பழுத்த இலையும் பச்சை இலையும்
ஆலய மணி கம்பீரமாக ஒலித்தது. அன்று 'புனித வெள்ளிக்கிழமை'. இயேசு பெருமானின் சிலுவை மரணத்தைத் தியானிக்க, அந்த மூன்று மணி நேர ஆராதனைக்கு மக்கள் திரளாய் வந்தனர். ஆலயத்தின் முன்னால் ஓர் அரசமரம். பல ஆண்டுகளாய் நிற்கிறது. மரத்தின் உச்சியில் இருந்த கிளையில் ஒரு பழுத்த இலை. பெருமூச்சு விட்ட அந்த இலை கூறியது: ''எனக்கும் ரொம்ப வயசாயிடுச்சு. ஆனாலும் ஓர் ஆசை. பல நாளாக நான் காணும் கனவு. அதுதான் எனது பிரார்த்தனையும் கூட. எப்படியாவது ஒருநாள் ஆலயத்துக்குள்ளே நுழைந்து அந்த ஆண்டவரைப் பாக்கணும்.''

மற்ற இலைகள் அமைதியாய் இருந்தன. வயதிற்குக் கொடுக்க வேண்டிய மரியாதை.

ஆனால் கீழ்க்கிளையில் இருந்த ஒரு பச்சை இலையால் அமைதி காக்க முடியவில்லை. ''ஏய், கிழட்டு இலையே! உனக்கு ஏன் இந்த நப்பாசை? நாளைக்கு காத்தடிக்கும் போது உன்னுடைய வாழ்வே முடியப் போகிறது. திங்கட்கிழமை தெருக்கூட்டுகிறவன் வரும் போது நீ தரையில் கிடப்பாய்! அவன் உன்னைத் தூக்கிக் குப்பை வண்டியில்தான் போடப் போகிறான். இதுலே என்னத்துக்கு உனக்கு ஆசை, கனவு, பிரார்த்தனை. ஹாஹாஹா!"

இந்தத் திமிரான பேச்சைக் கேட்ட பழுப்பு இலை அமைதியானது. மற்ற இலைகள் அதிர்ந்து போயின.

அடுத்த நாள் சனிக்கிழமை.

திடீரென ஆடி மாதக் காற்றுப்போல எங்கிருந்தோ ஒரு காற்று வந்து அரச மரத்தின் மீது மோதியது. கிளைகள் பலமாக ஆடின.

பழுத்த இலை ''ஐயோ, ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என அலறியது. காற்றின் வேகம் தாங்காமல், கிளையினின்றும் பறிக்கப்பட்டு, மரத்தின் அடியில் விழுந்தது.

காற்று நின்றது.

முதிய அந்த இலையின் முடிவு திடீரென வந்ததால், மற்ற இலைகள் வருந்தின. சோகத்தோடு மெளனமாயின. மெளனத்தைக் கலைத்தது பச்சை இலையின் அகங்காரக் குரல்.

''நேத்து நான் சொன்னது, இன்னைக்கே நடந்து விட்டது. வீண் ஆசைகள் நிறை வேறாது. ஆண்டவரே காப்பாற்றும் என்று அந்த கிழட்டு இலை கத்துச்சே! ஆண்டவர் காப்பாத்துனாரா? பிரார்த்தனை, செபம், மன்றாட்டு, ஆசை, கனவு என்றெல்லாம் நேத்துப் பெரிய பேச்சுப் பேசின அந்தக் கிழட்டு இலையப் பாருங்க, அதுக்கு வாழ்வு முடிஞ்சு பேச்சு. அவ்வளவுதான்! இனி குப்பை வண்டிதான் பாக்கி. இதில, ஆலயத்துக்குள்ளே போய் ஆண்டவரைத் தரிசிக்கணுமாம். இது நடக்கிற காரியமா?''

ஏற்கனவே நண்பனை இழந்த துக்கத்தி லிருந்த மற்ற இலைகள் இந்த வம்புப் பேச்சினால் இன்னும் புண்பட்டன. அமைதியாயின.

oOo


ஞாயிறு காலை 3 மணிக்கே ஆலயமணி அடித்தது. அன்று ஈஸ்டர் பண்டிகை-ஆண்டவன் உயிர்த்தெழுந்த நாள். 4 மணி முதல் ஆராதனை. மக்கள் ஆலயத்தில் குழுமத் தொடங்கினர்.

பத்து வயது மல்லிகா தன் தாயுடன் வந்து முதல் வரிசையில் உட்கார்ந்தாள். ஆராதனையும் தொடங்கிவிட்டது. வெளியே மரத்தடியில் கிடந்த பழுத்த இலை தனது முடிவை எண்ணிக் கலங்கியது. வானிலிருந்து அதன்மீது விழுந்த ஒரு பனித்துளி, அதன் கண்ணீர் போல மற்ற இலைகளுக்குத் தெரிந்தது. கலங்கிய இலை திடீரென, யாரோ தன்னைத் தூக்குவது போல உணர்ந்தது.

எங்கிருந்தோ வந்த ஒரு மெல்லிய காற்று அந்த இலையைத் தூக்கியது. அது மட்டுமல்ல. மெதுவாக ஆலயத்திற்குள் கொண்டு சென்றது.

பழுத்த இலையால் நம்ப முடியவில்லை! இது கனவா அல்லது நனவா என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த மென்காற்று அவ்விலையை முன்வரிசைக்கே கொண்டு போய் விட்டிருந்தது. திருப்பீடத்தின் முன்னால் பயபக்தியோடு பாதிரியார் முழங்காலில் நின்று செபம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மெல்லிய காற்று மல்லிகாவின் காலடியில் கொண்டு போய்ப் பழுத்த இலையை இறக்கிவிட்டது.

