மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை

ஜனவரி 23, 2010 அன்று கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் கானசரஸ்வதி குழுவினரால் தியாகராஜ ஆராதனையும் இதர வாக்கேயகாரர்கள் விழாவும் கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமருக்கும், தியாகராஜருக்கும் காலையில் கோவில் குருக்கள் சாஸ்திரி அவர்கள் தீபாராதனை காட்ட, கிருஷ்ணா சம்பத் வரவேற்புரை வழங்க, இசை ஆசிரியர்களும் சீடர்களும் தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளைப் பாடி ஆராதனை விழாவைத் தொடங்கினர். சக்தி சுந்தர் (பேஸ் கிளாரினட்), ஸ்ரீனிவாசன் (கஞ்சிரா), சுந்தர் (டம்போரின்) வாத்திய இசை முதலில் வந்தது. கானசரஸ்வதி, கல்யாணி சதானந்தம், கல்யாணி வீரராகவன், சுபா நாராயணன், பத்மாகுட்டி, சங்கரி செந்தில்குமார், இந்து நாகு, கீதா பென்னட், வசந்தா பட்சு, பாபு பரமேஸ்வரன், சுப்ரமணியம் ஆகிய ஆசிரியர்களோடு அவரவர் சிஷ்யர்களும் பங்கேற்று தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், மைசூர் வாசுதேவாச்சார்யார், பாரதியார், மற்றும் பிற சாகித்ய கர்த்தாக்களின் பாடல்களைப் பாடினர். பாபு பரமேஸ்வரன் சிஷ்யர்கள் கீ-போர்டும், வசந்தாபட்சு வீணையும், கானசரஸ்வதி சிஷ்யர் புல்லாங்குழலும், கீதா ராகவன் வீணையும் வாசித்த பக்கம் அருமை. வாத்ய விருந்து செவிக்கு அரிய விருந்து.

பாபு பரமேஸ்வரன், சங்கீதா, மயூரி வாசன், சுபா நாராயணன், இந்து, ரம்யா, சந்தியா ரசிகப் பெருமக்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றனர். கானசரஸ்வதி தன் மகள் சங்கீதாவுடன் சக்ரவாக ராகத்தில் "சமயம் சமயம் இதுதான் சமயம்" பாடலைக் கேட்டு சபையோர் மெய்மறந்தனர். ஸ்ரீநிவாசன், நீலகண்ட குண்டப்பா, ராஜேஷ் ராவ், ஹரிஷ் (மிருதங்கம்); ஸ்ரீனிவாசன், நீலகண்டா (கடம்); சத்ய சுந்தர் (டேம்போரின்) வாசித்து நிகழ்ச்சியைச் சோபிக்கச் செய்தனர். கோவில் சார்பில் இசை ஆசிரியர்களும், கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

அருண் சங்கரநாராயணன் நன்றி உரை கூற, மங்களத்துடன் இசைவிழா நிறைவெய்தியது.

கோவில் அறிக்கை

© TamilOnline.com