தெரியுமா?: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்
காண்டலிஸா ரைஸ் அமெரிக்க நாட்டின் செயலராக இருந்தபோது துணிச்சல் மிகு பெண்களை உலகறியச் செய்யவேண்டும் என ஒரு விருதை ஏற்படுத்தினார். இவ்விருதுக்காக ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கும் இடையே பலருக்காகத் துணிச்சலாகப் பணிபுரியும் பெண்களை அமெரிக்க அரசு தெரிவுசெய்கிறது. இவ்விருதுக்காக இவ்வாண்டு உலகின் பலநாடுகளிலிருந்தும் 10 பெண்களைத் தெரிவு செய்தது அமெரிக்க அரசு.

இவர்களில் ஒருவர்தான் ஜான்சிலா மஸ்ஜீத் என்னும் தமிழ்ப்பெண். இவ்விருதைப் பெறும் முதல் தமிழ்ப் பெண்மணி இவர். பல ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் இனத்தவரை வெளியேற்றிய போது, அவர்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து அனாதரவாக புத்தளம் பகுதிக்குச் சென்று சேர்ந்தனர். அந்த நேரத்தில் ஜான்சிலா மஸ்ஜீத் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் சமூக ஒருங்கிணைப்பு நிதியம் ஒன்றை அமைத்தார். இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்னென்ன செய்ய இயலுமோ அவற்றையெல்லாம் அதன்மூலம் செய்தார். உலகில் எங்கெங்கிருந்து நிதியுதவி பெற இயலுமோ அங்கிருந்தெல்லாம் நிதியுதவி பெற்றுப் புத்தளம் பகுதியிலிருந்த இடம்பெயர்ந்தோருக்கு உதவி புரிந்தார்.

இவ்விருது வழங்கும் விழாவை அமெரிக்க முதற் பெண்மணி மிஷல் ஒபாமாவும் தலைமைச் செயலர் ஹிலேரி கிளிண்டனும் தலைமையேற்று நடத்திக் கொடுத்தனர். தெரிந்தெடுத்த பத்துப் பேருக்கும் விருது வழங்கிப் பேசிய ஹிலேரி கிளிண்டன், "இத்துணிச்சல்மிகு பெண்கள் தனியாக இருக்கின்றனர் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். இவர்களோடு ஒபாமா அரசும் எனது செயலகமும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்" என்று கூறியது அங்கு வந்திருந்தோரின் மனதை இளகச் செய்தது. இந்த நிகழ்ச்சியை state.gov என்னும் வலைப்பக்கத்தில் காணலாம்.

ஜான்சிலா மஸ்ஜீத், விருது பெறும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, தமது அமைப்பில் தமிழ்ப்பெண்கள் மட்டும் அல்லாமல் சிங்களப் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார், இவர்கள் இடையறாது இணைந்து இலங்கையில் இனப்பிரச்சனை இனங்காட்டாதவாறு இயங்குகின்றனர் என்று கூறியதைக் கேட்க உள்ளம் நெகிழ்ந்தது. இவர்கள் நிறுவனத்துக்கு உதவி செய்ய விரும்புவோர் tmkuvais@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.

விஜி வாசு,
செரிகில், நியூஜெர்சி.

© TamilOnline.com