தான் ஆண்டவர் சந்நிதியில் இருப்பதைப் பழுத்த இலையால் நம்பவே முடியவில்லை. பல நாட்கள், மாதங்கள், ஏன் ஆண்டுகள் கண்ட கனவு, பிரார்த்தனை, மன்றாட்டு இன்றைக்கு நிறைவேறிவிட்டதை நினைத்து, நன்றியுள்ள மனதோடு திருப்பீடத்தைப் பார்த்தது. மக்கள் வரிசையாக நின்று ஆண்டவர் சிலுவையிலே செய்த தியாகத்தை எண்ணி அதன் அடை யாளமாக முழங்காலில் நின்று பெற்றுக் கொண்ட திருவிருந்தான அப்பமும், திராட்சை ரசமும் பார்த்து இலை பரவசமானது.

மல்லிகா தன் காலடியில் வந்து விழுந்த பழுப்பு இலையைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். மெதுவாக அதை எடுத்துத் தன் னுடைய பரிசுத்த வேதாகமத்திற்குள்ளே வைத்துக்கொண்டாள். ஆராதனை முடிந்து வரும்போது மரத்தடியில் நின்று பழுப்பு இலையை அம்மாவிடம் காட்டினாள். "அம்மா, இந்த அழகான இலையைப் பாருங்களேன். ஆலயத்துக்குள்ளே இருக்கும்போது பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. என்னுடைய பாட்டனி அஸைன்மென்ட் ஹோம்வொர்க்குக்கு ஆண்டவரே உதவி செய்ததுபோல இந்த இலை கிடைத்துவிட்டது' என்று சந்தோஷ மாகக் கூறினாள்.

சலசலவென்று காற்று அடித்து மரத்திலிருந்த இலைகள் ஆடின. பழுப்பு இலை தன் நண்பர்கள் தனக்கு ஆலயம் செல்லக் கிடைத்த வாய்ப்பையும் பரிசுத்த வேதாகமத்துக்குள் அமரும் பெரும் சிலாக்கியத்தையும் நினைத்து மற்ற இலைகள் மகிழ்ச்சிப் பேரொலி எழுப்புவதாகவே உணர்ந்தது. தன் கனவை நனவாக்கி, தன் பிரார்த்தனைக்கு விடை கொடுத்த ஆண்டவருக்கு நன்றியை ஏறெடுத்தது. ஏளனம் செய்த இளம் இலை மட்டும் வெட்கப்பட்டு அமைதியாக இருந்தது.

oOo


திங்கள் காலை. ''மல்லிகா, ஸ்கூல் பஸ் வந்திடுச்சு, பாட்டனி அஸைன்மென்டை எடுத்திட்டுப்போக மறந்திடாதே. பத்திரமா போய்ட்டு வாடா ராஜாத்தி..'' என்ற அம்மாவின் குரல் கேட்டது. ''எடுத்துக்கிட்டேன்'மா. டாடா'' என்ற படி ஓடினாள் மல்லிகா.

பஸ் வழக்கமாக ஆலயத்திற்கு முன்னால் அந்த அரசமரம் அருகே நின்று வேறு சில மாணவிகளையும் ஏற்றிச்செல்லும். அன்றும் அப்படியே நின்றது. மல்லிகா தன் தோழி ரோஸலினுக்கு அந்த அழகான பழுப்பு இலையைக் காட்டி மகிழ்ந்து, அது எப்படிக் கிடைத்தெனக் கூறிக் கொண்டிருந்தாள். பழுப்பு இலையும் மகிழ்ந்தது. திடீரென அதன் மகிழ்ச்சி கலைந்தது. ஏன்? தெருக்கூட்டுகிறவனின் குப்பை வண்டி வந்து பஸ் அருகே நின்றது.

தெருக்கூட்டுகிறவன் இறங்கினான். வண்டிக் குள்ளே இருந்து பளபளக்கும் ஓர் அரிவாளை எடுத்தான். அரசமரத்தின் அருகே சென்றான். ''இந்த கீழ்க்கிளை எவ்வளவு எடஞ்சல்! போன வாரமே ஆலயப் போதகர் இதை வெட்டச் சொன்னார். அவர் வருமுன்னே இதை வெட்டிப் போட்றணும்'' என்று சொல்லிக் கொண்டே, ஏளனம் செய்த பச்சை இலை இருந்த அந்தக் கிளையை வெட்டினான்.

பச்சை இலை நடுங்கியது. ''ஐயோ நான் வாழ வேண்டிய இலை. என்னை வெட்டாதே. வெட்டிக் குப்பை வண்டியில் ஏற்றாதே! வயதுக்கு மரியாதை கொடுக்காமல் அந்தப் பழுப்பு இலையைப் பரிகாசம் செய்தேனே. பழுப்பு இலை ஆலயம் செல்ல விரும்பினதைப் பகடி செய்தேனே. ஐயோ என்னுடைய நிலைமையைப் பாருங்களேன்'' என்று கதறியது. அது கதறக் கதற, தெருக்கூட்டி அக்கிளையை வெட்டிக் குப்பை வண்டிக்குள்ளே தூக்கி எறிந்தான். பழுப்பு இலை கடைசியாகத் தன் நண்பர்களைப் பார்த்தது. பஸ்ஸ¤ம் புறப்பட்டது.

ஆலயத்திலிருந்து போதகர் ஓர் இளைஞனோடு நடந்து வந்தார். இருவரும் அந்த அரசமரத்தின் கீழ் நின்றனர். அவர் சொன்னார். ''தம்பி! வேதம் சொல்லுகிறது: பெருமையுள்ளவர் களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (ஒன்று: பேதுரு 5:5)

இலைகளெல்லாம் இறையியல் கற்றது போல் அமைதியாயின.

நாதன்

© TamilOnline.com