விடியல்
சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



"குட்மார்னிங் அம்மா" டி.வி.யில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மா சுந்தரியைக் கூப்பிட்டபடி மாடியிலிருந்து இறங்கினார் டாக்டர் ஜெகன்.

"மார்னிங் மட்டும் சொல்லுடா, அதில் குட் இல்ல போடா!" அலுத்துக் கொண்டாள் சுந்தரி

"ஏம்மா, என்னமா நா உனக்கு குறை வச்சிருக்கேன். கலிஃபோர்னியாவுல சொகுசான பங்களாவில மகன், மருமகள், பேத்தியோட இருக்கிற. வெளில போக, வர சொகுசான கார். நேற்றுகூட லிவர்மோர் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு வந்த. உன் மருகமளும், பேத்தியும் உன்கூட வந்தாங்க. அப்புறம் என்னம்மா?"

"என்ன இருந்து என்னப்பா, நான் ஊர்லேர்ந்து வந்த அன்னிக்கு ஏர்போர்ட்லேர்ந்து அழைச்சிட்டு வந்து வீட்ல விட்ட. அதுக்குப்புறம் இன்னைக்குத்தான் உன்னைப் பாக்கறேன். உங்கிட்ட பேசறேன். மருமகள் என்னடான்னா, எப்போ பார்த்தாலும் படிக்கிறேன் படிக்கிறேங்கிறா. அப்படி என்னதான் படிக்கிறாளோ, எங்க போனாலும் பேத்திய வேற கூட அழைச்சிக்கிட்டுப் போய்டறீங்க, வரும்போதுதான் அழைச்சிட்டு வர்றீங்க. அப்புறம் நா இங்க தனியா இருந்து என்னதான் செய்யுறது?"

##Caption##"என்னம்மா பண்றது. நாங்க இரண்டு பேரும் டாக்டர். அவ வேலையும் பார்த்துகிட்டே மேல படிக்குறா. நீ இருக்குற மூணு மாசம் குழந்தைய ஸ்கூல்ல விடலன்னா, நீ ஊருக்குப் போனப்புறம் யார் பார்த்துப்பா. அவளும் ஸ்கூலுக்குப் போக அடம்பிடிப்பா. எங்களுக்கு வேற வழியில்ல அம்மா. என் நண்பனின் அம்மாவும் ஊரிலிருந்து வந்த்கிருக்காங்க. அவங்கள் உனக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன். அவங்க கூட தினம் வாக்கிங் போய்ட்டு வாங்க, எல்லாம் சரியாகிடும்."

"சரி அதவிடு, மதியம் சாப்பிட என்ன செய்ய? தனியா இருக்கிற எனக்கு இந்த சமையல்தான் துணை."

ஒருவழியாக அம்மாவை சமாதானம் செய்து விட்டாலும் ஜெகனுக்குத் தன் எதிர்காலத்தை நினைத்தால் இருளாகத்தான் இருந்தது. வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும் 'ஜியா'வைக் காதலித்து, அம்மாவின் சம்மதத்துடன் ஊரறியத் திருமணம் செய்து கொண்டான்.

"ஏய் ஜெகன், என்னடா சமைக்க, சப்பாத்தியா... இல்ல, நம்ம ஊரு சாப்பாடா?"

"சரிம்மா, நம்ம ஊரு சாப்பாடே செய்மா."

கூடிய சீக்கிரம் சப்பாத்திக்கு நிரந்தர விடை கொடுக்கப் போவது அம்மாவுக்குத் தெரிந்தால்... ஆம்! ஜெகனும், ஜியாவும் விவாகரத்து செய்யப் போகிறார்கள். பாவம் அம்மா. இந்தத் தனிமையை நினைத்துப் புலம்புகிறார்கள். நான் இனிமேல் என்றுமே தனிமைதான் என்பது தெரிந்தால்... நானும் ஜியாவும் பேசிக் கொள்வதே லேப்டாப் மூலம்தான் என்பது தெரிந்தால்...

