வாருங்கள், தவம் செய்வோம்
இவ்வுலகில் யாரும் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் தனித்தே இருந்தாலும். தனிமையை வெறுமை என்போர் பலர். கொடுமை என்போர் பலர். இனிமை என்போர் சிலர். என்னைப் பொருத்தவரை தனிமை என்பது ஒரு வரம். அந்தத் தனிமை அமைதியுடன் கை கோர்த்துக் கொண்டால் அது பெருவரம். தனிமையைக் கொண்டாட இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த வானொலிப் பேட்டி, கேபிள் டி.வி., தொலைபேசி, அலைபேசி... இவை தவிர வெளியில் நடந்து செல்பவர்களின் உரையாடல்கள், கடந்து செல்லும் வாகனம், பக்கத்து வீட்டில் மிக்ஸியோ, கிரைண்டரோ ஓடும் சத்தம், எதிர் வீட்டுச் சண்டை, அருகில் கட்டிட வேலையின் சலசலப்பு, எங்கோ ரயில் போய்க் கொண்டிருக்கும் சத்தம், வானவூர்தியின் இரைச்சல், தூரத்தில் ஒலிக்கும் பாட்டு.... இப்படி எதுவுமே ஒருவனைத் தனிமையில் விடுவதில்லை. பொதுவாக எல்லோருக்குமே இது பழகிவிட்டது.

அமைதியாய் இருக்கும் வீட்டில் கடிகாரச் சத்தத்தைக் கூட ஒருவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. என்னைக் கொல்வதற்காக யாரோ வீட்டில் டைம்பாம் வைத்திருக்கிறார்கள் என்று வீட்டை விட்டு வெளியே ஓடி வருகிறான் ஒருவன். இன்னொருவனோ சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காற்றாடி கூட தனக்கு எரிச்சல் மூட்டுவதாகவும், தன் காதுகளுக்கு பேரிரைச்சலாகக் கேட்பதாகவும் கூறுகிறான்.

குருவின் அறிவுரைப்படி தியானம் செய்ய அமர்ந்தவர்களில் ஒருவன், சில நொடிகளிலேயே கண்களைத் திறந்து இந்த இருளும் அமைதியும் தனக்கு வித்தியாசமான உணர்வாக இருப்பதாகவும், அதில் தொலைந்து போய்விடுவேனோ என்று பயமாய் இருப்பதாகவும் பதறுகிறான். நேரிலோ அல்லது திரைப்படங்களிலோ சண்டை, சச்சரவு, துப்பாக்கியின் இரைச்சல், வெடிச்சத்தம் இவற்றையெல்லாம் கேட்டோ, பார்த்தோ பழகிப்போன நமக்கு அமைதியை அமைதியாக அனுபவிக்கத் தெரியவில்லை. அதனால் தனிமையும் அமைதியும் ஒருவனுக்கு இஷ்டப்பட்டதாய் இல்லை.

##Caption## இன்றைக்குள்ள நவயுகச் சாதனங்கள் அனைத்தும் ஒருவனது அமைதிக்கு உலை வைத்துக் கொண்டிருக்கின்றன. தனிமையை ஒருவன் கொண்டாட வேண்டுமென்றால் முதலில் அவன் அமைதியை அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அமைதியாய் உட்கார்ந்து நாம் கடந்தகால நினைவுகளை அசைபோட முடியவில்லை. மறுநாள் விடியலுக்குப் பின் நிகழ்வுகள் ஓரளவிற்கு இப்படி இருக்கலாமென்று அனுமானிக்க நம்மால் முடியவில்லை. இப்போதைய தருணங்களும் நமக்கு இனிமையாய் இல்லை. தனித்திரு, விழித்திரு, பசித்திரு... என்ற வள்ளலாரின் கூற்று நமக்கு உரைக்கவில்லை.

இது மட்டுமா? நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை ஆராதனை செய்ய மறந்தே போனோம். அதிகாலை நம்மை எழுப்பும் பறவைகளின் சங்கீத மொழியை நம்மால் ரசிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ சில இடங்களில் பறவைகளே இல்லை. துள்ளித் துள்ளி ஓடும் அணிலின் அழகைக் காணப் பிடிக்கவில்லை. காற்றுக்கு இயைந்து அழகாய் ஆடும் செடி, கொடி, மரங்களைக் காண மனமில்லை. பூ நமக்கு மணக்கவில்லை. சூரிய ஒளி நம்மைச் சுடவில்லை. நிலவைக் கண்டு மயங்கவில்லை. மழையின் மகிமை நமக்குப் புரியவில்லை. வானவில்லின் வண்ணங்கள் பிரமிப்பூட்டவில்லை. நீலவானமும், பஞ்சு மூட்டை மேகங்களும் சிறப்பானதாய் நமக்குத் தெரியவில்லை. இப்படியே இருந்தோம் என்றால் விளைவு விபரீதம்தான். சற்றே ஓய்வு கொடுப்போம். நவயுகச் சாதனங்களுக்கு. பாமரனாய், பரம ஏழையாய்... இவ்வுலகில் திரிவோம். இன்றைய உலகில் தனிமை கிடைப்பது என்பது ஒரு வரம்! அதை அனுபவிப்பது தவம்! வாருங்கள், அனைவரும் தவம் செய்வோம்.

சஞ்சு,
ஹூஸ்டன்

© TamilOnline.com