போடுங்கம்மா ஓட்ஸு!
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கிண்ணம்
புளித்தமோர் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2 (அல்லது) மோர் மிளகாய் 5
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு ஓட்ஸ் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாம் எண்ணெயில் தாளிக்கவும். தண்ணீர் 1/2 கிண்ணம் சேர்த்து, உப்புப் போட்டு கொதி வரும்போது புளித்த மோரில் வறுத்த ஓட்ஸைப் போட்டுக் கரைத்து, அதை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கிளறி, சேர்ந்து வந்ததும் இறக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் கலவையைக் கொட்டிச் சமப்படுத்தி மேலாக 1 தேக்கரண்டி நல்லெண்ணெயை விட்டுத் தடவி வில்லைகளாகப் போட்டுச் சாப்பிடலாம். இது அதிகம் நீர் தாங்காது என்பதால் 2 தேக்கரண்டி அரிசிமாவு சேர்த்துக் கரைத்தும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com