பெயர் பெற்ற புயல்கள்
இந்தியாவில் பிறந்து வளர்ந்து இன்ஜினியரிங் படித்து முடித்து எம்.எஸ். படிப்பிற்காக அமெரிக்கா வந்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் நானும் ஒருவன். டெக்சாஸ் மாநிலத்தில் டால்லஸ் மாநகரில் வாசம். பட்டம் பெற இன்னும் ஒரு செமஸ்டர் தூரம்.

ஏனோ எனது அறை நண்பன் (இந்தியன் தான்) சற்றுக் கவலையாக இருப்பதாகத் தோன்றியது. விசாரிக்கையில் அவனது நண்பர்கள் சிலர் ஹ¥ஸ்டனில் இருந்து இங்கு வந்திருப்பதாகவும், அவர்கள் தங்க ஒரு ஹோட்டல் அறைகூடக் கிடைக்கவில்லை என்றும் கூறினான். ஆச்சரியமடைந்து கேட்கையில்தான் ஒரு சூறாவளிபற்றி நான் அதுவரை அறியாமல் இருந்தது தெரிந்தது.

விஷயம் என்னவென்றால் ஹ¥ஸ்டன் நகரை நோக்கி ஒரு சூறாவளி வந்து கொண்டிருக் கிறது. அது ஏற்படுத்தும் சேதத்தை மட்டுப் படுத்த அந்த நகரத்து மக்களை வேறிடம் சென்று தங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி வந்தவர்கள்தான் என் அறைத் தோழனின் நண்பர்கள். இப்படி ஒட்டுமொத்த ஹ¥ஸ்டன் நகரமே வடக்கு நோக்கித் தாற்காலிகமாகக் குடிபெயர்ந்ததால் டால்லஸில் ஹோட்டல் அறைகள் நிரம்பி வழிந்தன.

என் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மேலும் விவரம் அறிய வலைத்தளத்தில் சில மணிநேரம் செலவிட்டேன். அப்போதுதான் இந்தச் சூறாவளிக்கு ரீட்டா எனப் பெயரிட்டி ருப்பது தெரிந்தது. சில வாரங்கள் முன்னர் இவளது சகோதரி சூறாவளி காட்ரீனா நியூ ஆர்லியான்ஸ் நகரை ஒரு புரட்டு புரட்டியதில் அமெரிக்காவே கு¨லைநடுங்கிப் போயிருந்தது ஞாபகம் வந்தது. பின்னர் வார இறுதியில் அம்மாவிடம் போனில் பேசும்போது சூறாவளி ரீட்டா பற்றி சன் தொலைக்காட்சியில் ப்ளாஷ் செய்தி போட்டதாகக்கூடச் சொன்னார்கள். சிரிப்புத்தான் வந்தது கேட்டபோது.

ஆர்வக் கோளாறு என் பிறவிக்குணம். இந்தச் சூறாவளிகள் பற்றிச் சற்றே மேலும் தெரிந்து கெள்ள இன்டர்நெட்டில் சில வலைப் பக்கங்களை மேய்ந்தேன். அப்போதுதான் சூறாவளிகளுக்குப் பெயர் வைக்கும் பழக்கத்தைப் பற்றி அறிந்தேன். ஒரு வருடத்தில் உருவாகும் சூறாவளிகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று ஒரு பட்டியலே இருந்தது. சூறாவளிகள் அடுத்தடுத்து உருவாக, அந்தப் பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைப்பார்களாம். ஒரு பட்டியல் என்றா சொன்னேன், இல்லை, ஆறு பட்டியல்கள் இருந்தன. ஒவ்வொரு பட்டியலும் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை உபயோகிக்கப்படும். ஒவ்வொரு பட்டியலிலும் 23 பெயர்கள் ஆங்கில அகர வரிசைப்படி -Q, U, Z தவிர, ஏனோ தெரியவில்லை- இருந்தன. 1953-ல் இருந்து இந்தப் பழக்கம் உள்ளது.

