பேராசிரியர் நினைவுகள்: நயமெனப் படுவது யாதெனின்
'பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கையான மணம் இருக்கிறதா இல்லையா என்றுதானே இந்தப் பாடலைச் சுற்றிச் சுழலும் மகத்தான ஆராய்ச்சி?' ஆசிரியருடைய கேள்விக்கு எதிர்பார்ப்புடன் கூடிய மௌனம் விடையாக இருந்தது. 'எங்க நீங்க சொல்லுங்க பாக்கலாம்.... பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா? இருக்கிறது என்றால், அது மனித உடலுக்குப் பொது. அப்படியானால் ஆண்களுடைய கூந்தலுக்கும் இயற்கையான மணம் இருக்கத்தான் வேண்டும். இல்லையா? அப்படி இருக்கும்போது, பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கையான மணம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய முற்படுவதே பொருத்தமற்றது அல்லவோ? ஆனால் இந்தப் பாட்டு என்னடான்னா இயற்கை மணம் உண்டு என்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியதாக அல்லவா இருக்கிறது?'


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



##Caption## அவரிடமிருந்த ஆச்சரியமான வழக்கம் என்னவென்றால், அவருடைய பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது. நான் நடையைச் சொல்லவில்லை. 'வந்தாச்சே' என்று சொல்வதற்கு மாறாக 'வந்தாயிற்றே' என்று சொல்வதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. அவர் பேசுவதற்குத் தெரிந்தெடுக்கும் சொற்கள், எழுதும்போது ஒருவர் எவ்வளவு கவனமாகத் தேர்ந்தெடுக்கிறாரோ அவ்வளவு கவனமானதாக இருக்கும். 'இயற்கை மணம் உண்டு என்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியதாக' இந்தப் பாடல் இருப்பதாக அவர் விவரித்த ஒன்றே போதுமானது. 'இதுதான் முடிவு' என்ற தீர்மானம் எதையும் எற்படுத்திவிடாமல் அந்தப் பாடல் இயங்குகிறது. 'எனக்காகச் சொல்லவேண்டாம். மயில்போன்ற சாயலையும் பச்சரிசிப் பல்லழகையும் கொண்ட இந்தப் பெண்ணுடைய கூந்தலுக்கு இணையான மணமுள்ள பூவை நீ இதுவரையில் கண்டு, கேட்டு, உண்டு உயிர்த்திருக்கிறாயா' என்று வண்டைக் கேட்கிறான். உண்மையில் வண்டிடமா பேசுகிறான்? பக்கத்தில் இருக்கும் மனைவியின் காதில் விழுமளவுக்கு அருகில் நின்றுகொண்டு, வண்டிடம் பேசுவதுபோல் பாசாங்கு செய்கிறான். 'என்ன உன் கூந்தல் இவ்வளவு மணமுள்ளதாக இருக்கிறதே' என்று மனைவியிடம் நேரடியாகப் பேசிக் கொஞ்சாமல், வண்டிடம் என்னவோ பெரிய ஐயத்தை எழுப்பி அதற்குத் தீர்வுகாணப் புகுவது போல பாவனை செய்கிறான். இவ்வளவுதானே பாடல் சொல்ல வருவது?' ஆசிரியர் கேட்டார். என்ன பதில் சொல்வது! யாருக்குத் தெரியும் விடை, யார் அறிந்திருந்தார்கள் அவர் எங்கே எதைநோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை! அதிகபட்சம் புன்முறுவலைத் தவிர எங்களிடம் வேறு என்ன விடையிருந்திருக்க முடியும்?

