ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி

டிசம்பர் 17, 2009 அன்று சென்னை மைலாப்பூர் ஆர்.கே. சுவாமி கலை அரங்கத்தில் சிகாகோவைச் சேர்ந்த ஷோபனா கோபாலகிருஷ்ணனின் நாட்டிய நிகழ்ச்சி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா தலைமையில் நடந்தது. ஷோபனா, சிகாகோவின் நாட்டியா டேன்ஸ் தியேட்டரின் குரு ஹேமா ராஜகோபாலனின் மாணவி.

கம்பீர நாட்டையில் தொடங்கிய மல்லாரி, ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த 'கஜவதனா'வில் வீறுநடை போட்டது. ராகமாலிகையில் அமைந்த 'ஆட்கொள்ள வேண்டும்' என்ற வர்ணம் மிக நேர்த்தியாக இருந்தது. மிருதங்கச் சக்கரவர்த்தி திரு ஜி.விஜயராகவன் படைத்த அந்தப் பாடல் ஆண்டாள், நாராயணரின் மேல் வைத்த பக்தியை நன்றாகப் பிரதிபலித்தது. தொடர்ந்த புரந்தரதாஸரின் 'சிக்கவனே' என்ற பாடலுக்கு, ஷோபனாவின் அபிநயம் அருமை. கல்யாணி ராகத்தில் அமைந்த 'ஏங்காணும் வர வர' என்ற பதம், சுப்ரமணிய சுவாமியின் லீலைகளை அழகாக விவரித்தது. குரு ஹேமாவின் படைப்பான தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இசையரசர் பாலமுரளி கிருஷ்ணா நிகழ்ச்சியை இறுதிவரை இருந்து ரசித்ததுடன், நடராஜர் சிலையையும் ஷோபனாவிற்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அபிநய வித்தகி கலாநிதி நாராயணன், பிரியதர்ஷினி கோவிந்த் மற்றும் பிரஹா பெஸ்ஸல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்ச்சியை கௌரவித்தனர். மாணவியின் நாட்டியத் திறமை அழகாக வெளிக்கொண்டு வந்த குரு ஹேமாவின் உழைப்பைப் பாராட்டியே ஆகவேண்டும்.

ஜோலியட் ரகு

© TamilOnline.com