ஏதேனும் ஒரு சூறாவளி அதிக அளவில் சேதம் விளைவித்தால் அதன் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, வேறு பெயர் சேர்க்கப்படும் (அந்தப் பெயர் ராசி இல்லை சரிதானே!) இப்படி நீக்கப்பட்டது 1969-ல் வந்த 'கமில்' எனும் சூறாவளிப் பெயர். மேற்கூறிய அனைத்தும் அட்லாண்டிக் மாக்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்குப் பொருந்தும். இதேபோல் பசிபிக் மாக்கடல் சூறாவளி களுக்குத் தனியே ஆறு பெயர்ப் பட்டியல்கள் உள்ளன. இது தவிர ஒவ்வொரு சூறாவளிக்கும் அதன் காற்று வேகத்தைப் பொறுத்து ஓர் எச்சரிக்கை எண் அளிக்கப்படும் (நம்மூர் நாகப்பட்டினம் புயல் சின்னம் போல). எண் 1 என்றால் நீங்கள் சூறாவளியின் போது ஜாலியாக வாக்கிங் போகலாம். எண் 5 என்றால் துண்டைக் காணோம், துணியைக் காணோம் கதைதான். முன்பு நான் சொன்ன சூறாவளி ரீட்டா எண் 5 ரகம். அதனால் தான் அந்த ரகளை, ஆர்ப்பாட்டம் எல்லாம்.

இப்படியாகக் கண்மணி ரீட்டா வந்து போய் ஒரு மாதம் ஓடிவிட்டது. சில தினங்கள் முன்பு அவளது தங்கை 'வில்மா' ·ப்ளோரிடா மாநிலத்தைக் கொஞ்சிவிட்டுச் சென்றாள். 'வில்மா' தான் இந்த வருடப் பட்டியலில் கடைசிப் பெயர் (ஆமாம், 23 சூறாவளிகள் ஏற்கனவே!). அதன் பின்னரும் இரு சூறாவளி கள் உருவாகவே பெயருக்குத் தட்டுப்பாடு. குழம்பிப் போன அதிகாரிகள் இதுவரை பயன்படுத்தப்படாத விதியின்படி அவற்றிற்கு ஆல்·பா, பீட்டா எனப் பெயரிடத் தொடங்கியுள்ளனர். சூறாவளி சீசன் முடிய நவம்பர் மாத இறுதிவரை நேரம் உள்ளது. God Bless America!

இங்கே இப்படியிருக்க, கடந்த வாரம் சென்னையில் சரியான மழை என்றும், புயல் சின்னம் உருவாகியிருப்பதாகவும் அம்மா ·போனில் சொன்னாள். ஹிண்டு பேப்பர் வெப்சைட்டில், தமிழ்நாட்டின்மேல் அழகாகப் புயல் மேகம் படர்ந்திருந்ததைச் செயற்கைக் கோள் படம் காட்டியது. எனக்கு ஏனோ ரீட்டா, வில்மா நினைவுதான் வந்தது. இந்தியாவில் அடிக்கும் புயல்களுக்கும் இதே ஸ்டைலில் பெயரிட்டால் எப்படி இருக்கும்?

முதலில், நம்மூர் புயல்கள் வரவேற்கத் தகுந்தவை. நமக்குத்தான் மழை வேண்டுமே. பிறகு தண்ணீருக்கு என்ன செய்வதாம். ஆக நம்மூர் புயல்களுக்கு மங்களகரமான பெயர்கள் தான் சூட்ட வேண்டும் - 'புயல் லக்ஷ்மி'. அதுவே அந்தப் புயல் வலுவடைந்தாலோ, அதிகரித் தாலோ, பெயரை 'மஹாலக்ஷ்மி' என மாற்றலாம். கேட்கவே நன்றாக இருக்கிறது.

