அமர்நாத் ஆலயம்
கரியாலி ஐ.ஏ.எஸ்.
தமிழில்:திருவைகாவூர் கோ.பிச்சை

பஞ்சதரணியிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையில் பனிப்பாறை ஓடைகள் குறுக்கிட்டன. பனிக்கட்டியில் சறுக்கியும், விழுந்தும், எழுந்தும் நடந்து எங்கள் இலக்கை நெருங்கினோம். குகைக்கு வெளியில் சிறு கொடிகள் தெரிந்தன. குதிரைகளும் அவற்றைப் பராமரிப்பவர்களும் ஒரு திறந்தவெளி மைதானத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். கூடாரத்தில் ஒருவர் சப்பாத்தியும் தேநீரும் விற்றுக் கொண்டிருந்தார்.

கோவிலில் நுழைவதற்கு முன் நதியருகில் உள்ள நீரூற்றில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். அது குளிரில் உறைந்திருந்ததால், ஜனங்கள் கொஞ்சம் தண்ணீரைத் தம்மீது தெளித்துக் கொண்டனர். அப்போது, அதிர்ச்சியூட்டும் ஒரு காட்சியைக் கண்டேன்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



ஓர் இளந்தம்பதியர் தங்கள் மூன்று வயதுக் குழந்தையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குதிரை அமர்த்திக்கொள்ள முடியாத, வழியில் உணவு வாங்கமுடியாத, கம்பளி கூட இல்லாத ஏழைகள். தங்கள் பைகளையும் படுக்கைகளையும் குழந்தையையும் தாமே சுமந்து வந்தனர். தங்க இடம் அமர்த்திக் கொள்ள முடியாதவர்கள். அந்த நடுங்கும் குளிரில் திறந்த வெளியில் படுத்து உறங்கினர். வழிநெடுகிலும் அவர்களுடைய தைரியம், விடாமுயற்சி, தெய்வ பக்தி இவைகளை நினைத்து வியந்து போனேன். அவர்களை சிற்றுண்டி, தேநீர் பருக அழைத்தோம். ஆனால் அமர்நாத்தில் பாபாவை தரிசிக்கும் வரையில் எதுவும் உட்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்டனர்.

கோவிலுக்குப் பக்கத்தில் சில சாதுக்கள்-சிலர் நிர்வாணமாக-அறையின் மாடங்களில் அமர்ந்திருந்தனர். சிலர் ஹடயோகியாக ஒற்றைக் காலில் நின்றபடி உறையும் குளிரில் தவம் செய்து கொண்டிருந்தனர். ஒருவர் நீண்ட அங்கியைப் போல உடல் முழுதும் சாம்பலைப் பூசிக் கொண்டிருந்தார். இன்னொருவர் கோவிலின் வெளித் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார். யாத்ரிகர்கள் அவரை வணங்கினர். அவர் மக்களுக்கு அருளாசி வழங்கினார். அவர் கருணையும் தெய்வாம்சமும் உடையவராக இருந்தார்.

##Caption##அங்கிருந்து சில அடி தூரத்தில் கோவில் இருந்தது. பனிலிங்கத்தைச் சுற்றிக் கம்பிக்கிராதி போடப்பட்டிருந்தது. அதிலிருந்த சிறு கதவைத் திறந்து கொண்டு ஒருவர் உள்ளே சென்று பனிலிங்கத்தைத் தொடலாம். அதன்முன் அர்ச்சகர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவர் நானும் என் நண்பர்களும் உள்ளே போகவிட்டார். உறைந்த பனிலிங்கத்தை மெதுவாகத் தொட்டேன். இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான அந்தத் தெய்வத் திருவுருவைத் தொட்டேன் என்பதை உணர்ந்தேன். அந்த கணத்திலேயே எனது யாத்திரையின் நோக்கம் நிறைவு பெற்றதை உணர்ந்தேன். புறாக்கள் தென்படுகின்றனவா என்று பார்த்தேன். அவை கண்ணில் படவில்லை.

நாங்கள் சென்ற அந்த ஆண்டில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட யாத்ரிகர்கள் வந்து சென்றிருந்தனர். இந்திய ராணுவமும் அரசும் யாத்ரீகர்ளுக்குப் பாதுகாப்பு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தன. அதே சமயம் பல தர்ம சிந்தனையாளர்கள் உணவுக்கும் இதர பொருள்களுக்கும் வேண்டிய ஏற்பாடுகளை யாத்ரிகர்களுக்குச் செய்திருந்தனர்.

அமர்நாத் செல்ல இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று பாரம்பரியமான பஹல்காம் கந்தன்வாடி, சேஷநாக், மற்றும் பஞ்சதரணி வழியாகச் செல்வது. இதன் வழியாகத்தான் நாங்கள் மேலே சென்றோம். இது நீண்ட பாதை. ஆனால் மிகச் செங்குத்தானதல்ல. மற்றொரு பாதை ஆடுகள் செல்லும் பாதை. அது சன்மார்க்கிலிருந்து நேராக பால்டால் வழியாக அமர்நாத் செல்கிறது. இது மிகவும் செங்குத்தானது. இந்தப் பாதையில் வாலிபர்களும் பலவான்களும் மட்டுமே செல்ல முடியும். அத்துடன் இந்தப் பாதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் வசீகரமான சன்மார்க் பகுதியைக் கடந்து செல்கிறது. ஆகவே நாங்கள் இந்த வழியாகத் திரும்ப முடிவு செய்தோம்.

