தெரியுமா?: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்
இன்ஃபோசிஸ் என்ற உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கம்பெனியை நிறுவியவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. அவர் 'மூர்த்தி செவ்வியல் நூல்வரிசை' (Murthy Classical Library Series) என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்கு 5.2 மில்லியன் டாலர் அளித்துள்ளார் என்று ஹார்வார்டு அறிவித்துள்ளது.

தமிழ், கன்னடம், ஒரியா, தெலுங்கு, பஞ்சாபி, உருது, பாரசீகம், குஜராத்தி, வங்காளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்கள் இத்திட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். இந்நூல்களில் சிறப்பு என்னவென்றால் அதில் மூலபாடமும் இந்திய மொழியிலேயே இருக்கும் என்பதுதான். இலக்கிய ஆர்வலர்கள் தவிர ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவும் வகையில் அறிமுகம், ஆய்வுக் குறிப்பு எனப் பலவகைத் தகவல்களும் இவற்றில் இருக்கும்.

முதல் கட்டத்தில் வெளியிடப்பட உள்ள நூல்களில் கம்பராமாயணமும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஷெல்டன் போலாக் அவர்கள் இந்த நூல்வரிசையின் பொது ஆசிரியராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்கப்பட வேண்டிய நல்ல முயற்சி.

நன்றி: அவுட்லுக்

© TamilOnline.com