தற்போது எத்துறைகளில் ஆரம்ப நிலை மூலதனம் இடப் படுகிறது? (பாகம் - 4)
இதுவரை:
பொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளதே, இப்பொது எந்தத் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம். அத்துறையைப் பற்றிய மேல் விவரங்களைக் காண்போம்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



மின்வலைக் கணினியின் உபதுறைகளைப் பற்றிக் கூற ஆரம்பித்தீர்கள். அது என்ன அவ்வளவு சிக்கலானதா?! இணையத்தில் சேவைக் கணினிகளைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டதே? மின்வலைக் கணினிக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?

நல்ல கேள்வி! மின்வலைக் கணினித் துறையின் அடிப்படை சாராம்சத்தை நன்றாக வெளிக் கொணர்ந்து விளக்கக் கூடியது.

##Caption## சட்டென்று ஒரு கோணத்தில் பார்த்தால் மின்வலைக் கணினி என்பது, இணையத்தில் பயன்படுத்தும் எந்தச் சேவையையும் குறிப்பதாகத் தோன்றலாம். அது ஒருவிதத்தில் சரியான கருத்துத்தான். ஏனெனில், சில மின்வலைக் கணினி சேவைகள் எளிதான இணைய தளங்கள்தான். ஆனால் அதுவே மின்வலைக் கணினித் துறையின் ஒட்டு மொத்தமாகாது. இணைய தளங்கள், மின்வலைக் கணினித் துறையின் எளிமையான ஆரம்ப நிலையைக் காட்டுகின்றன என்றே கூறலாம். இணைய தளங்களைத் தங்கள் சேவைக் கணினிகளில் வைத்து நடத்தும் சேவைகளை (web hosting services) அந்த ஆரம்ப நிலைக்கு அடிப்படையாக இருக்கும் அடுத்த மட்டம் என்று கூறலாம்.

ஆனால், வாழ்வின் பெரும்பாலான விஷயங்களைப் போல், இதுவும் உடனடியாகக் காணப்படும் எளிதான வெளித்தோற்றத்தை விட உட்புறம் பல மடங்கு விசேஷமான அம்சங்கள் உடையது! இந்த பல்வேறுஅம்சங்களையெல்லாம் மேற்படுத்தி ஒன்றாகக் கொணர்ந்து "வலைமேகக் கணினி" (cloud computing) என்ற எளிதான சொற்கோர்வையின் மூலம் சொல்லிவிடக் கூடிய முறைக்குக் கொணர்ந்த வணிக விற்பன்னருக்கு (marketing expert) பாராட்டுக்கள்! மின்வலையில் உள்ள கணினிகளைப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தும் துறைதானே, அது உண்மைதான்! ஆனால் அந்தப் பல்வேறு வகைகள் என்னென்ன என்று நாம் உணர வேண்டும். அந்த உபதுறைகளைப் பற்றிய இப்போது சற்று மேல்விவரமாகக் காண்போம்.

மின்வலைக் கணினித் துறைக்கு, பின்வரும் உபதுறைகள் உள்ளன எனலாம்:

