அக்ஷயா இசைப்பள்ளியின் தியாகராஜ ஆராதனை
மார்ச் 6, 2010 அன்று சிகாகோ அக்ஷயா இசைப்பள்ளி தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடியது. பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு முதல் நாற்பது வயது வரை பங்குகொண்ட அனைவரும் தியாகராஜ கிருதிகளை அழகாக இசைத்தனர்.

முதலில் சந்தீப் பரத்வாஜ் என்ற பாலகன் முக்கால் மணி நேரத்திற்கு அருமையாக வயலின் கச்சேரி செய்தார். சந்தீப் மிகச் சிறு வயதிலேயே வயலின் வாசிப்பில் கின்னஸ் சாதனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ரவி சுப்ரமண்யம் சிறிதும் பிசிறு தட்டாமல் மிருதங்கம் வாசித்தார். ரவி "ஸ்வரலயா" என்ற இசைப்பள்ளி நடத்தி வருகிறார்.

அக்ஷயா பள்ளி மாணவியர் அற்புதமான 'தியாகராஜ ராக தாள மாலிகா' ஒன்றைப் பாடினர். புதுமையாக இருந்தது. தியாகராஜரின் ஐந்து கிருதிகளை ஒன்றோடு ஒன்று ஸ்வரம் சேர்த்து அழகாக இணைத்து அவர்களே இசையமைத்துப் பாடினர்.

மேடையில் இசைத்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் விருது அளிக்கப்பட்டது. கிருஷ்ணன் மற்றும் முத்து விழாவை சுவையாகத் தொகுத்து வழங்கினர். நானூறு பேருக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அக்ஷயா மியூசிக் அகாடமியின் மினு பசுபதி சிகாகோவில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக வாய்ப்பாட்டுப் பயிற்சி அளித்து வருகிறார். அருமையான இசை நிகழ்ச்சிகளையும் வழங்குகிறார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com