Transactional Analysis உளவியலாளர்கள் earshot என்றொரு உத்தியைப் பற்றிப் பேசுவார்கள். யாரிடம் பேசவேண்டுமோ அவரிடம் பேசாமல் அவருடைய காதுபட, இன்னொருவரிடம் சொல்வதுபோன்ற பாவனைக்கு அப்படிப் பெயர். வண்டுக்குச் சொல்வதுபோல, அவளுக்குக் கேட்கும்படியாக அவளைப் புகழ்வது. இதுதானே அன்று சண்பகமாறனுக்கு எழுந்த ஐயத்துக்கு விடையாகச் சொல்லப்படும் இந்தப் பாடலின் பின்புலம்? ஐயா, புலவர்களை அழைத்து, பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்று ஒரு மன்னன் கேட்கிறான். புலவர் அழகான ஒரு பின்புலத்தைக் கற்பனை செய்கிறார். பாடலில் இடம்பெறும் ஆண் அந்தப் பெண்ணிடம் நேரடியாக, 'உன் கூந்தல் என்ன இப்படி மணக்கிறதே' என்று சொல்லாமல், ஒரு வண்டை அழைத்து, 'நீ எத்தனைப் பூக்களை உன் ஆயுளில் மோந்திருப்பாய்? எவ்வளவு பூக்களில் அமர்ந்து தேன் உறிஞ்சியிருப்பாய்? எங்கே சொல் பார்ப்போம். எனக்காகச் சொல்லவேண்டாம். உண்மையாகச் சொல். இவளுடைய கூந்தலுக்கு இணையாக மணம்வீசும் மலர் எதுவும், உலகில் எங்கேயும் இல்லைதானே?' என்று கேட்பதாகப் பாடலை அமைத்தார். புலவர் எதுபற்றி இவ்வாறு சுற்றி வளைத்துச் சொல்கிறார் என்பது மன்னனுக்குப் புரிந்துவிட்டது. ஐயம் தீர்ந்தது என்று மகிழ்ந்தான். விஷயம் அங்கேயே முடிந்துவிடுகிறது.

ஒர் ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போதுகளில், காதல்வசப்பட்ட நேரங்களில் பல 'இல்லாதததுகள்' இருப்பவைபோலத் தோன்றும்தான். மனைவியுடன் தனிமையை நுகர்பவனுக்கு, அனுபவிப்பவனுக்கு, அவளுடைய உடல் மணக்கும்; குரலோ என்றால் குயிலையும் சரஸ்வதியின் வீணையையும் காட்டிலும் இனிமையாகக் கேட்கும்; இதழ்களோ என்றால் பாலொடு தேன் கலந்ததைப் போல் சுவைக்கும்; தொடுவதோ, சொல்ல ஒண்ணாத இன்பத்தை ஏற்படுத்தும். உண்டா இல்லையா? கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள அப்படிங்கறாரே வள்ளுவர், இதத்தானே சொல்ல வருகிறார்? 'பாலொடு தேன்கலந்தற்றே பனிமொழி வாலெயி(று) ஊறிய நீர்' என்று அவளுடைய எச்சில் பாலையும் தேனையும் கலந்ததைப்போல இனிக்கிறது என்கிறாரே, நிஜமாகவே எச்சில் இனிக்குமா? அப்படி இனிக்கும் என்றால் ஒரு கோப்பை நிறைய அந்தம்மாவை எச்சில் துப்பச் சொல்லி, 'இந்தாப்பா, நீதானே பாலையும் தேனையும் கலந்ததைப் போல இருக்கிறது என்று சொன்னாய். இந்தா...இதைப் பருகு' என்று சொல்லப் புகுந்தால், அடிக்க வரமாட்டானா அந்த மனுஷன்?

