தெரியுமா?: தேசீய அறிவியல் கழகத் தலைவராகப் பேரா. சுப்ரா சுரேஷ்
அணு மற்றும் அணுத்திரள் மீநுண் எந்திரவியலில் முன்னணி ஆய்வாளரான பேராசிரியர் சுப்ரா சுரேஷை தேசீய அறிவியல் கழகத்தின் (National Science Foundation) இயக்குனர் பதவிக்குப் பரிந்துரைத்துள்ளார் அதிபர் ஒபாமா. இதனை அமெரிக்க செனட் உறுதிசெய்யுமென்றால், அமெரிக்க அரசின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய-அமெரிக்கர் ஆகிவிடுவார் சுரேஷ்.

அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மசாசூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் அத்துறையின் வன்னெவர் புஷ் பேராசிரியர் பதவிகளைத் தற்போது வகித்து வருகிறார். சுரேஷ். 53 வயதான சுப்ரா சுரேஷ் சென்னை ஐ.ஐ.டி. பட்டதாரி என்பது நினைவுகூரத் தக்கது.

தேசீய அறிவியல் கழகம் ஒரு சுயேச்சையான மத்திய நிறுவனமாகும். 1950ல் அமெரிக்கக் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட இது அறிவியல் முன்னேற்றம், தேச அளவில் உடல்நலம், வளம், நலவாழ்வு ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசப் பாதுகாப்பையும் நோக்கங்களாகக் கொண்டது.

© TamilOnline.com