தெரியுமா?: சென்னையில் க்ரியாவின் 'தனிமை'
தீபா ராமானுஜம், ராமனுஜம் தம்பதியினர், நண்பர் நவீன் நாதனுடன் இணைந்து 2001ம் ஆண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கிய க்ரியா நாடகக் குழு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வெற்றிகரமாகப் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. நடிகரும், இயக்குனரும், வசனகர்த்தாவுமாகிய தீபா ராமானுஜத்தின் திறமையான இயக்கத்தில் க்ரியா 6 தமிழ் நாடகங்களையும், 3 ஆங்கில நாடகங்களையும் மேடையேற்றி உள்ளது. க்ரியாவின் நாடகங்கள் அரசியல், நகைச்சுவை, குடும்பம், இசை போன்ற பல்வேறு மையக்கருக்களைக் கொண்டு அமைந்தவை ஆகும்.

ராமானுஜம் எழுதி தீபா நடித்து இயக்கிய Seeds and Flowers நாடகம் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் பிரச்சினைகளை அலசியது. இது அமெரிக்கா, கனடா, சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை அமெரிக்க, இந்தியப் பத்திரிகைகளில் பெரிதும் பாராட்டப் பெற்றன.

ஒவ்வோர் ஆண்டும் க்ரியா குழுவினர் தமது சொந்தப் பொருட்செலவிலேயே இந்தியாவுக்குச் சென்று சிறப்பான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். புதுமையான நாடக உத்திகள், மிகையில்லாத நடிப்பு, சிறப்பான ஒளி, ஒலி அமைப்புகள், நவீன தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்கள்.

எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதி, தீபா ராமானுஜத்தின் இயக்கத்தில் உருவான க்ரியாவின் 'தனிமை' வரும் ஜூலை மாதம் சென்னையின் சிறந்த அரங்கங்களில் அரங்கேற இருக்கிறது. வேலை தேடிப் புலம் பெயர்பவர்களின் வயதான பெற்றோர்கள் அனுபவிக்கும் தனிமையையும், பிரச்சனைகளையும் உற்று நோக்கும் இந்த நாடகத்துக்குக் கலிஃபோர்னியா மற்றும் ஹூஸ்டனில் கிடைத்த வரவேற்பு அபாரம்.

'தனிமை' நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்ற விளம்பரதாரர் மற்றும் நிறுவனங்களின் ஆதரவை க்ரியா வரவேற்கிறது. இந்த நாடகத்தைச் சென்னைக்குச் சென்று அளிப்பதில் ஆர்வம் உள்ள கலைஞர்களையும், அமெரிக்கா வாழ் நாடக ஆர்வலர்களையும் க்ரியா தொடர்பு கொள்ள அழைக்கிறது. நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்றி அளிப்பதில் ஆர்வமுள்ள வணிக நிறுவனங்களும் (ஸ்பான்ஸர்களும்), நடிக்க ஆர்வமுள்ளவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 510.353.1790 அல்லது 408.828.7489.

க்ரியாவின் முந்தைய படைப்புகள் மற்றும் பிற தகவல்களுக்கு: www.kreacreations.com

ச.திருமலைராஜன்

© TamilOnline.com