தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழர்களுக்குத் தமிழ் மொழி மீது வெறி என்றக் குற்றச்சாட்டைத் தமிழல்லாதவர் மட்டுமல்ல, தமிழர்கள் சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று திருத்திய போதும், மதராஸ் என்ற பெயரைச் சென்னை என்று மாற்றிய போதும் நையாண்டி செய்தவர்கள் பலர். அப்படி நையாண்டி செய்தவர்களே பின்னர், பாம்பேயை மும்பையாக்கி, கல்கட்டாவைக் கொல்கொத்தாவாக்கி, மைசூர் மாகாணத்தைக் கர்நாடகாவாக்கி மகிழ்ந்தனர். அந்த வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்திருப்பது பேங்கலோர் என்ற பெயரை பங்களூரு என்று மாற்றும் முயற்சி. கன்னடிகர்கள் அனைவரும் பங்களூரு என்று அழைக்கும் போது, மற்றவர்களும் ஏன் அதே பெயரைப் புழங்கக்கூடாது என்று கேட்கிறார் ஞானபீட விருது பெற்ற, கன்னட எழுத்தாளர் பேரா. அனந்தமூர்த்தி. தமிழர்களை மொழி வெறியர்கள் என்று நையாண்டி செய்தவர்களும் தமிழர்களைப் பின்பற்றித் தங்கள் தாய்மொழியைப் பற்றிப் பெருமை கொள்வதை வரவேற்கலாம்.

*****


ஏப்ரல் 1, முட்டாள்கள் தினமாக இருக்கலாம். ஆனால், அன்று முதல் இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் பெயர்கள் ஆங்கிலம், இந்தி என்ற இரண்டு மொழிகளிலும் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது. இந்த இரண்டு மொழிகளும் தெரியாதவர்களைப் பற்றியும் இனிமேலாவது அக்கறை கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி, இனிமேல் தமக்குக் கீழ் இருக்கும் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் உள்நாட்டு மொழிகளான தெலுங்கு, கன்னடம் அல்லது உருதுவில் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். ஆந்திர மாநில ஆட்சிமொழிகள் ஆணையத்தின் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த உறுதி யளித்த தலைமை நீதிபதி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் ஹரியானா மாநிலங்களில் கீழ் நீதிமன்றங்கள் ஏற்கனவே மக்கள் மொழி யான இந்தியில் தீர்ப்பு வழங்கி வந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

கீழ் நீதிமன்றங்கள் உள்நாட்டு மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று 1974-ல் ஆந்திர மாநில அரசு பிறப்பித்த ஆணையை நிறைவேற்ற இத்தனை காலமாகியிருக்கிறது! தீர்ப்பு வழங்குவது மட்டுமல்ல, வழக்கு நடத்தும் மொழிகூட உள்நாட்டு மொழியாக இருக்க வேண்டும். வாதி, பிரதிவாதிகள், குற்றம் விசாரிப்பவர்கள், சாட்சிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லோருமே ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், நீதிமன்றத்தின் மொழி மட்டும் ஆங்கிலத்தில் இருப்பது யாருக்காக? இத்தனைக்கும் இந்தியாவில் ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவர்கள் என்னவோ 6 சதவீதம்தான்! (சரி, சரி, இது நியூ யார்க் டைம்ஸின் கணிப்புதான். இந்தியா டுடே யின் கணிப்பு 34%. வேறு சிலர் 2% என்கிறார்கள்.) இந்த மேட்டுக்குடியினர் வசதிக்காக 94% மக்கள் தங்கள் உரிமை களை விட்டுக் கொடுத்துப் போவது இன்னும் எத்தனைநாள்?

*****


உலகமயமாக்கல் இந்தியர்களை (ஆங்கிலம் பேசும்) ஒருமொழிக் குடும்பத்தினராக மாற்றிக் கொண்டிருக்கிறது; இதனால் தாய்மொழி மரபும் பண்பாடும் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார் பேரா. அனந்தமூர்த்தி. சில ஆண்டுகளுக்கு முன்னால் பர்க்கெலித் தமிழ்ப்பீடப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட்டும் இதே போல் ஒரு எச்சரிக்கை விடுத்தார். தாய்மொழியைப் படிக்காமல் ஆங்கிலத்தை மட்டுமே படிக்கும் இந்தியர்கள் பலருக்கு இரண்டு மொழியிலுமே புலமை இல்லாமல் போய்விடுகிறது. அதனால், அவர்கள் தம் எண்ணங்களை எந்த மொழியிலும் எடுத்துச் சொல்லும் திறனற்றவர்களாகி விடக்கூடும் என்றார் பேரா. ஹார்ட்.

