இருதய மருத்துவம் ஒரு கண்ணோட்டம்
சமீபத்தில் அட்லாண்டாவில் நடைபெற்ற அமெரிக்க இருதய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பங்குபெற்றேன். உலகெங்கிலும் இருந்து சுமார் முப்பதாயிரம் மருத்துவர்கள் பங்குகொண்ட இந்த மாநாட்டில், பல இந்திய மருத்துவர்கள் இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்தும் துபாய் போன்ற அராபிய நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். இருதய நோய் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. அவற்றில் பெரும் பாலான ஆய்வுகளில் இந்தியப் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. மாநாட்டில் அலசப்பட்ட முக்கியத் தகவல்களில் வாசகர்களுக்குப் பயன்படும் சிலவற்றை இங்கே தருகிறேன்.

மாரடைப்பு நோய் - தவிர்ப்பு முறை:

தற்காலத்தில் மருத்துவக் கண்ணோட்டம் புதிய ஆய்வு முடிவுகளின்படி மாறி வருவது அனைவரும் அறிந்ததே. இதை ஆதாரம் சார்ந்த மருந்து (Evidence Based Medicine) என்று சொல்வதுண்டு. மாரடைப்பு நோயை முற்றிலும் தவிர்க்க வைடமின் மாத்திரைகள் உதவுமா என்று பெரிய ஆய்வொன்று நடந்தது. 'Homocysteine' என்று சொல்லப் படும் ஒரு வகை அமிலச்சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு நோய் வரலாம். Folate supplements எனப்படும் வைடமின் மாத்திரைகள் மூலம் homocysteine-இன் அளவைக் குறைக்கமுடியுமா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்தும் நோயாளிகள் பங்குகொண்ட இந்த ஆய்வு, குறிப்பிட்ட வைடமின் மாத்திரைகள் மூலம் மாரடைப்பு நோய் வருவதைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்த்திற்று.

வளர்சிதை நோய்க்குறிகள் (Metabolic syndrome):

இதை எப்படித் தவிர்ப்பது என்ற கேள்வியை இந்திய மருத்துவராகிய Dr. C.S. இராம் (டால்லஸ், டெக்ஸஸ்) விவாதித்தார். 'Metabolic Syndrome' நோயின் அறிகுறிகள் தெற்காசிய மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இந்த நோய் பற்றிய விவரங்களை தென்றல் (ஏப்ரல், 2004) இதழில் காணலாம். சுருக்கமாக இதன் அறிகுறிகள்:

உடல் பருமன். குறிப்பாக பருத்த மேல்பகுதி அல்லது சிறிய தொப்பை
பாதிக்கப்பட்ட குளூகோஸ் தாங்குதிறன் (Impaired Glucose Tolerance)
அசாதாரணக் கொழுப்பு நிலவரம் (abnormal lipid profile)
உயர் இரத்த அழுத்தம் (High BP)

இந்த அறிகுறிகளுக்கான வரையறைகளை நிர்ணயிக்கும் பொழுது, தெற்காசிய மக்களுக்கு கவனம் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. BMI என்று சொல்லப்படும் Body Mass Index எண் சாதாரண அமெரிக்கர்களுக்கு 25 என்றும் அதற்கு மேலே சென்றால் பத்து என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற் காசியர்களுக்கு, குறிப்பாக இந்திய, சீன மக்களுக்கு, இந்த எண் 23 ஆகக் குறைக்கப் பட்டுள்ளதை நாம் அறியவேண்டும்.

உடல் எடைக் குறியெண் (Body Mass Index) கிலோவிலான உடல் எடையை, மீட்டரிலான உயரத்தின் இருபடியால் வகுக்கக் கிடைக்கும். (Weight in Kg divided by the Square of Height in meters). இந்தக் குறியெண் இருபத்தி மூன்றுக்கு அதிக மானால் நீங்கள் கவனம் செலுத்த ஆரம் பிக்க வேண்டும். இருபத்தி எட்டைத் தாண்டினால் பருத்த உடலமைப்பு (Obesity) என்று அர்த்தம்.

