தற்போது எத்துறைகளில் ஆரம்ப நிலை மூலதனம் இடப் படுகிறது? (பாகம் - 3)
இதுவரை:

பொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளதே, இப்பொது எந்தத் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதியில், ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலோடு சேர்ந்து ஓடாமல், அவரவர் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். அதை மனத்தில் வைத்துக் கொண்டு, இனி வரும் இந்தப் பகுதியில் ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று காண்போம்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanபல துறைகளைப் பற்றி மேலாகக் கூறினீர்கள். நான் மென்பொருள் துறையில் உள்ளேன். சுத்த சக்தி எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. பழகிய துறையில் நிறுவனம் ஆரம்பிக்குமாறும் நீங்கள் எச்சரித்தீர்கள் அல்லவா? அதனால் மின்வலைக் கணினியைப் பற்றி முதலில் விவரிக்க முடியுமா?

##Caption## சரி, நீங்கள் கேட்டுக்கொண்டபடி, மென்பொருள் துறையைச் சார்ந்த மின்வலைக் கணினி (cloud computing) பற்றியே முதலில் விவரம் காண்போம். சுத்த சக்தியைப் பற்றி வேறு இதழ்களில் முன்பு விவரித்திருப்பதனாலும், மின்வலைக் கணினிக்கும் மெய்நிகராக்க நுட்பத்துக்கும் சமீபகாலமாக வலுப்பட்டுள்ள தொடர்பைப் பற்றி முன்பு அவ்வளவாக விவரிக்கவில்லை என்பதாலும், மின்வலைக் கணினித் துறையைப் பற்றி முதலில் மேற்கொண்டு அலசுவது சரிதான்.

முன்பு ஒருமுறை, 2007-ஆம் ஆண்டின் வாய்ப்புக்களைப் பற்றி எழுதும்போது, தகவல் மைய மெய்நிகராக்க நுட்பத்தைப் பற்றி (data center virtualization technology) அறிமுகப்படுத்தியிருந்தேன். ஆனால் அச்சமயம் சேவை மென்பொருள் துறை (Software as a Service - SaaS) வளர்ந்திருந்தாலும், மின்வலைக் கணினி என்ற பரந்த துறை இன்னும் வெகுவாகப் புழக்கத்தில் வரவில்லை. ஆனால் தற்போது இத்துறையைப் பற்றி மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் "மின்வலைக் கணினி" என்றால் என்ன என்பதே மிகவும் குழப்பத்தில் உள்ளது. இத்துறையின் பல்வேறு பட்ட அம்சங்களையும், ஏன் மூலதனத்தார் பரபரப்படைந்துள்ளனர் என்றும் இப்போது காணலாம்.

மின்வலைக் கணினித் துறையின் மேல் தற்போதைய பரபரப்புக்கு, சில தொழில்நுட்ப முன்னேற்றங்களும் சில வணிகப் போக்குக்களும் (business trends) கூடி வந்ததே முக்கிய காரணம். அத்தகைய நுட்பங்கள் மற்றும் போக்குகளில் முக்கியமானவை பின்வருமாறு:

மிக முக்கிய வணிக ரீதியான காரணம்: பயனர் நிறுவனங்கள், மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்தவும் தற்போது தயாராகியுள்ளதுதான். சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் இதில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சில நிறுவனங்கள் கூகிள் தரும் மின்வலை மென்பொருள் வசதிகளை மைக்ரோஸாஃப்ட் மென்பொருட்களுக்கு பதிலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மின்னஞ்சலில் வரும் ஸ்பேம் (spam) மற்றும் தீயமென்பொருள் (malware) தாக்குதலைத் தடுக்க மென்பொருள் சேவையே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு பயன்படுத்தும் வழக்கம் அதிகரிக்க அதிகரிக்க மென்பொருள் சேவைகளின் அனுகூலத்தை நிறுவனங்கள் மேலும் உணர்ந்து, இன்னும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இத்தகைய வரவேற்பினால், வலைக் கணினி வணிக ரீதியில் வேகமாக வளர ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என்கிற கணிப்பில் முதலீட்டார் பரபரப்படைந்துள்ளனர்.