  • மேலே கூறியது போல், இணையத் தளங்களுக்கான சேவைக் கணினிகளை தகவல் மையங்களில் வைத்து நடத்துவது, மிக அடிப்படையான மின்வலைக் கணினி. இணையம் 1995-இல் ஆரம்பித்தவுடனேயே இத்தகையக் இணையக் கணினி நடத்தும் (web hosting) சேவைகள் வந்துவிட்டன. எக்ஸோடஸ் (Exodus) நிறுவனம் ஞாபகம் உள்ளதா?!. இத்தகைய அடிப்படையான சேவைகள் இன்னும் உள்ளன. பொதுவாக இவற்றை வலைமேகக் கணினி என்று கூட இப்போது நினைத்துப் பார்ப்பதில்லை. அவற்றை எளிதான வகை மேகக் கணினி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இத்துறையில் இப்போது தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இல்லை, மூலதனப் பரபரப்பும் இல்லை.
  • ##Caption##
  • அடுத்த மட்டத்தில் மின்னஞ்சல் போன்ற எளிமையான பயன்பாட்டுச் சேவைகளைக் கூறலாம். இது வாசகர்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததுதானே. இப்போது ஐந்து வயதுக் குழந்தைக்கும் கூட மின்னஞ்சல் உள்ளது! மின்வலை அஞ்சலின் ஆதிகாலம் AOL.com. (என்ன, You've Got Mail திரைப்படம் கவனம் வருகிறதா?) உண்மையாக இணைய மின்னஞ்சல் ஹாட்மெயில் (HotMail) மூலமாக முதலில் பரவியது. தற்போதோ, ஃபேஸ்புக் (Facebook) போன்ற சமூகஊடகங்கள் மிகமிக ஜனரஞ்சகமாகி, எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அவற்றை அடிப்படையாக வைத்துள்ள பயன்பொருள் வசதிகள் (applications) பல்லாயிரக் கணக்காகிவிட்டன.
  • இவ்வரிசையில் அடுத்து வருவது சேல்ஸ்போர்ஸ்.காம் போன்ற முழு அளவிலான மென்பொருள் சேவைகள். இவ்வகையறாவில், வெபெக்ஸ் (WebEx) போன்ற மின்வலைக் கூட்ட மென்பொருட்களையும் சேர்க்கலாம் (web conferencing services). இப்போது கூகிள் டாக்ஸ் (Google Docs), மைக்ரோஸாஃப்ட் ஆஃபீஸ் லைவ் (Microsoft Office Live) போன்ற தனிப்பயனர் மென்பொருட்களும் சேவைகளாகப் பரிணமித்துள்ளன.
  • இன்னொரு சமீபகாலமாகப் பரபரப்பாக பேசப்படும் வகை, வலைச் சாதனங்களுக்குப் பதிலாக, சேவைகளைப் பயன்படுத்துவது. இது மின்னஞ்சலில் வரும் ஸ்பேம் (Spam) எனப்படும் குப்பைக் கடிதங்களையும் மற்ற அபாயகரமான தீய விஷயங்களையும் வடிகட்டி அனுப்புவதில் ஆரம்பித்தது. இப்போது, நிறுவனக் கிளைகளில் சாதனப் பெட்டிகளை வைத்து நடத்துவது மிக அதிகச் செலவாகிறது, தாமதங்களை ஏற்படுத்துகிறது என்பதால், அக்கிளைகளில் இருக்கக் கூடிய பாதுகாப்பு சாதனங்கள், மற்றும் தொலைத்தொடர்பு வலை வேகமாக்கல் (WAN accleration) போன்ற பலவற்றையும் சேவைகளாக்க ஆரம்பித்துள்ளார்கள்.
  • அக்கமாய் (Akamai) போன்ற தகவல் வினியோகச் சேவைகளையும் வலைக் கணினி என்றுதான் கூறவேண்டும். அவர்களும், வலைக் கணினிகளுக்கு உரித்தான பயன்பாட்டு சேவைகளுக்குத் தேவையான மேல்வசதிகளை அளிக்க ஆரம்பித்துள்ளனர். கூகிளின் யூ-ட்யூப் பிரிவை வலை ஊடகங்களுக்கும் தனிப்பயனர்களுக்குமான வினியோகச் சேவையாகக் கருதலாம்.
  • இவ்வரிசையில் இறுதியாக, கணினி அடிப்படைச் சேவை (Infrastructure as a Service - IaaS) மற்றும் மென்பொருள் மேடை சேவை (Platform as a Service - PaaS) இரண்டையும் குறிப்பிடலாம். இரண்டும் ஓரிரண்டு வருடங்களே ஆன பச்சிளம் குழந்தைகள்! IaaS-க்கு மிக சரியான உதாரணம், அமேஸான்.காம் நிறுவனத்தின் "அமேஸான் இணையச் சேவை" (Amazon Web Services) என்ற பெயரில் அளிக்கப்படுவது. PaaS-க்கு உதாரணமாக சேல்ஸ்போர்ஸ்.காம் நிறுவனத்தின் ஃபோர்ஸ்.காம் சேவையையும், மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய அஸ்ழூர் (Azure) சேவையையும் குறிப்பிடலாம். IaaS என்பது கணினிகளையும், சேமிப்பு வசதியையும் (Strorage) கேட்கும்போது கேட்கும் அளவுக்குப் பயனுக்குத் தருவது. PaaS என்பது IaaS-ஓடு சேர்த்து, சில பயன்பாட்டு கணினி இடைமுகங்களை (Application Programming Interfaces) சேர்த்து அதன் மேல் மென்பொருள் அமர்த்தும் வசதியளிப்பது.


அடுத்து, மேல்கூறியவற்றில் பெருமளவு வளர்ந்திருக்கும் மென்பொருள் சேவை அதாவது SaaS துறையைப் பற்றி முதலாவதாக விவரித்து விட்டு, மற்ற வலைக் கணினி உப துறைகளின் விவரங்களைக் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com