அண்மைக்காலத்தில் ஏனைய மொழி பேசுபவர்களோடு ஒப்பிடும்போது தமிழர்களுக்குத் தமிழ்மேல் இருக்கும் பற்று கேள்விக்குள்ளாகிவிடுகிறது. தமிழ்நாட்டுப் பெற்றோர்கள்தாம், தொடக்கநிலைப் பள்ளிக் குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டம் தங்கள் மனித உரிமைக்குப் புறம்பானது என்று வழக்குத் தொடுத்தவர்கள். தமிழ் மொழியை வளர்ப்போம் என்று கூறி வந்த அரசியல் வியாபாரிகளின் வழித்தோன்றல்களின் ஊடகங்கள் இன்று தமிழைக் குதறிக் கொண்டிருக்கின்றன. தமிழ் பேசத் தெரியாதவர்கள்தாம் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களில் குரல் கொடுக்கவேண்டும் என்று ஏதோ ஒரு விதி இருக்கிறது போல் தோன்றுகிறது. தமிழ் ஆசிரியர்கள் பலருக்கே தமிழைச் சரியாகப் பலுக்கத் தெரியவில்லை. ல, ழ, ள; ர, ற; ந, ன வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறைந்து அவை ல, ர, ன என்று மாறிக் கொண்டிருக் கின்றன. வல்லினமான 'ச' கரம் மெலிந்து 'ஸ'கரம் ஆகிக் கொண்டிருக்கிறது!

கணினியில் தமிழ் தொற்றிக் கொண்டிருந்தாலும், அது வளரவேண்டிய வேகத்தில் வளரவில்லை என்பதில் ஏமாற்றம்தான். பேச்சு உணர்தல் (voice recognition), ஒளி வழி எழுத்தறிதல் போன்ற நுட்பங்கள் வெகு வேகமாக ஆங்கிலத்தில் வளர்ந்து கொண்டிருப்பதைப் போல் தமிழில் வளரவில்லை. குழந்தைகள் விளையாட்டுப் பொம்மைகள் கூட ஆங்கிலம் "பேசுகின்றன", "புரிந்து கொள்கின்றன." ஆனால், தமிழ் "பேசும்" பொம்மைகளைச் சந்தைக்குக் கொண்டு வந்தால் யார் வாங்குவார்கள் என்ற தயக்கம் பலருக்கு.

*****


அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்த அனுபவமுள்ளவர்கள், தொலைக்காட்சியில் தமிழ் வருவதற்கு முன்னர் இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் உள்ள வேறுபாட்டை அறிவார்கள். தமிழ்மொழி என்பது ஏதோ தங்கள் பெற்றோர்களும் அவர்கள் நண்பர்களும் மட்டும் பேசும் விந்தையான மொழி என்று வெட்கப்பட்டுக் கொண்டிருந்தனர் குழந்தைகள். தொலைக்காட்சியில் தமிழ், அது குளறு படியானதாக இருந்தாலும், குழந்தைகள் கண்ணோட்டத்தில் மொழியின் மதிப்பைக் கூட்டியிருப்பதை உணரலாம்.

தமிழகத்துக்குத் தங்கள் குழந்தைகளை முதல்முறையாக அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், சிங்கப்பூரை எட்டியதுமே தங்கள் குழந்தைகளில் மாற்றத்தைக் காணத் தொடங்குவார்கள். ஏதோ தாங்கள் மட்டும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து குதித்த விந்தையான பழுப்பு நிறக்குழந்தைகள் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, திடீரென்று ஒரு வீதி முழுக்கத் தங்களைப் போன்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணும்போது ஏற்படும் கலாசார இன்ப அதிர்ச்சியைப் பார்த்தவர் கள் மட்டுமே உணரமுடியும். தமிழகம் வந்து இறங்கியதும் அது இன்னும் பெரிதாகி, தங்கள் பழுப்பு நிறமும் தம் பெற்றோர் பேசும் மொழியும் மனித இயல்புகள்தாம் என்ற நம்பிக்கையைக் கூட்டும். அதே நேரத்தில் தங்களைப் போன்ற குழந்தைகள் ஏன் இவ்வளவு ஏழைமை நிலையில் வாடுகிறார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பும். ஆனாலும், பெரும்பாலான குழந்தைகள் தமிழக விடுமுறைக்குப் பின்னர் ஓரளவுக்குத் தமிழில் பேசும் திறமையுடன் அமெரிக்கா திரும்புவதைக் காண்கிறோம்.

தமிழ் வெறும் அடுப்பறை மொழியாக மட்டுமல்லாமல், தற்காலக் கருவிகளிலும் புழங்கும் மொழியாக இருந்தால்தான் அடுத்த தலைமுறையிலும் அது வாழும் மொழியாக இருக்க முடியும். கணினிக் கேளிக்கைகள், கார்ட்டூன் படங்கள், பேசும் பொம்மைகள், தொலைத்தொடர்புக் கருவிகள் என்று எல்லாவற்றிலும் தமிழ் இருக்க வேண்டும். இருக்க முடியும். வாசகர்களுக்கு எங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மணி.மு.மணிவண்ணன்

© TamilOnline.com