தெரியுமா?: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது


தமிழ்நாடு அறக்கட்டளை மே 28 முதல் 31 வரை ஃபிலடெல்ஃபியாவில் நடத்தும் 35வது தேசிய மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சம் 'TNF Youth Service Excellence Award'. அமெரிக்காவில் வாழும் இளைய தமிழரின் சிறப்பான சேவையை அது கௌரவிக்கிறது, கொண்டாடுகிறது. 'தொழில்துறை இளையர்', 'இளையர்', 'சிறார்' என்று மூன்று பிரிவில் இது வழங்கப்படுகிறது.

தென்றல் இதழின் சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை, TNFஉடன் இணைந்து இந்த விருதுகளை வழங்குகிறது. விருதுகளைப் பெறுவோர் விவரம்:

தொழில்துறை இளையர் விருது பெறுபவர் நீதா உமாசங்கர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு மறுவாழ்வளிக்க ASSET என்ற அமைப்பைத் தமிழ் நாட்டில் தொடங்கி கணினிப் பயிற்சி, ஆங்கிலத்தில் பேசப் பயிற்சி, வணிக ஆங்கிலப் பயிற்சி ஆகியவற்றைத் தர வழிவகை செய்தார். டெக்ஸாஸ் ஆஸ்டின் பல்கலையில் முனைவர் சந்தைப்படுத்தலில் முனைவர் ஆய்வு செய்து வருகிறார்.

இளையர் பிரிவில் விருது பெறுபவர் மதுமிதா. 2005ஆம் ஆண்டு ஐந்தாவது வயதில் 'கேட்ரீனா' புயலில் அவதியுறுவோருக்கு உதவி செய்வதற்காக கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்து நிதி திரட்டினார். 2006ல் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ரூ 1 லட்சம் திரட்டி ஆயுர்வேத மருத்துவ மனை ஒன்றுக்கு வழங்கினார். 2009ல் சங்கமம் என்ற சேர்ந்திசைக் கருவி நிகழ்ச்சியை நியூ ஜெர்சியில் நடத்தித் திரட்டிய ஐயாயிரம் டாலரை 'Autism Speaks' அமைப்புக்கு வழங்கினார்.

சிறார் பிரிவில் அபிராமி சின்னக்கருப்பன் (6 வயது) விருது பெறுகிறார். 4 வயதிலேயே அபிராமி தனது பொம்மைகளை வசதிகுறைந்த குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டார். அத்தோடு நிற்காமல் பிறந்த நாள் பரிசாக வந்த பணத்தை விழியிழந்தோர் பள்ளிக்கு வழங்கினார். 2010ல் TNFன் 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்' திட்டத்துக்குப் பிறந்தநாள் நிதியை வழங்கினார்.

© TamilOnline.com