பிப்ரவரி 2010: வாசகர் கடிதம்
தென்றல் இந்தியாவில் வெளிவரும் தமிழ் வார, மாத இதழ்களிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்கத் தூய தமிழில் வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இதழின் ஒவ்வொரு பகுதியும் அருமை. சமையல், மருத்துவம், அறிவுக்கு குறுக்கெழுத்துப் புதிர், நேர்காணல், ஹரிமொழி, சித்ரா வைத்தீஸ்வரனின் ஆதரவான அறிவுரை, இளந்தென்றல், சிறுகதை, நடந்தவை, நிகழ்ச்சி அறிவிப்புகள் மற்றும் சினிமா என்று குடும்பத்தின் எல்லா வயதினரும் படிக்க உகந்ததாக உள்ளது.

அயல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிடுவது தென்றலின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. தென்றல் மேலும் வளர வாழ்த்துக்கள்.

ராதா ராமஸ்வாமி,
சன்னிவேல், கலிபோர்னியா

*****


டிசம்பர் 2009 தென்றலில் வெளியான திரு. சாம் கண்ணப்பன் அவர்களுடனான நேர்காணல் மிக நன்று. தமது ஆத்மார்த்தமான பொதுநலச் சேவை மூலம், வட அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்துக்கு, பெருமை சேர்த்து வருபவர் சாம் கண்ணப்பன்.

இந்தியா உலகிற்கு அளித்த மாபெரும் கொடைகளுள் ஒருவர் வீரத்துறவி விவேகானந்தர். பெயரை உச்சரிக்கும்போதே தோற்றத்தை நினைவில் கொண்டு வரும்போதே, நம்முள்ளே புத்துணர்ச்சியையும், விவேகத்தையும் வளர்த்து வரும் விவேகானந்தரின் மணியன் செல்வத்தின் கைவண்ணத்தில் உருவான உயிரோவியம் தாங்கிய 2010 இளைஞர் சிறப்பிதழ் மிக அருமை. விவேகானந்தர் குறிப்பிட்ட இளைஞர்களுள் ஒருவராக நான் அபிமானிக்கும் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, 'ஏழைகளுக்காக நெஞ்சின் ரத்தத்தைச் சிந்துகிறவர் எவரோ அவரை நான் மகாத்மா என்பேன்' என்று விவேகானந்தர் குறிப்பிட்ட மாமனிதர்களுள் ஒருவரான அக்ஷயா கிருஷ்ணன் போன்றோரின் நேர்காணலை வெளியிட்டும், என்றைக்கும் நம்மை மேன்மைப்படுத்தும் விவேகானந்தரின் பொன்மொழிகளை பக்கத்துக்குப் பக்கம் வெளியிட்டும் 'இளைஞர் சிறப்பிதழை' மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கும் தென்றல் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

*****


தென்றலின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் 91 வயதில் காலமான என் அன்னை கடைசிவரை கண்ணில் எந்தக் குறையுமின்றி பத்திரிகைகள் படிப்பதில் மிக்க ஆர்வமாக இருந்தவர். போன வருடம் அவரைப் பார்க்க இந்தியா சென்றிருந்த போது, சில தென்றல் இதழ்களை படிக்க எடுத்துச் சென்றிருந்தேன். படித்துவிட்டு அவர் கூறிய வார்த்தைகள்: - பத்திரிகையில் அரசியல், ஆன்மீகம், இலக்கியம், உலகநடப்பு, சினிமா, சிறுவர் பகுதி, சமையல், எண்புதிர், நேர்காணல் யாவும் படிக்க அலுப்புத் தட்டாமல் விறுவிறுப்புடன் உள்ளது. நகைச்சுவை சேர்த்து எழுதப்பட்டால் பத்திரிகை பிரபலமடையும் என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் உண்மையாகி விட்டன.

கடந்த செப்டம்பர் மாத இதழிலிருந்து நகைச்சுவைத் துணுக்குகள் வர ஆரம்பித்து விட்டது. 'இசையுதிர் காலம்' சங்கீதப் பிரியர்களுக்குப் படித்து ரசிக்கச் சுவையாக உள்ளது. ஜனவரி மாத இதழில் பக்கங்கள் அதிகரித்துள்ளன. வாழ்க தென்றல் குழுவினர்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com