முன்பு தயங்கிய நிறுவனங்கள் ஏன் இப்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர், முன்பு சரிப்பட்டு வராத கணினிப் பயன்கள் இப்போது எப்படிப் பயன்படுத்த முடிகிறது என்பதற்குப் பல தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

  • பயனர் கணிக்க விழையும் ஒவ்வொரு முறையும் சேவைக் கணினிக்குப் (server) போய் வரும் தாமதம் இல்லாமல், பயனரின் சொந்தக் கணினியிலேயே உடனடியாகக் கணிக்க உதவும் AJAX, AIR போன்ற நுட்பங்களைப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளது (Google Maps போல்)
  • சராசரி மின்வலைத் தொடர்பு நொடிக்குப் பல மெகாபிட்களை அனுப்பும் அளவு சக்தி அதிகரித்திருப்பது
  • தொலை வலைக் கணிப்புத் தாமதங்களை வெகுவாகக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் பரவலாக வந்துள்ளன (wide area network - WAN optimization)
  • சேவைக் கணினிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாலும், அவற்றின் மின்சாரத் தேவைகளும் குறைக்கப்பட்டு வருவதாலும், ஆயிரக் கணக்கான சேவைக் கணினிகளை ஒரே தகவல் மையத்தில் வைத்து வலைக் கணினியாகத் தர முடிகிறது.
  • ஒரு தகவல் மையத்துக்குள் கணினிகளை பல்வேறு பயன்பாட்டு மென்பொருட்களுக்குப் பயன்படுத்தும் மெய் நிகராக்கம் மற்றும் தயாராக்கும் (provisioning) நுட்பங்கள் பொது நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும், சேவைக் கணினிகள் மட்டுமல்லாமல், சேமிப்புச் சாதனம், சேமிப்பு வலை (SAN), மற்றும் உள்ளக வலை (LAN) போன்ற மற்ற தகவல் மையச் சாதனங்களுக்கும் மெய்நிகராக்க நுட்பங்கள் பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன.
  • ##Caption##
  • பல கணினிகளை ஒரு தகவல் மையத்துக்குள்ளும், மேலும் ஒரே வலைக்கணினி மென்பொருள் சேவையைப் பல தகவல் மையங்களை பல்வேறு இடங்களில் வைத்தும், பயனர் நிறுவனங்களுக்குப் பல மின்வலைப் பிணைப்புக்கள் வைத்தும், சேவைத் தடையாகாமல் (no service interruptions), பலமான சேவை நிலை ஒப்பந்தங்கள் தரக் கூடிய தரம் கிடைத்துள்ளதால், நம்பகமாகப் பயன்படுத்தலாம் என்ற தைரியம் அதிகரித்துள்ளது.
  • மின்வலை மற்றும் தகவல் பாதுகாப்பு நுட்பங்கள் பல பயன்பாட்டு நிலைக்கு உயர்ந்து பயத்தைக் குறைத்து நம்பிக்கையூட்டியுள்ளன.
  • விளம்பர வருமானத்தை அடிப்படையாக வைத்துத் தரப்படும் கட்டணமில்லாத சேவைகள் அதிகமாகக் கிடைப்பதால் மின்வலைக் கணினிச் சேவைகளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகியுள்ளது. அதனால், கட்டணமுள்ள சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஆட்சேபங்களும் குறைந்துள்ளன.


மேற்கொண்ட காரணங்களால், பயனர் நிறுவனங்கள் (enterprises), www.salesforce.com போன்ற பயன்பாட்டு மென்பொருள் சேவைகள் மட்டுமல்லாமல் அமேஸான், ரேக்ஸ்பேஸ் (Rackspace) போன்ற நிறுவனங்களின் வலைக் கணினிச் சேவைகளையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அது மட்டுமல்லாமல் அந்நிறுவனங்களின் சொந்தத் தகவல் மையங்களையும் வலைக் கணினித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தங்கள் செலவைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதனால், சேவைகள் மட்டுமல்லாமல் அவற்றைச் சார்ந்த சாதனங்களையும் நுட்பங்களையும் விற்கும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்பு இருக்கலாம் என்று மூலதனத்தார் எதிர்பார்க்கிறார்கள்.

அடுத்து வரும் பகுதிகளில், வலைக் கணினித் துறையின் உபதுறைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி இன்னும் விவரமாகக் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com