பக்குவத்துக்கேற்ற வாக்குவாதம்!

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



அன்புள்ள சிநேகிதியே

நான் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். ஆனால் வேலையில்லாமல் 'சார்ந்தவர் வீசா'வில் (Dependent Visa) தங்கியிருக்கிறேன். என் கணவருக்கு H1 இருக்கிறது. நாங்கள் அமெரிக்கா வந்து 18 மாதங்கள் ஆகிறது. இன்னும் 2-3 வருடங்களுக்கு அவருக்கு வேலை ஒப்பந்தம் இருக்கிறது. நான் திருமணம் ஆனவுடனேயே இவருடன் வந்து விட்டேன். எங்களுடையது arranged cum love திருமணம் என்று சொல்லலாம். என் அக்காவுக்கு இந்தத் திருமணத்தில் அதிகம் விருப்பமில்லை. எதற்கு அமெரிக்கா என்று அலைகிறாய். இந்தியாவிலேயே நல்ல மாப்பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். அவனிடம் என்னதைக் கண்டு மயங்கிப் போய் இருக்கிறாய் என்று என்னை மூளைச் சலவை செய்யப் பார்த்தார். நான் மசியவில்லை. அக்காவிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் கிளம்பி வந்துவிட்டேன்.

இங்கே வந்த பிறகுதான் எனக்கு உண்மை நிலை புரிய ஆரம்பித்தது. முதல் மூன்று மாதம் ஜாலியாக இருந்தோம். அப்புறம் அவர் வேலை கொஞ்சம் ஆட்டம் கொள்ள ஆரம்பித்தது. ஆகவே, செலவுகளைக் குறைக்க ஆரம்பித்தார். காலையில் 7 மணிக்குப் போனால், இரவு 9-10 ஆகி விடுகிறது. எவ்வளவு நேரம்தான் ஆன்லைனில் தோழிகளுடன் சாட் செய்வது? கோடைக்காலத்தில் நடந்து விட்டாவது வருவேன். இந்தப் பனியில் அதுவும் முடியவில்லை.

##Caption##நாங்கள் இருக்கும் பகுதியில் நம் மொழி பேசுபவர்கள் அதிகம் இல்லை. நான் யாரிடமும் எளிதில் பழக மாட்டேன். ஏதேனும் புதிதாக சமையல் செய்து நேரத்தைப் போக்கலாம் என்று நினைத்தால், யார் சாப்பிடுவது? இரண்டாவது புதுப்புது செய்முறை என்றால், செலவு அதிகரிக்கும் என்று சொல்லிவிட்டார். பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டேன்.

அவர் களைப்பாக ஆபிஸிலிருந்து வரும்போது வீட்டிலேயே இருக்கும் நான், ஏன் என்று கேட்டால், அதற்கு வள்ளென்று விழுவார். சண்டை முற்றும். எனக்குக் கோபம் வந்தால், சூடாக ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்து விடுவேன். இப்போதெல்லாம் நாங்கள் இரண்டு வார்த்தை பேசினால், ஏதோ சண்டையில்தான் முடிகிறது. என் நிலைமையை நான் யாரிடமும் மனம் திறந்து பேசமாட்டேன். கொஞ்சம் அக்காவுடன் ஒட்டுதல் இருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. இவ்வளவு படித்துவிட்டு இப்படி வீட்டில் அடைந்து கிடக்கிறேனே என்று சுய இரக்கம் வேறு. எதைச் செய்ய வேண்டுமானாலும், எங்கே போக வேண்டுமானாலும் பணம் வேண்டியிருக்கிறது.

இரண்டு மாதம் முன்பு பொறுக்க மாட்டாமல் தேம்பி அழுது கொண்டிருந்தேன். இவர் பார்த்துவிட்டுச் சமாதானப்படுத்தினார். அப்புறம் வெளியில் போய் மால் சுற்றிப் பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு வந்தோம். மனம் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. ஆனால் மறுபடியும் இரண்டு நாட்களில் தகராறு வந்துவிட்டது. அப்புறம் மூன்று நாள்வரை பேசிக் கொள்ளவில்லை. 'I was miserable.' அந்தச் சமயத்தில்தான் அவர் போன் செய்து, "இந்தியாவில் ஒரு வேலைக்கான வாய்ப்பு வந்திருக்கிறது. போய் விடலாமா?" என்று கேட்டார். இங்கே வந்து எம்.எஸ். பண்ண வேண்டும்; வேலை பார்த்து BMW வாங்க வேண்டும் என்றெல்லாம் கனவு கொண்டிருந்த எனக்கு இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றாகி விட்டது.

அடுத்த மாதம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று ஒரு வாரமாக நான் எடுத்த முடிவு சரியா என்ற குழப்பம் வந்து விட்டது. இந்தியாவுக்குப் போனாலும் அப்படி யாரும் எங்கள் வருகைக்காகக் காத்துக் கிடக்கவில்லை. என் கணவருக்கு அப்பா இல்லை. அம்மா மற்ற பிள்ளையோடு ஒன்றியிருக்கிறார். என் அப்பா ரிடையர் ஆகி கிராமத்தில் தங்கிவிட்டார். இங்கேயாவது நாங்கள் சண்டை போட்டால் கேட்பார் யாருமில்லை. அங்கே எங்களுக்கு இருக்கும் சச்சரவெல்லாம் வெளியில் தெரிய வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இன்னும் 2 வருடம் காத்திருந்து இங்கேயே கிரீன் கார்ட் வாங்கியிருந்தால், நல்ல எதிர்காலம் இருந்திருக்குமோ? எங்களுக்குள் உள்ள இடைவெளி பெரிதாகி விவாகரத்தில் கொண்டு போய்விடுமோ என்றெல்லாம் யோசிக்கிறேன். நாங்கள் கிளம்புவது நல்லதா இல்லையா என்று சொல்லுங்கள். எந்த தைரியத்திலோ என் மனப் பாரத்தைக் கொட்டி விட்டேன். இனி நீங்கள்தான் வழி சொல்ல வேண்டும்.

இப்படிக்கு
................

##Caption## அன்புள்ள சிநேகிதியே:

இந்தியா திரும்புவது என்று தீர்மானம் ஆகி, நீங்கள் இங்கிருந்து வெளியேறும் கட்டத்தில் என்னிடம் "நல்லதா, இல்லையா?" என்று கேட்டால் நான் என்ன சொல்ல வேண்டும் என்று யோசிக்கிறேன்.

எந்த நிலையிலும் தனிமையைப் போல ஒரு உணர்வு வந்தாலே வாழ்க்கையில் வெறுப்பு வந்து விடும். இந்தியாவில் என்ன இருக்கிறதோ, இல்லையோ தனிமை இருக்காது. நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சோர்வு மனநிலையிலிருந்து வெளியே வந்து விடலாம்.

வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. கணவரை நம்பி இருக்க வேண்டாம், கைச்செலவுக்கு.

முக்கியமாக உங்களுக்குள் இருக்கும் தர்க்கம், சச்சரவு எல்லாமே குறையும். ஆனால் ஒட்டு மொத்தமாகப் போகாது. "இடைவெளி" பெரிதாகாது. நிச்சயம் நம்புங்கள். விவாகரத்து வரை போகாது. ஆனால் சண்டை என்று ஏதாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வயது ஆக ஆக, மனப்பக்குவம் வர வர, வாக்குவாதத்தின் மையப்பொருள் மாறிக்கொண்டு வரும். நான் ஜோசியம் சொல்லவில்லை. நீங்கள் கொடுத்த விவரத்தின் அடிப்படையில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com