தெரியுமா?: இசையுதிர் காலம்: இசையே மருந்து
அவர் மிகப் பெரிய ஜமீன்தார். ஆனாலுக்கு அவருக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை. உடல்நலம் மட்டுமல்ல; மனநிலையும் சரியில்லாமல் போய் விட்டது. அடிக்கடி ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருப்பதும், எதுவும் பேசாமல், உண்ணாமல், உறங்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதும் வழக்கமாகிப் போய் விட்டது.

பிரபல மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். சிகிச்சை அளித்தார்கள். குணமாகவில்லை. இந்நிலையில்தான் ஜெர்மனியிலிருந்து ஒரு மருத்துவர் வந்திருக்கிறார் என்றும், அவர் இதுபோன்ற வியாதிகளைக் குணப்படுத்துவதில் தேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. ஜமீன்தாரின் மகன் அந்த மருத்துவரை வரவழைத்தார். மருத்துவர் வந்து பார்த்துச் சில சிகிச்சைகளைச் செய்தார். இறுதியில் "இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்தக் கூடியதல்ல. இந்நோய்க்கு இசைதான் சிறந்த சிகிச்சை. தேர்ந்த ஒரு இசைக்கலைஞர் தினந்தோறும் சுமார் ஒருமணி நேரமாவது மாலை நேரங்களில் அவரருகே அமர்ந்து இசைக்கருவியை வாசிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் இவருடைய சித்த பிரமை குணமாகலாம்" என்று கூறினார்.

ஜமீன்தாரின் மகன் தன் குடும்பத்தினரிடம் ஆலோசனை செய்து பின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைச் சந்தித்து, தினந்தோறும் தன் இல்லத்துக்கு வந்து இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

ஜமீன்தாரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்த இசைக் கலைஞரும் சம்மதித்தார். சங்கீத சிகிச்சை தொடங்கி ஒருவாரம் ஆனது. ஜமீன்தாரின் உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார். புன்னகைத்தார். உணவு உட்கொள்ள ஆரம்பித்தார். ஜமீந்தாரின் மகனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மருத்துவருக்கோ தனது சிகிச்சை பலிப்பதைக் கண்டு ஆனந்தம். அந்த இசைக்கலைஞரை மேலும் சில மணி நேரங்கள் ஒதுக்கி நல்ல பல ராகங்களை இசைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

29 நாட்கள் முடிந்தன. முப்பதாம் நாள். இசைக் கலைஞரால் குறித்த நேரத்திற்கு வர இயலவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது.

அதுவரை படுத்த படுக்கையாக இருந்த ஜமீந்தார் எழுந்தார். மகனை அழைத்தார். "என்ன ஆச்சு, தினமும் வந்து கச்சேரி செய்வாரே, அவர் ஏன் வரவில்லை? உடனடியாக அவரை அழைத்து வாருங்கள். சீக்கிரம்!" என்று கட்டளையிட்டார்.

ஜமீன்தாருக்குப் பூரண குணமாகி விட்டதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. இசைக் கலைஞரை உடனடியாக அழைத்து வந்து அவருக்குப் பலவித மரியாதைகள் செய்தனர். கனகாபிஷேகம் செய்ததுடன் ஜமீன்தார் மற்றும் இசைக்கலைஞரின் பெயர்கள் பொறித்த நவரத்தினத் தோடா, செப்புப் பட்டயம் ஆகியவை செய்து கலைஞருக்கு அணிவித்தனர்.

இறுதிவரை அதைத் தம் வசம் வைத்திருந்த அந்த இசைக் கலைஞர் தமது உடல்நிலை சரியில்லாத போது அதை வேறு ஒரு வித்வானிடம் அளித்து ஆசிர்வதித்தார். இன்றுவரை அது, அந்த வித்வானின் குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது சரி, யார் அந்த இசைக் கலைஞர் என்கிறீர்களா?

செப்புப் பட்டயமும் தோடாவும் பெற்றவர் பிரபல வயலின் வித்வான் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை. அவரிடம் ஆசிர்வாதமாக அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாதசுர வித்வான்களான திருவீழிமலை சகோதரர்கள்.

© TamilOnline.com