பா. வீரராகவன் கவிதைகள்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajanகவிஞர் பா. வீரராகவன் மிக எளிய சொற்களில், செவியில் இனிக்கும் நல்ல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை 1970களின் தொடக்கத்தில் ஆரம்பித்தவர்களில் ஒருவர். 2009ஆம் ஆண்டுக்கான 'கவிமாமணி' விருதினை அவர் பாரதி கலைக் கழகத்திடமிருந்து பெற்றுள்ளார். இக்கவிதைகள் அண்மையில் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்ட 'விதை வனமாகும்' என்ற அவரது தொகுப்பு நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இங்கே காணப்படும் கவிதைகள் எல்லாம் முழுமையானவை அல்ல, சில பகுதிகள் மட்டுமே.

நான்...

விழித்துக் கொண்டே இருப்பதனால்
விடியலும் இரவும் ஒன்றுதான்

உழைத்துக் கொண்டே இருப்பதனால்
வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான்

விழைந்த வாழ்க்கை வேள்விதனில்
நோன்பும் நோவும் ஒன்றுதான்

கழித்துக் கூட்டிப் பார்க்கிறேன்
கவிதையும் நானும் ஒன்றுதான்.

*****


ஏன்?

ஒருநாள் விடிந்து முடியும் வரையில்
எத்தனை போராட்டம்?
ஒரு சாண் வயிற்றின் உணவுக்காக
எத்தனை ஆர்ப்பாட்டம்?
ஓடும் வாழ்க்கை வண்டிப் பாதையில்
எங்கும் பள்ளங்கள், இதில்
உயர்வோம் உயர்வோம் என்றே நம்பும்
ஊமை உள்ளங்கள்.

இவர் வாழ்வில் விடிவெங்கே?
இத் தாழ்வின் முடிவெங்கே?
எனக்கே தெரியவில்லை - அட
நமக்கே புரியவில்லை.

தனக்கென வாழினும் தவறுகள் இல்லை
பிறனை அழிக்கலையேல்
பிறர்க்கென வாழினும் பெருமைகள் இல்லை
தன்னிலை உணரலையேல்
நம்மை நாமே உணர்ந்திட வேண்டும்
நாமே நமக்கு எல்லாம்
நம்மை நாமே உணர்த்திட என்றும்
அதுவே நல்ல வழி

வாழ்வில் துயர் ஏது? அது
வரினும் பயம் ஏது?
எனக்கேன் தெரியவில்லை? அட
நமக்கேன் புரியவில்லை?

*****


ஏணிப்படிகள்

நாளைய காலம் நாடகக் காலம்
வேதனைக் காலம், வேகக் காலம்
குறைந்த பொய்யை, 'சத்தியம்' என்னும்
ஜோடனைக் காலம், சோதனைக் காலம்
உன்னையும் என்னையும் உரசிப் பார்த்து
உதவாதென்று ஒதுக்கும் காலம்.

ஏணிப்படிகள் இறக்கவும் செய்யும்
ஏனிப்படி? என ஏங்கவும் செய்யும்
எப்பதம் ஆயினும் எழுந்திட பொலிந்திட
ஏக்கம் அடங்கிட ஏளனம் மாறிட
இக்கணம் தொட்டு இயங்கத் தொடங்குவோம்
இக்கணம் சத்தியம் இக்களம் நித்தியம்.

*****


பா. வீரராகவன்

© TamilOnline.com