நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி

நவம்பர் 14, 2009 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம், குழந்தைகள் தின விழா மற்றும் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. தலைவர் திருமதி. வித்யா கல்யாணராமன் வரவேற்புரை வழங்கினார்.

மழலைகளின் மாறுவேடக் காட்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 2 முதல் 5 வயதிலான சிறார்கள் இதில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள். மரங்களைக் காப்போம் என்ற வேண்டுகோளுடன் மரமாக வந்த வைசாலி, குடுகுடுப்பைக்காரர், நவநாகரிகக் குறத்தி, திருஞான சம்பந்தர் போன்ற வேடங்களில் மழலைகள் மேடையை அலங்கரித்தனர். குறிப்பாக 'பட்டு மாமி கிட்டு மாமா'வாக வந்த அனன்யாவும் ரிஷி கிருஷ்ணனும் கைதட்டலை அள்ளினர்.

திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கான விதிமுறைகளைத் திருமதி மலர் செந்தில் விளக்கினார். திருமதி பூங்கோதை கோவிந்தராஜ் வரவேற்றுப் பேசினார். திருமதி உமா நெல்லையப்பன், திரு நித்தி பாலன் மற்றும் திரு கதிரவன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடுவர்களாகப் பணி புரிந்தனர். இந்தப் போட்டியில் 5 முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

தொடர்ந்து, 'NETS திறமைத் தேடல்' நிகழ்ச்சி சிறுவன் அதுல்வாசனின் 'அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே' பாடலுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் வாய்ப்பாட்டு, பரதம், குச்சுப்புடி, வாத்ய இசை, மேற்கத்திய நடனம் எனப் பல திறமைகளையும் சிறுவர்கள் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக மதுரையின் வட்டாரப் பேச்சை அழகு குறையாமல் வழங்கிய அமிர்தா மற்றும் கீர்த்தனா கிருஷ்ண குமார் பலத்த கைதட்டல் பெற்றார்கள். 'செந்தூரப் பூவே' பாடலைப் பாடிய சப்னா அனைவரையும் தேனிசைக் குரலால் 'ஒன்ஸ் மோர்' கேட்க வைத்தார். சித்தாந்த் தன்ராஜின் மேஜிக் ஷோ சிறுவர்களை வியக்க வைத்தது.

இறுதியாக, திரு ராஜ் வேல் முருகனின் நன்றியுரை, திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, நிகழ்ச்சியில் பங்கு பெற்றோருக்கு நினைவுப் பரிசளிப்பு ஆகியவை இடம்பெற்றன.

பூங்கோதை கோவிந்தராஜ்,
பாஸ்டன், மசாசூட்ஸ்

© TamilOnline.com