எப்படியோ இருவரும் அம்மாவுக்குத் தெரியாமல் சமாளித்து விட்டார்கள்.

கலிஃபோர்னியா குளிரும், தனிமையும் மூன்றே மாதத்தில் சுந்தரியை ஊருக்குத் துரத்தின. இருக்கும் சூழ்நிலையில் அம்மாவை வைத்துக்கொள்ள விரும்பாமல் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அம்மா ஊருக்குச் சென்ற சில நாட்களில் ஜெகனும் ஜியாவும் மும்பைக்குக் கிளம்பினார்கள். ஜியாவின் பெற்றோர் முன்னிலையில் தாங்கள் பிரியப் போவதைத் தெரிவித்துத் தீர்வு காணத்தான் அந்தப் பயணம்.

ஜெகன், ஜியா, அவர்கள் மகள் லியா மூவரும் மும்பை 'தாஜ் ஹோட்ட'லில் தங்கினார்கள். லியாவை யார் வைத்துக் கொள்வது, எப்படிப் படிக்க வைப்பது என்பதையெல்லாம் இரவு முழுக்கப் பேசி முடிவெடுத்தார்கள்.

அன்று இரவு. ஊரே உறங்கிய நேரம். அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது வெடிச்சத்தம். ஹோட்டல் உள்ளே ஒரே பரபரப்பு. என்ன நடக்கிறது என்றே யாருக்கும் புரியவில்லை.

##Caption## "கதவைத் திறக்க வேண்டாம். விளக்கை அணைத்து விட்டு, கட்டிலுக்கு அடியில் படுங்கள்" என்று செல்ஃபோனில் ஒரு செய்தி மட்டும் வந்தது. ஒருநாள் பொழுது முழுக்க முழுக்க அப்படியே தவிப்புடன் கழிந்தது. மறுநாள். மெல்ல மெல்ல கதவைத் திறந்து வெளியே தலையை நீட்டிய ஜெகனுக்கு அப்போதுதான் நிலைமை புரிந்தது. ரத்த வெள்ளத்தில் மனிதர்கள். எங்கும் ஒரே அழுகுரல். எல்லாம் தீவிரவாதிகளின் வேலை என்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரிய வந்தது.

ஜெகனும் ஜியாவும் டாக்டர்கள் என்பதால் உடனடியாகக் களத்தில் இறங்கினர். தங்களால் முடிந்தவரை காயம் பட்டவர்களுக்கு முதலுதவி செய்தனர். சில உயிர்கள் பிழைப்பதற்கு உதவியாக இருந்தனர். தம்மையும், தங்கள் பிரச்சனைகளையும் முற்றிலும் மறந்து தாங்கள் படித்த டாக்டர் தொழிலுக்கு உயிர் கொடுத்தனர். அவர்கள் சமயத்தில் செய்த உதவியை எத்தனையோ நெஞ்சங்கள் வாழ்த்தின. ஒருவரோடு ஒருவர் இணைந்து, நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டால் எத்தனையோ உயிர்களை, எவ்வளவோ இக்கட்டுகளிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை அன்று அந்த இரு உள்ளங்களும் புரிந்து கொண்டன. தீவிரவாதிகளின் வன்முறைச் செயல் அவர்கள் ஈகோவை அழித்தது.

இனி இணைந்தே வாழ்க்கை நடத்துவது என்ற முடிவுடன் குற்றாலத்தில் உள்ள தாயாரைப் பார்க்கக் கிளம்பினர் அனைவரும். புது வருடத்தில் புது மனிதர்களாய் வரப்போகும் புது உறவுடன் அந்தக் குடும்பம் புதிய விடியலை நோக்கிப் பயணித்தது.

கலா ஞானசம்பந்தம்,
கலிபோர்னியா

© TamilOnline.com