நிறுத்தினார். சுற்றிலும் பார்த்துச் சிரித்தார். சுற்றிலும் இருந்தவர்களில் ஓரிருவர் மட்டுமே திருமணமானவர்கள். 'பரவாயில்லை. இதையெல்லாம் பதினைந்து வயதுக்குள்ளேயே யாரும் கற்றுத் தராமலேயே அறிந்துவிடுகிறீர்கள்தானே! சொன்னா ஒண்ணும் தப்பில்ல. இப்படிப்பட்ட நெருக்கமான நேரங்களில் எச்சிலும் இனிக்கும்; கூந்தலும் மணக்கும். மன்னன் சண்பகமாறன் அன்று தன் தேவியுடன் அப்படி நெருக்கமான நிலையில் இருந்தான். ஆகவே அவனுக்குத் தன்னுடைய தேவியின் கூந்தல் மணப்பதைப் போன்ற எண்ணம் ஏற்பட்டது. எண்ணம் என்ன எண்ணம்? 'மணக்கிறது' என்று சத்தியம் பண்ணவே அவன் தயாராக இருந்திருப்பான். இதைத்தான் இறையனார் குறிப்பாக உணர்த்துகிறார். 'நெருக்கமான நேரத்தில் அவனுக்கு அவளுடைய கூந்தல் மணக்கும். ஐம்புலன்களாலும் தனித்தனியாக ருசித்து அனுபவிப்பதற்கு அவனுக்கு அவளிடம் ஏதேனும் ஒன்று--ஒவ்வொரு புலனுக்கும் உரியதாக--இருக்கும். இது அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே உரியது. அந்த நேரத்தைக் கடந்துவிட்டால், அதது அததற்கான இயற்கையான தன்மையுடன்தான் தோன்றும். இதை இந்த அளவில் புரிந்துகொண்டு, இத்துடன் நிறுத்தவேண்டும். இதுக்குள்ள பயாலஜி பார்க்கக்கூடாது. இப்படி பயாலஜி பார்க்கத் தொடங்கித்தான் நக்கீரருக்கும் இறையனாருக்கும் நடந்ததாகச் சொல்லப்படும் கோபமான உரையாடல்களும், அறிவினால் அளந்து பார்த்து அறிய முடியாத விடைகளும், 'உத்தம ஜாதிப் பெண்களுக்கும் உமையம்மைக்கும் மட்டும் கூந்தல் இயற்கையிலேயே மணமுள்ளதாக விளங்கும்' என்ற பொய்யான, போலிச் சமாதானமும் உண்டாகின.

##Caption## நம்ம இலக்கியமே இப்படித்தான். பழைய இலக்கியம் முழுக்க இப்படி esoteric ரக விளக்கங்கள் ஏராளமாக மண்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஓர் உதாரணமாகத்தான் இந்தப் பாடலை எடுத்துக்கொண்டோம். இந்தப் பாடலை நக்கீரர் கேட்டாராம். பெண்களுடைய கூந்தலுக்கு எப்படி இயற்கையாக மணம் இருக்கமுடியும் என்று ஆட்சேபத்தை எழுப்பினாராம். எண்குணத்தான் என்று சிறப்பிக்கப்பட்டுள்ள இறைவனுடைய குணங்களில் அடங்கவே அடங்காததாகிய கோபம் இறைவனுக்கு எழுந்ததாம். அதுவும் எதற்கென்றால், 'கூந்தலுக்கு இயற்கையாக மணம் இருக்கமுடியாதே' என்ற நியாயமான கேள்விக்கு! உடனே ஒரு பாட்டு.

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என்கவியை
ஆராயும் உள்ளத் தவன்

'சங்கை அறுக்கும் குலத்தில் பிறந்து, கீர்கீர் என்ற ஓசையோடு சங்கறுத்து, வளை செய்யும் குலத்தில் பிறந்தவனாகிய கீரனா என்பாட்டில் குற்றம் கண்டவன்?' என்று கோபமான வார்த்தை. 'சங்கறுப்பதெங்கள் குலம்; சங்கரனார்க்கேது குலம்' என்று இகழ்வதைப் போல் புகழ்வதாகிய ஒரு கேலி ததும்புவதான கேள்வி. இதைக் கேலி என்பதா அல்லது புகழ்ச்சி என்பதா? இறைவன் குலம் கடந்தவன் என்பது மெய்தானே! அப்படி ஒரு மெய்யான கேள்வியை நக்கீரர் கேட்டதும் இறைவன் என்ன செய்தார்? செவிவழிச் செய்திகளால் நிறைந்த பாடல்கள் என்ன சொல்கின்றன?

எங்களுக்கு என்ன தெரியும்! அவர் சொல்லப் போவதைக் கேட்கத் தயாரானோம்.

ஹரி கிருஷ்ணன்

(தொடரும்)

© TamilOnline.com