தென்றல் பேசுகிறது...
ஜூன் 23 முதல் 27 வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. எம் தாய்த் தமிழுக்கு மாநாடு என்று எண்ணிப் பெருமிதப்பட வேண்டிய தருணம் இது. பல்வேறு புலவர்களின் பெயரில் அமைந்த 28 ஆய்வரங்கங்கள், தமிழ் கலை கலாசாரத்தைக் கண்முன் நிறுத்தும் இரதங்கள், உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் பங்கேற்பு, கண்காட்சி என்று எதைத் தொட்டாலும் பிரம்மாண்டம் என்பதாகவே இதன் ஏற்பாடுகள் உள்ளன. ஒரு மூத்த தலைவர் என்ற முறையில் தமிழக முதல்வர், "நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில், தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படுகிற மாநாடு. அது எள்ளின் முனையளவும் கூடக் கட்சி மாநாடாகக் காட்சி அளித்துவிடக் கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக உள்ளேன்" என்று கூறியிருப்பது நமக்கு உகந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தேறி, அதனால் தமிழுக்குப் பயன் விளைந்தால், அதை நடத்திக் காட்டிய அரசும், ஆளும் கட்சியும் பயனுறுவது இயற்கைதானே! இந்தத் தெளிவு கட்சியின் பிற மட்டங்களிலும் ஏற்பட்டால் அது ஒரு நல்ல தொடக்கமாக, எல்லாக் கட்சிகளுக்குமே முன்னுதாரணமாக அமையும்.

*****



ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



உலகில் ஆச்சரியப்பட நிறைய விஷயங்கள் உள்ளன. உலகின் 'ஜனநாயகப் பாதுகாவலன்' என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் அமெரிக்காவின் கர்வமான ஆப்பிள் நிறுவனம் உட்படப் பல பெரிய நிறுவனங்களுக்கு மிக நவீன கணிப்பொறி, மின்னணுக் கருவிகளைச் செய்து கொடுக்கும் தொழிற்சாலைகள் அமைந்திருப்பது சீனாவில். அந்தச் சீனாவோ தொழிலாளர் ஒற்றுமை என்கிற மேடையில் கம்யூனிசச் சிம்மாசனம் அமைத்துக்கொண்ட நாடு. ஆனால், அமெரிக்கா, சீனத் தொழிற்சாலைகளைப் பயன்படுத்தக் காரணம் அங்கே கம்யூனிச அரசின் இரும்புப் பிடியில் சிக்கிய தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்குக் காலை நான்கு மணிமுதல் நள்ளிரவுவரை பிழிந்தெடுக்கப்படத் தயாராக இருப்பதுதான். ஆப்பிளுக்கு ஐபாட், ஐஃபோன் போன்றவற்றைச் செய்துதரும் Foxconn கம்பெனியில் சமீபத்தில் நீண்டநேர வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் தாங்காமல் இளவயதினர் பலர் தற்கொலை செய்துகொள்வது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பயங்கரவாதத் தயாரிப்பு நிறுவனமாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கோ அமெரிக்கா மில்லியன் மில்லியனாக டாலர்களை அள்ளிக் கொடுக்கிறது; சொல்லப்படும் காரணம் பயங்கரவாதத் தடுப்பு! பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களுக்குச் சீனா பின்பலமாக இருக்கிறது. இந்தியா வலுவடைந்துவிடாமல் தடுக்கும் சர்வாதிகார நோக்கமே இதற்குக் காரணம். கம்யூனிச வடகொரியா தென்கொரியாவின்மீது ஏவிவிடும் பயங்கரவாதச் செயல்களையும் சீனா ஆதரிக்கிறது. என்ற போதும் அமெரிக்கா சீனாவுடன் மேலும் அதிக வர்த்தக வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு வருகிறதே தவிர, அதன் உலகாளும் பேராசைப் பின்னணியில் அமைந்த செயல்களைக் குறைப்பதற்கான எந்தக் கட்டுப்பாட்டையும் விவாதிக்க திராணியின்றி இருக்கிறது. ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள் என்று இதன் ஆரம்பத்தில் குறிப்பிட்டவற்றில் ஒரு சிறிய சாம்பிள் இது. புரிந்தவர் யோசியுங்கள். புரியாதவர் தொடர்ந்து கவனியுங்கள்.

*****


தென்றலின் சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் இயக்குனர்களில் ஒருவர் பிரபாகர் சுந்தர்ராஜன் . தென்றல் முதல் இதழிலிருந்து விடாமல் 'கதிரவன் எழில்மன்னன்' என்ற பெயரில் பல நுணுக்கமான விஷயங்களைப் புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் எழுதி வருபவர். முன்னணித் தொழில்முனைவோரும் ஏஞ்சல் முதலீட்டாளருமான அவரது குறுநேர்காணலைத் தாங்கி வருகிறது இந்த இதழ். மற்றொரு நேர்காணலில் 'சொல்லின் செல்வர்' சுகி. சிவம் ஒரு வித்தியாசமான சமயச் சொற்பொழிவாளராகத் தன்னை முன்னிறுத்துவது சுவையானது. இந்தியாவை உலகின் தொழில்நுட்ப வரைபடத்தில் இடம்பெறச் செய்த இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ஹார்வார்டு பல்கலைக்குக் கொடுத்துள்ள நிதி இந்தியாவின் பன்மொழி இலக்கியங்களை ஆங்கிலமாக்கி உலக அறிவரங்கத்தில் ஏற்றும் என்பது போலப் பல சுவையான செய்தித் துணுக்குகளையும் , நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிறுகதைகளையும் , கவிதைகளையும் , கட்டுரைகளையும் தாங்கி ஒரு பொக்கிஷமாக இந்த மாதமும் தென்றல் உங்களை வந்தடைகிறது. படியுங்கள், சுவையுங்கள், எழுதுங்கள்.

இந்த மாதம் நடைபெறவுள்ள TNF 35வது தேசீய மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.


ஜூன் 2010

© TamilOnline.com