அதேபோல வெறும் வயிற்றில் இரத்தத்தின் சர்க்கரை அளவைச் சோதனை செய்யும் போது நூற்றுக்கு அதிகமானாலே நீங்கள் கவனம் செலுத்தத் தருணம் வந்துவிட்டது. நூற்றி இருபதைத் தாண்டினால் நீரிழிவு நோயின் ஆரம்பம் என்று அர்த்தம். இரத்த அழுத்தம் (பாய்ச்சும் நிலை அல்லது systolic) 130-ஐத் தாண்டினால் கவனம் செலுத்த வேண்டும்; 140-ஐத் தாண்டினால் மாத்திரை ஆரம்பிக்க வேண்டியிருக்கலாம்.

இந்தியர்களின் எண்ணிக்கை மிகுந்து வரும் இந்தக் காலகட்டத்தில் சர்வதேச மருத்துவ அரங்குகளில் குறிப்பாக, இந்தியரின் பொது நல மருத்துவம் விவாதிக்கப்பட்டது பெருமைப்பட வைத்தது.

மாரடைப்புக்கு மருத்துவம்:

இருதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் விளைவே மாரடைப்பு நோய். கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். தண்ணீர்க் குழாய்களைச் சுத்தம் செய்வதுபோல், இந்த அடைப்பை நீக்கும் முயற்சியே 'Angioplasty' என்னும் முறை. 'Crestor' என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்ததில், அடைபட்ட இரத்தக் குழாய்களில் அடைப்புக் குறைவதை ஆய்வின் மூலம் இந்த மாநாட்டில் விளக்கினர். மாநாடு நடந்த மறுநாள், அமெரிக்க செய்தித்தாள் பலவற்றில் இந்த ஆய்வின் முடிவு விவாதிக்கப்பட்டது. மருத்துவ வரலாற்றில் இரத்தக் குழாய் அடைப்பை மருந்தின் மூலம் நீக்குவது இதுவே முதல்முறை. மேலும் விவரங்களுக்கு www.acc.org என்ற வலைத் தளத்தை அணுகவும்.

இது போன்ற மருத்துவ ஆய்வுகளில் ஆசியர்கள் பங்கு கொண்டாலே, மருத்துவமுறை வளர்ச்சியடையும். உங்கள் மருத்துவரோ அல்லது மருத்துவமனையோ ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தால், உங்களால் முடிந்தவரை பங்கு கொள்ளுங்கள். பங்கு பெறும் நோயாளிகளுக்குச் சன்மானமோ அல்லது இலவச மருத்துவமோ வழங்கப்படும். சென்ற இதழில் குறிப்பிட்டபடி பெண்களுக்கு மாரடைப்பு நோய் அதிகம் தாக்குவதால் பெண்களும் ஆய்வுகளில் பங்குகொள்வது முக்கியமானது.

ஒரு மருந்தோ அல்லது குறிப்பிட்ட வைத்திய முறையோ செய்தித் தாள்கள் மற்றும் ஊடகங்களில் பெருமளவு விவாதிக்கப்பட்டால், அதைப் பற்றிய கருத்துக்ளை வலைதளம் மூலம் அறிந்து கொள்ளுங்கள். சில வேளைகளில், நீங்களே அதைப்பற்றிய விவாதத்தை ஆரம்பிக்க வேண்டி வரலாம். மருத்துவர்கள் குறைந்த நேரமே நோயாளியிடம் செலவிடும் இந்தக் காலகட்டத்தில், முன்கூட்டியே செய்திகளை அறிந்து கொள்வது நல்லது. உடனடியாக மருந்துகளை மாற்றாமல், மேலும் விவரங்களுக்கு காத்திருப்பது நல்லது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com