ஆனால் இந்தப் பாதையில் இறங்குவது அவ்வளவு எளிதாக இல்லை. செங்குத்தான பாதையில் குதிரைமேல் வந்த டாக்டர் நேத்ராவிற்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. அதனால் அவர் குதிரையிலிருந்து இறங்கிப் பாதையின் பெரும்பகுதி தூரம் நடந்தே வந்தார். எங்கள் கால்கள் மிகவும் தள்ளாடியதால் அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பாதையில், களைத்துப் போயிருந்த ஓர் இளைஞனைச் சந்தித்தேன். அந்த உயரத்தில், குளிரில், ஒரு வெள்ளைப் பருத்தி பைஜாமா மட்டுமே அவன் அணிந்திருந்தான். அவன் முகத்தில் பக்திப்பரவசம் மிளிர்ந்தது.

அவன் ராமேஸ்வரம், பூரி ஜகந்நாத், துவாரகா, பத்ரி-கேதார் எல்லாம் சென்று வந்து விட்டதாகவும், கங்கோத்ரி வரை சென்று வந்ததையும் சொன்னான். அவனுடைய இறுதி லட்சிய பூமி அமர்நாத் புனிதத்தலம். இந்த இளம் வயதில் இவ்வளவு தீவிரமான ஆன்மீக உணர்வு கொண்ட ஒருவரை அதற்குமுன் நான் கண்டதில்லை. அவன் “சகோதரி சற்று இருங்கள். நான் கங்கோத்ரியிலும் யமுனோத்ரியிலும் இருந்து கொண்டு வந்துள்ள புனித நீரைக் கொடுக்க விரும்புகிறேன்” என்றான். பொன்னான இந்தப் புனித நீரை எனக்கு வழங்கும்படி அவன் உள்ளத்தை உருகச் செய்தது எது? இது கடவுளின் கருணா என்று எடுத்துக் கொண்டேன்.

##Caption## சூரியன் மேற்குத் திசையில் இறங்கும் நேரத்தில், சன்மார்கிற்கு உயரே ஒன்பது கி.மீ. தூரத்தில் உள்ள பால்டால் சென்றடைந்தோம். இது குதிரைக்காரர்களின் ஊர். அவர்கள் குஜ்ஜார் என்ற மலைவாழ் மக்கள். அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்புகிறார்கள். இந்த முஸ்லீம் சகோதரர்கள் இல்லாமல் போனால் பெரும்பாலானவர்களுக்கு யாத்திரை சாத்தியப்படாமல் போயிருக்கும். அவர்களுக்கு வேலை கிடைப்பது குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான். வருஷம் முழுவதும் இந்த வருமானத்தைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தியாக வேண்டும். பால்டாலுக்கும் சன்மார்க்குக்கும் இடையில் உள்ள சாலை கார்கள் செல்ல வசதியானது. வாடகைக் கார் கிடைக்கும். நாங்கள் அங்கு செல்வதற்கு முதல்நாள் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. ராணுவ முகாமிலிருந்து ஒரு வண்டி சன்மார்க் செல்வதாக அறிந்து அங்குச் சென்றோம். ஆனால், அந்த நேரத்தில் முகாமில் வண்டிகள் இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் மீண்டும் தற்காலிக வாடகைக் கார்கள் நிற்குமிடம் நோக்கிச் சென்றோம்.

எங்களுக்கு இப்போது மூன்று வழிகள்: திரும்பவும் குஜ்ஜார் கிராமத்துக்குப் போய் குதிரையில் அழைத்துச் செல்லும்படி அவர்களைக் கேட்க வேண்டும். அல்லது திரும்ப ராணுவ முகாம் சென்று இரவில் தங்க இடமளிக்குமாறு கோர வேண்டும். அல்லது மீதி உள்ள ஒன்பது கி.மீ. தூரத்தை நடந்தே சென்று சன்மார்க் போக வேண்டும். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும்போது எங்கிருந்தோ ஒரு ராணுவ வண்டி வந்தது. டிரைவர் வண்டியை நிறுத்தி எங்களை ஏற்றிச் சென்றார்.

டிரைவரும் பாதுகாப்பாளரும் கூர்க்கா இனத்தைச் சேர்ந்தவர்கள். சன்மார்கிலுள்ள காஷ்மீர் அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான அழகிய குடில்களில் எங்களை இறக்கி விட்டனர். நாங்கள் கொடுத்த நூறு ரூபாயை அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அவர்களை எண்ணி நான் கர்வம் கொள்கிறேன். நாட்டில் ஒவ்வொருவரும் இதுபோல் நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் இருந்து விட்டால் இந்தியா ஓர் உன்னதமான நாடாகிவிட முடியும்.

(தொடரும்)

கரியாலி ஐ.ஏ.எஸ்.
தமிழில்:திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com