தென்றல் பேசுகிறது...
எல்லாம் தொடங்கியது 2007ல். 'சப் பிரைம் மார்ட்கேஜ் கிரைசிஸ்' என்பதாகத் தொடங்கியது. லெஹ்மான் பிரதர்ஸ், மெரில் லின்ச் என்று ஆரம்பித்து கோல்ட்மேன் சேக்ஸ் என்று தொடர்கிறது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 57 அமெரிக்க வங்கிகள் நசிந்திருக்கின்றன. 'அமெரிக்காவில் மாதத்துக்குச் சராசரி 15 வங்கிகள் சரிகின்றன' என்கிறது த எகனாமிக் டைம்ஸ். நிதித்துறை நிறுவனங்களின் நெறிப்படுத்தப்படாத செயல்பாடுகள்தாம் இதற்குக் காரணம். அமெரிக்கா என்றால் சுதந்திரம். கட்டுப்பாடு என்பதே அதன் அகராதியில் காணப்படாதது. விளைவு? ஓய்வூதியத்தை முதலீடு செய்தது, பங்குச் சந்தையில் போட்ட பணம், அல்லது வீடு வாங்கிய மதிப்பு, தூங்கி எழுந்து பார்த்தால் செப்புக் காசு பெறாமல் போவது, வேலை வாய்ப்புகள் இல்லாமல் போவது என்பவை எல்லாம் தனிநபருக்குப் பெரிய அதிர்ச்சி. நிதி நிறுவனங்கள் தம்மைத் தாமே நெறிப்படுத்திக் கொள்ளத் தவறும்போது, பொதுமக்கள் பணத்தைப் பொறுப்போடு நிர்வகிக்காத போது, அரசாங்கம் தலையிட்டு அதை நேர்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இல்லையென்றால் தேசத்தின் நம்பகத்தன்மைக்கே பெரும் குந்தகம் ஏற்படும். இதை உணர்ந்தே ஒபாமா அரசு நிதித்துறை நெறிப்படுத்தல் சட்டம் கொண்டுவர முயல்கிறது. இது நடந்தே ஆகவேண்டும். முதலில் செய்யும்போது கடினமாக இருக்கலாம். சிறிய தவறுகள் நேரலாம். அனுபவம் வரும்போது சட்டங்களைத் திருத்தியும் மாற்றியும் அமைக்க முடியுமே. இன்னும் நிறைய கோல்ட்மேன் சேக்ஸ்கள் ஆவதற்குள் நெறிப்படுத்துவதுதான் அரசுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



*****


போஃபர்ஸ் ஊழலோடு தொடர்புபடுத்தப்படும் தொகை 60 கோடி ரூபாய். இந்தப் பணம் யாரைப் போய் அடைந்தது என்று சர்வ வல்லைமையுள்ள சி.பி.ஐ.யால் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்கள் முன்பு இந்திய மத்திய அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி கைது செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 340 கோடி ரூபாய் கலால் வரி ஏய்ப்புக்குத் துணை போனதாக வழக்கு. ஆனால் மாண்புமிகு மத்திய அமைச்சர் ராஜாவின் 3G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை 25 ஆயிரம் கோடியாக இருந்தது. இது இந்தியாவின் மிக உயர்ந்த கணக்குத் தணிக்கை அலுவலகமான CAG கூறிய தொகை. மன்மோகன் சிங் அவர்களுக்கு இதை கவனிக்க இதுவரை நேரம் கிடைக்கவில்லை. ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் வந்துள்ள செய்திகள் இந்தத் தொகை இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாகக் கூறுகின்றன. அதாவது ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு 12 பூஜ்யங்கள்! அர்ஜுன் சிங்கின் சூர்ஹாட் லாட்டரி ஊழல், லல்லு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் எல்லாம் இதற்கு முன்னால் சுண்டைக்காயினும் சிறிது. இதற்கான தடய ஆவணங்களை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதாம். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவரைச் சட்டம் தொடாது என்பதுதான் நாம் இதுவரை இந்தியாவில் பார்த்துவரும் உண்மை. நமது கூற்று தவறென்று நிரூபிக்கப்பட்டால் முதலில் மகிழ்வது நாமாகத்தான் இருக்கும்.

