எஸ். ராஜம்
இசை, ஓவியம், நடிப்பு, புகைப்படம் என கலையின் சகல பிரிவுகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் எஸ். ராஜம் ஜனவரி 29, 2010 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

இவர் சிறந்த பாடகர். முதல் கச்சேரி 13 வயதில் காஞ்சி மஹாப் பெரியவரின் முன் நிகழ்ந்தது. தொடர்ந்து பல கச்சேரிகளிலும், ராதா கல்யாணம், சீதா, மீனாட்சி கல்யாணம் போன்ற இசைப் பேருரை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினார். சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற ராஜம், கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். ஆனாலும், மேற்கத்திய பாணி ஓவியங்களை விட இந்திய பாணி ஓவியங்கள் வரைவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். ஹவாயில் உள்ள சுப்ரமண்யர் ஆலயத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. இவரது ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ஹவாய் சுவாமிகள், ராஜம் வரைந்த பல ஓவியங்களை வரவழைத்து அங்கே பாதுகாத்து வைத்தார்.

திரைப்படத் துறையிலும் ராஜம் ஆர்வம் கொண்டிருந்தார். 1933ல் வெளியான 'சீதா கல்யாணம்' என்ற படத்தில் ராமராக நடித்த ராஜம், 'சிவகவி' படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் நடித்தார். ஓரிரு படங்களுக்குப் பின் நடிக்க வந்த வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு இசை மற்றும் ஓவியத்திலேயே தன் கவனத்தைச் செலுத்தினார்.

சென்னை அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகாலம் நிகழ்ச்சி மேற்பார்வையாளராக, தயாரிப்பாளராகப் பணியாற்றினார். சங்கீத கலா ஆச்சார்யா, சங்கீத நாடக அகாடமி விருது, இசைக்கடல், நாதக்கனல் என்பது உட்படப் பல கௌரவங்களைப் பெற்றிருக்கும் ராஜம், அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் செய்திருக்கிறார். இந்தப் பன்முக மேதையின் மரணம் இந்தியக் கலை உலகின் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

அரவிந்த்

© TamilOnline.com