திடீர் டோக்ளா
தேவையான பொருட்கள்
இட்லி அல்லது தோசை மாவு - 2 கிண்ணம்
சலித்த கடலை மாவு - 1 கிண்ணம்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 மேசைக்கரண்டி
ஈனோ ஃப்ரூட் சால்ட் - 1/2 மேசைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க
பெருங்காயத் தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் (அலங்கரிக்க) - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
இட்லிமாவில் கடலை மாவு, இஞ்சி-பூண்டு-மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீரில் ஈனோ பழ உப்பைக் கரைத்து மாவில் நன்றாகக் கலந்து உடனே அகலமான பாத்திரத்தில் விட்டு ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டு போடவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, துண்டு செய்த டோக்ளாக்களைப் போட்டு லேசாகப் பிரட்டி எடுக்கவும். தேங்காய்த் துருவல் பச்சைக் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். தக்காளி சாஸ் போட்டு சாப்பிடத் தொடங்கினால் நிறுத்தவே முடியாது.

ஜயலக்ஷ்மி கணேசன்,
ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com