நிவேதா சந்திரசேகர் கர்நாடகக் கச்சேரிகள்
சிகாகோவைச் சேர்ந்த நிவேதா சந்திரசேகர் ப்ளோரிடா மாகாணத்தில் இரண்டு கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளை அளித்தார்.

மார்ச் 19, 2010 அன்று போர்ட் மையர்ஸ் இந்து ஆலயத்தில் முதல் கச்சேரி நடைபெற்றது. 'அம்மா ஆனந்த தாயினி' என்ற கம்பீரநாட்டை வர்ணத்தில் கச்சேரி களைகட்டத் தொடங்கியது. கல்யாணி ஆலாபனை, ஸ்வரங்களும் தனியாவர்த்தனமும் பிரமாதம். இந்துஸ்தானி பாணியில் 'பாடிய சார மைனி'யும், பின்னர் 'பாக்யதா லக்ஷ்மி' கேட்கச் சுகம். டாக்டர் லட்சுமி கிருஷ்ணன், மல்லிகா மற்றும் கோவில் நிர்வாகிகள் கலைஞர்களின் திறமையைப் புகழ்ந்து பேசினர்.

யுகாதியை முன்னிட்டு இரண்டாவது கச்சேரியை மார்ச் 20 அன்று ஸ்ரீகந்த கன்னட கூட்டம் வழங்கியது. ஓரிரண்டு கீர்த்தனைகள் தவிர மற்ற எல்லாவற்றையும் கன்னட சாஹித்யங்களாகவே பாடி மனம் கவர்ந்தார் நிவேதா. 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ', 'துங்கா தீர', 'பாக்யதா லக்ஷ்மி', காளிங்க நர்த்தன தில்லானா என்று பாடிக் களிக்க வைத்தார். டாக்டர் ரேணுகா ராமப்பா மற்றும் நிர்வாகிகள் கலைஞர்களைப் பாராட்டினர்.

நிவேதாவுக்கு திருமதி கோமதி சுந்தரம் (வயலின்), கேசவ் நெலவை (மிருதங்கம்) ஆகியோர் திறம்படப் பக்க வாத்தியம் வாசித்தனர்.

லட்சுமி சாரதி,
ஃப்ளோரிடா

© TamilOnline.com