நான் மாயவரத்தில் வளர்ந்தவன். வயல்வெளி, பயிர்பச்சை எனச் செழுமையான பகுதி. மேற்சொன்ன ஐடியாவை சென்னையைச் சேர்ந்த நண்பனிடம் சொன்னபோது ஏனோ அவன் கண்கள் சிவந்தது. விசாரித்ததில் என்னை ஏகவசனத்தில் திட்டி, புயல் மழை போது சென்னை நகரச் சாக்கடைத் தெருக்கள் நிலைமையை விளக்கி, புயல்களுக்கு 'காளி' அல்லது 'பத்ரகாளி' என்றுதான் பெயரிட வேண்டும் என்றான். நியாயமான கோபம்.

மனம் தளராத நான் மேலும் யோசித்ததில் 'லக்ஷ்மி' ஒரு இந்துக் கடவுளின் பெயர். இந்தியாவில் எம்மதமும் சம்மதம். ஆக வரிசைப்படி, 'மேரி', 'பாத்திமா' எனப் பெயரிடுவதும் சரிதான் எனப்பட்டது.

ஆகா, என்ன பிழை செய்ய இருந்தேன். 'லக்ஷ்மி', 'மஹாலக்ஷ்மி' என்ற பெயர்களில் வடமொழி எழுத்துக்கள் இருப்பதை மறந்தே போய்விட்டேனே! தமிழ்நாட்டின் மீது வீசும் புயலுக்கு வடமொழி எழுத்துகளைக் கொண்ட பெயர்களா? லட்சுமி, மகாலட்சுமி, மேரி, பாத்திமா - இப்போது சரிதானே?

மற்றொரு பிரச்சனை. மேற்சொன்னபடி பெயரிட்டால் நாத்திகம் பேசும் நல்லவர்களின் மனது வருத்தப்படுமே! கடவுளர் பெயர்கள் சரிப்படாது. கயல்விழி, பூங்கொடி, அறிவுச்சுடர் - ஆகா, கடவுள் வாசனையே இல்லாத பெயர்கள்தாம். ஆனால், புயல் பாதை மாறி ஆந்திரா பக்கமோ, வடக்கு நோக்கியோ சென்று விட்டால்? அது வடநாட்டுப் பிரச்சனை நமக்குத் தேவையில்லை!

இப்படியிருக்க நம் அருமை அண்டை மாநிலமான கர்நாடகாவை மறந்துவிட்டோமே! வெய்யில் காலத்தில் குடிக்கத் தண்ணீர் தராத அவர்கள், மழைக்காலத்தில் நாமே புயல் மழையால் சூழப்பட்டிருக்க, அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காவிரியில் மேலும் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளம் ஏற்படுத்து வார்கள். இதனால் ஏற்படும் வெள்ளத்திற்கும் பெயரிடுவதில்தான் இந்தியனின் (அல்லது தமிழனின்) தனித்தன்மை வெளிப்படுகிறது. இந்த வெள்ளத்தை நாம் அவர்கள் ஞாபகார்த் தமாகவே 'சாமுண்டி', 'ஜெயஸ்ரீ', 'வாணிஸ்ரீ' என்று பெயரிடலாம்.

பிரச்சனை அதோடு முடியவில்லை. புயல் கடலூருக்கோ, சிதம்பரத்திற்கோ அருகில் கடலைக் கடந்தால் எங்கள் அமைப்புதான் பெயரிடும் என ஒரு தரப்பினர் பிடிவாதம் பிடிக்கலாம். தெற்கே திருநெல்வேலிப் பக்கம் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் தாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறிப் போர்க்கொடி தூக்கலாம். சண்டையில் மண்டைகள் உருளலாம். அதற்குப் பிறகு புயல்களுக்குத் 'தமிழ்நாடு -1/2005' என்பது போன்ற பெயர்களைத்தான் வைக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கலாம்.

புயலால் வரும் பிரச்சினைகள் போதாதென்று இந்தப் பிரச்சினைகள் வேறு வேண்டுமா? பெயரிடாமல் இருப்பதே நல்லதென்று தோன்றவில்லையா உங்களுக்கு!

மகேஷ் ராஜ்குமார்

© TamilOnline.com