தெரியுமா?: இசையுதிர் காலம்: சின்ன பையன், பெரிய வேலை
அது 1941ம் ஆண்டு. அவனுக்கு 11 வயது இருக்கும். தியாகராஜ ஆராதனைக்குத் திருவையாறுக்கு அவனும் சென்றிருந்தான். அப்போதெல்லாம் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் என்று தனியாகப் பாடும் வழக்கமில்லை. தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகளை வித்வான்கள் ஒருவர் மாற்றி ஒருவர் இடைவெளி இல்லாமல் பாடிக் கொண்டிருப்பர். அந்தச் சிறுவன் முத்தையா பாகவதரின் மடிமீது அமர்ந்து அதை வேடிக்கை கொண்டிருந்தான். தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

வித்வான் ஒருவர் பாடி முடித்ததும் முத்தையா பாகவதர் தன் மடிமீது அமர்ந்திருந்த சிறுவனை "பாடு... பாடு" என்று உற்சாகப்படுத்தினார். சிறுவனும் கொஞ்சமும் தயங்காமல் பாடத் தொடங்கினான். அதுவரை முதிர்ந்த குரல்களையே கேட்டுக் கொண்டிருந்த அவையினருக்கு இனிய, இளமையான குரலைக் கேட்டதும் ஒரே மகிழ்ச்சி. ஆனந்தம். ஆஜானுபாகுவான முத்தையா பாகவதர் மடிமீது சிறுவன் அமர்ந்திருந்ததால் யாருக்கும் முதலில் யார் பாடுகிறார் என்பதே தெரியவில்லை. பெரிய பெரிய ஜாம்பவான்கள் சபையில் அமர்ந்திருந்தனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை அந்தச் சிறுவன். சபைக் கூச்சம், பயம் எதுவும் இல்லாமல் ஸ்வர சுத்தமாக, அற்புதமாக தியாகராஜ கீர்த்தனையைப் பாடி முடித்தான். பாடி முடித்ததும் சபையில் ஒரே ஆரவாரம், கரகோஷம்.

"இது மாதிரி யாரும் பாடி நான் கேட்டதில்லை!" என்று சொன்ன பெங்களூர் நாகரத்தினம்மாள் "நாளைக் காலை நான் பாட வேண்டிய நேரத்திலும் இவனே பாடட்டும்" என்று சொன்னார்.

மறுநாள் காலை ஏழுமணி. பெரிய பெரிய இசைக் கலைஞர்கள் பாடக் காத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் அந்தச் சிறுவன் பாடினான். அரைமணி நேரம் அவன் பாடி முடித்ததும் ஒரே ஆரவாரம். கரகோஷம். மீண்டும் பாடு என்று குரல்கள். அடுத்துப் பாட வேண்டிய அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் சிறுவனின் ஸ்வர நேர்த்தியில் அசந்து போய், "என் நேரத்தையும் இவனே பாடட்டும்" என்று கூறிவிட்டு, மற்ற வித்வான்களோடு அமர்ந்து ரசிக்க ஆரம்பித்தார். அந்த அரைமணி நேரம் கடந்தது. அப்போதும் சபையினரின் உற்சாக ஆரவாரம் குறையவில்லை. சிறுவனைத் தொடர்ந்து பாடக் கூறினர். அடுத்துப் பாட வேண்டிய மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், "பையன் அற்புதமாகப் பாடுகிறான். எனது நேரத்திலும் இவனே பாடட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை" என்று கூறிவிட்டுக் கச்சேரியை ரசிக்க ஆரம்பித்தார்.

காலை ஏழுமணிக்குத் தொடங்கிய கச்சேரி ஒன்பது மணி ஆன பின்னும் நீடித்தது. அதுவரை இல்லாத சாதனையாக ஒரு இளம் வித்வானின் கச்சேரி தொடர்ந்து நடந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. மறுநாள் நாளிதழ்கள் அந்தச் சிறுவனின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுப் பாராட்டியிருந்தன. பிரபல வித்வான்களும் அவன் சிறுவன்தானே என்று உதாசீனப்படுத்தாமல் அவனை மனமுவந்து வாழ்த்தியிருந்தனர்.

அன்றைய அந்தச் சிறுவன் யார்?

சங்கீத சாகரம் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா தான் அது.

© TamilOnline.com