*****


எந்த மனிதரிடமும் ஆண், பெண் இருபாலரின் கூறுகளும் உள்ளன. ஆனால் எந்தத் தன்மை மேலோங்கி உள்ளதோ அதுவாக அவர் இருக்கிறார். ஆணாகப் பிறந்த சிலரில் பெண் தன்மையும், பெண்ணாகப் பிறந்தவரில் ஆண் தன்மையும் மேலோங்கி நிற்பது இயற்கையின் வினோதங்களில் ஒன்று. இவ்வாறு உடலுக்கும் மனதுக்கும் இடையே ஏற்படும் போராட்டம் ஒரு பக்கம் இருக்க, 'ஒன்பது', 'கூவாகம்' என்றும், இன்னும் பிற விரசமான சொற்களாலும் அவர்களைக் கேலி செய்வது இந்தச் சமுதாயத்தில் காணப்படுவதுதான். அவர்களும் தமது தற்காப்புக்காக உரத்துப் பேசுவதும், கூட்டங் கூட்டமாகவே செல்வதும் அவர்களைத் தனிமைப்படுத்தி உள்ளது. எப்படி ஓரினச் சேர்க்கை உள்ளவர்களை ஏற்கிறோமோ, அதேபோல பேடி, அலி என்றெல்லாம் கூறப்படும் இவர்களையும் உள்ளேற்று, ஒருங்கிணைந்து வாழ்வது அறிவார்ந்த சமுதாயத்தின் கட்டாயம். பெண்ணுடலில் சிக்கிய ஆணை 'திருநங்கை' என்ற அழகிய சொல்லால் இன்றைக்கு அழைக்கிறோம். முதுகலை படித்து, நடிப்பில் தேர்ச்சியுற்று, தானும் எந்தவொரு பிற மனிதருக்கும் குறைவல்ல என்று நிரூபித்திருப்பவர் லிவிங் ஸ்மைல் வித்யா . இவருடைய நேர்காணலும் , ஹரி பிரபாகரின் நேர்காணலும் இந்த இதழின் சிறப்பு அம்சங்கள். ஹரி பிரபாகர் இரண்டாம் தலைமுறை இந்திய-அமெரிக்கர். ஆனாலும் இந்தியாவின் கலாசாரப் பெருமைகளை உணர்ந்தவர். தான் கற்ற மருத்துவத்தின் மூலம் தனது மூதாதையர் நாட்டுக்குச் சேவை செய்யத் தீர்மானித்துத் தமிழகத்தின் கூடலூர் பகுதியில் இந்திய ஆதிவாசி உடல்நல அறக்கட்டளையைத் தொடங்கிப் பெரும்பணி ஆற்றி வருகிறார். இந்தியா அசுத்தமாக இருக்கிறது, மின்சாரம் இல்லை என்று குறைகூற எந்தத் தகுதியும் வேண்டாம், ஆனால் அதில் ஒரு சிறு முன்னேற்றமாவது கொண்டுவர மனிதாபிமானம் வேண்டும். இந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவரிடம் அது நிறைய இருக்கிறது.

*****


உலக அளவில் மேலாண்மைத் துறையில் புகழ்பெற்ற தமிழர்களில் ஒருவர்—ஏன், ஒரே தமிழர் என்றுகூடச் சொல்லலாம்— சி.கே. பிரஹலாத் . இன்று இந்தியாவின் சிறிய கிராமத்தின் குடியானவர் கூட செல்பேசி வைத்திருக்கிறார் என்றால் அது அவரது 'பிரமிடின் அடிப்பாகம்' (Bottom of the Pyramid) கோட்பாட்டை உறுதி செய்கிறது. பல பெரிய வணிக நிறுவனங்களும் கலந்தாலோசிக்க விரும்பிய நல்லறிவு அவருடையது. அவருடைய மறைவு அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்துக்கும், மேலாண்மைச் சிந்தனையாளர் குடும்பத்துக்கும் பெரிய இழப்பு. சி.கே. பிரஹலாதுக்குத் தென்றல் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.

*****


வாசகர்களுக்கு மே தின நல்வாழ்த்துக்கள்.


மே 2010

© TamilOnline.com