னும் நகைச்சுவை நாடகம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு, மாநாட்டின் குறிக்கோளுக்கு ஏற்ப அமைந்திருந்தது. அவரது தமிழ்நாடு அறக்கட்டளை அன்பாலயம் திட்டப்பணி குறித்த எண்ணங்கள் நெஞ்சை நெகிழ்வுறச் செய்தன. ஏ.எம். சுவாமிநாதன், அ. வேதரத்தினம், ஒய்.ஜி. மகேந்திரன், எம்.பாலு போன்ற பெரியோர்களுக்கும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்திற்கும் சேவைக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நீதா உமாசங்கர், மதுமிதா பர்மார் மற்றும் அபிராமி சின்னக்கருப்பன் ஆகிய இளையோர்க்கு அவர்தம் சேவையைப் பாராட்டிச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்திய அறக்கட்டளை கல்விப்பணி குறித்து தியாகராயர் ஆலை அதிபர் கருமுத்து. கண்ணன் பங்கேற்ற வாழ்த்தரங்கம் நல்ல பல கருத்துக்களை வெளிக்கொணர்ந்தது. மாநாட்டின் மகத்தான நிகழ்வாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி மேம்பாட்டுத் திட்டப்பணி செவ்வனே நடைபெற தமிழ்நாடு அறக்கட்டளையும் தமிழ்நாடு அரசும் இணைந்து செயலாற்ற வகைசெய்யும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை குறிப்பிட வேண்டும். இது அறக்கட்டளையின் வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. அன்றைய இறுதி நிகழ்ச்சியாக லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை இரவு பார்வையாளர்களை இசை வெள்ளத்தில் முழுக்காட்டியது. பாடகர்கள் கிருஷ், மஹதி, டி.எம்.எஸ். செல்வக்குமார், மாலதி லக்ஷ்மன் குரல்களில் பாடல்கள் அனைத்தும் தெம்மாங்குப் பாட்டாக ஒலித்ததுடன் பார்வையாளர்களோடு ஒன்றிணைந்து பாடியது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுசென்றது.

இரண்டாம் நாள் ஞாயிறன்று காலை அரங்கின் பல்வேறு தளங்களில் யோகப் பயிற்சி, தமிழ்க்கணினிப் பயிற்சி, திருமணப் பொதுமன்றம், முன்னாள் மாணவர் மன்றம், மாதர் மன்றம் எனப் பல்வேறு குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டன. ‘கவியரசு கண்ணதாசனின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவரது காதல் பாடல்களா?தத்துவப் பாடல்களா?’ என்னும் தலைப்பில் நீதிபதியாகப் பேரா. அப்துல்காதர் பொறுப்பேற்க, சொல்லின் செல்வி திருமதி. உமையாள் முத்து, சிந்தனைச்சுடர் திருமதி சுதா சேஷய்யன் இருவரும் அனல்பறக்க விவாதித்தனர். அடுத்ததாக கதம்பமாலை பகுதி இரண்டில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கரகாட்டம் ஆகிய நடனங்கள் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டியது. அத்துடன் டெலவேர் தமிழ்ச்சங்கத்தினர் வழங்கிய ‘NRI நாச்சிமுத்து’ நாடகம் நகைச்சுவை ததும்ப அரங்கேறியது. தொடர்ந்தன ‘யார் இந்தக் கலைஞர்?’, ‘வறுமையை அகற்ற வாருங்கள்’ ஆகியவை. ‘வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்’ என்னும் விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் இலங்கை வானொலி புகழ் திரு. அப்துல் ஹமீது அவர்களால் விறுவிறுப்பாக நடந்தேறியது.

அப்துல் ஹமீது அவர்களுக்குப் பெயர்பெற்றுத் தந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி பார்ப்போரை இருக்கையின் விளிம்புக்கே கொண்டு சென்றது. விஜய் நாதனின் ஆங்கில நகைச்சுவை அரங்கத்தை கலகலக்கச் செய்தது. உஷா ராம்கியின் சென்னை செந்தமிழ் சிரிப்பில் ஆழ்த்தியது. இறுதி நிகழ்ச்சிக்கு முன்னதாக அறக்கட்டளைத் தலைவர் இராம் மோகன், செயலாளர் தெய்வமணி சிவசைலம் ஆகியோரின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, நிர்வாகிகள், தன்னார்வக் குழுவினர் அறிமுகம் சிறப்புற நடைபெற்றது. இறுதியாக மீண்டும் லக்‌ஷ்மன் ஸ்ருதியின் இன்னிசை இரவு இரண்டாம் பாகம்.

மாநாட்டின் மனநிறைவே ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்பதை முன்னெடுத்துச் சென்றதுதான். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தவை முதன்முறையாக வடஅமெரிக்க மாகாணங்கள் பலவற்றின் தமிழ்ச் சங்கங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்த கலைநிகழ்ச்சிகள். இம்மாநாடு தமிழ்நாடு அறக்கட்டளை வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

கரு.மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்.

© TamilOnline.com