வாசகர் கடிதம்...
அன்புள்ள ஆசிரியருக்கு,

·பெப்ருவரி 2006 தென்றலில் வந்த "அன்புள்ள சினேகிதியே" பக்கத்தைப் பார்த்துத் திகைத்தேன்!

தன் அக்காவை அவர் கணவர் அடித்துத் துன்புறுத்துகிறார் என்று சந்தேகித்துக் கடிதம் எழுதும் சினேகிதிக்குத் திருமதி வைத்தீஸ்வரன் என்ன அறிவுரை சொல்லியிருக்கிறார் பாருங்கள்:

1.கணவனுக்குக் குறையை நிரப்ப வேறு ஏதேனும் மாற்றுக் குணங்கள் இருக்கலாமாம். (இன்னொருவரை அடித்துத் துன்புறுத்துபவர்களுக்கு அந்தக் குறையை நிவர்த்தி செய்ய என்ன மாற்றுக் குணங்கள் இருக்க முடியும்?)

2.அடிக்கிற கைதான் அணைக்கும் என்று கணவனோடு தொடர்ந்து வாழ்வதால் மனைவி தன் நல்ல குணங்களைக் காட்டுகிறாளாம்!

மேலும், திருமதி வைத்தீஸ்வரன் சிநேகிதிக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று புத்திமதி சொல்கிறார்.

அவர் என்ன சொல்லியிருக்க வேண்டுமோ அதை அதே தென்றல் இதழில் பக்கம் A23ல் டாக்டர் வரலஷ்மி நிரஞ்சன் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அடித்து வதை செய்வதை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கக்குழந்தை மற்றும் குடும்பநலத் துறையிடம் தொடர்பு கொள்ளுதல், ஹாட்லைன் என்ற சுடு பேசியை அழைத்தல் அல்லது endabuse.org வலைத்தளத்துக்குச் செல்லுதல் என்று எத்தனையோ வழிவகைகள் உள்ளன. எந்த மனைவிக்கும் தன்னை அடித்து வதை செய்யும் கணவனோடு வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வாழ்வது அவளது நல்ல குணத்தின் அடையாளமும் இல்லை.

நல்ல பயிற்சி பெற்ற தொழில்முறை ஆலோசகர்கள் (ஏன் என்னைப் போன்ற அக்கறையுள்ள கற்றுக்குட்டிகளுக்கும் தெரிந்த) சொல்லும் புத்திமதிக்கு எதிரான ஏதோ அறிவுரையைத் தென்றல் வெளியிட்டிருப்பது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. தவறான அறிவுரையை வெளியிட்டிருக்கிறோம் என்று தென்றல் ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். அப்படியாவது, அமைதியாக வாடிக்கொண்டிருக்கக்கூடிய தன் அக்காவுக்கு சினேகிதி உதவி பெற்றுக் கொடுப்பாள்.

நன்றி,
ஜெயஸ்ரீ வைத்தியநாதன்
சின்சின்னாட்டி, ஒஹையோ

அன்புள்ள சினேகிதியே

ஜெயஸ்ரீ வைத்யநாதன் அவர்களின் கருத்துக்களில் நியாயம் இருக்கிறது. பொதுவாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பெரும்பாலோர் அப்படித்தான் நினைப்பார்கள். அது ஒரு பொதுப்பாதை. அப்படியென்றால் தென்றலில் இந்த 'அன்புள்ள சிநேகிதியே' என்ற தனிப்பாதை தேவையாக இருக்காது.

இந்தப் பகுதியின் முக்கிய நோக்கம் 'referrals' அல்ல. மனித உறவுகளில் முரண்பாடு தெரியும்போது அதை 'positive angle'ல் சீர்தூக்கிப் பார்த்து, எங்கேயாவது செப்பனிட முடியுமா என்ற நப்பாசையுடன் ஆரம்பிக்கப்பட்ட பகுதி இது.

நான் எந்த கோணத்தில் 'அந்த சிநேகிதி யின்' பிரச்சினையைப் பார்த்தாலும், கண்டிப்பாகத் திருமதி ஜெ. அவர்கள் கூறியது போலச் செய்திருக்க மாட்டேன். நானே DCF-ல் பணியாற்றியிருக்கிறேன்.

பெண்கள் மேம்பாட்டுக் குழுக்கள் பல வற்றில் இருந்திருக்கிறேன். அந்த முறையைப் பின்பற்றியிருந்தால் உறவே முற்றிலும் அறுந்து போயிருக்கும். This case is different.

'Domestic abuse'ல் உழன்று கொண்டிருக்கிறாள் தன் அக்கா என்பது செவிவழி கேள்விப்பட்ட, இங்கே புதிதாக வந்திருக்கும் சிறிய தங்கையின் ஆதங்கம். ஆனால், இங்கே வந்து 25 வருடங்களாக வாழ்ந்து வரும் ஒரு பெண்ணிற்கு தான் கொடுமைப்படுத்தப்பட்டால், அதிலிருந்து வெளிவரத் தெரியாதா?

இங்கே இருக்கும் வழிமுறைகளில் அவருக்குத் தெரியாததையா நாம் சொல்லி கொடுக்கப்போகிறோம்?

பிறருக்குச் சொல்ல விரும்பாத ஏதோ ஒரு முக்கியப் பின்னணி, அழுத்தமான காரணம் இங்கே இருக்கிறது என்று நான் நினைத்தேன். Many a times no action is better than wrong/doubtful action.

அன்பாக, கனிவாக இருப்பவர்கள் பலபேர் உள்ளுக்குள் ஒரு அசாதாரண மனவலிமை, அழுத்தம் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்கள் பிரச்சினைகளைப் பிறருக்கு தெரியப்படுத்தாமல், வாழ்க்கையின் சவால்களைச் சந்தித்து, அவற்றையே வாழ்க்கைக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். மற்றவர் குறுக்கீட்டைத் தவிர்ப்பார்கள்.

என்னுடைய அனுபவத்தில், நிச்சயம் அந்தச் சகோதரியைச் சந்தித்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்தப் பகுதியை அந்தத் தங்கை இப்போது படித்தால் தென்றலுக்கு மீண்டும் எழுதும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com