முயலும் முனிவரும்
ஒரு காட்டுல ஒரு முனிவர் தனது சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் சிறு முயல் ஒன்று முனிவரைத் தஞ்சமடைந்தது. அது பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. அதைப் பரிவோடு பார்த்த முனிவர், முயலை அன்போடு தடவிக் கொடுத்தார். பின்னர் ஆசிரமத்திலேயே நன்கு வளர்த்தார். சில நாட்கள் கழித்துத் தல யாத்திரை போகும்போது முயலைத் தன் சீடர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார். சீடர்களின் அன்பான பராமரிப்பில் உண்டு கொழுத்த முயல் ஆசிரமத் தோட்டத்தில் தாவி ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.

ஒருநாள் அந்த முயலை ஒரு வேட்டை நாய் பார்த்து விட்டது. அதைக் கொல்லப் பாய்ந்தோடி வந்தது. அஞ்சி நடுங்கிய முயல் சீடர்களிடம் ஓடியது. அதைப் பார்த்த சீடர்களில் ஒருவர், 'வேட்டை நாயைப் பார்த்துத்தானே இந்த முயல் அஞ்சுகிறது. இதையே வேட்டை நாயாக மாற்றி விட்டால் அதற்கு பயப்படாது அல்லவா?' என்று நினைத்தார். உடனே தன் தவ ஆற்றலால் முயலை வேட்டை நாயாக மாற்றி விட்டார். துரத்திய நாயும் பயந்து ஓடிவிட்டது.

வேட்டை நாயாக மாறிய முயலுக்கோ பெருமை பிடிபடவில்லை. தோட்டத்தை விட்டு வெளியே சென்று சுற்றுவதும், அங்குள்ள சிறுசிறு மிருகங்களை விரட்டுவதும் அதன் பொழுது போக்கானது. அவை தன்னைக் கண்டு பயந்து ஓடுவதைக் கண்டு வேட்டை நாய்க்கு ஒரே பெருமை.

இப்படியே சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் இந்த வேட்டை நாயைப் புலி ஒன்று பார்த்து விட்டது. மிகுந்த பசியோடு இருந்த அது உடனே கோபத்துடன் வேட்டை நாய்மீது பாய்ந்தது. நாய் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிச் சீடர்களைத் தஞ்சமடைந்தது. புலியைக் கண்டு பயந்து ஓடி வந்திருப்பதை அறிந்த சீடர், தன் தவ ஆற்றலால் வேட்டை நாயைப் புலியாக மாற்றினார். உடனே அது உறுமிக் கொண்டு தன்னைத் துரத்தி வந்த புலியைத் தாக்கியது. குழம்பிப் போன புலி காட்டைவிட்டே ஓடிப்போனது.

புலியாக மாறிய முயலுக்கோ பெருமை பிடிபடவில்லை. அதே சமயம் தான்தான் அந்தக் காட்டின் அரசன் என்ற ஆணவத்தில் பிற மிருகங்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியது. தேவைக்கும் அதிகமாக மான் போன்றவற்றை வேட்டையாடிக் கொன்றது.

ஒருநாள் பெருங்குரலில் உறுமியபடி புலி காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சாந்தமான முகத்துடனும், புன்சிரிப்புடனும் யாத்திரை சென்ற முனிவர் திரும்ப வந்து கொண்டிருந்தார். எல்லோரும் தன்னைக் கண்டு அஞ்சும் போது இம்முனிவர் மட்டும் பயமில்லாமல் வருகிறாரே என்று நினைத்தது புலி. அவரை பயமுறுத்த ஒரு சிறு உறுமலுடன் அவர்முன் பாய்ந்தது.

புலி தன்னை நோக்கிப் பாய்ந்ததுமே, தன் கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து அதன் மேல் தெளித்தார். அடுத்த விநாடி அங்கே புலி மறைந்து சிறு முயல் மட்டுமே இருந்தது. 'நிலை உயர உயரப் பணிவு வர வேண்டும். அது இல்லை உனக்கு' என்று முயலைப் பார்த்துக் கூறிய முனிவர், 'நாம் யாருக்கு உதவுகிறோமோ, அவர்களது இயல்பை அறிந்து உதவ வேண்டும். இல்லாவிட்டால் நமக்கே துன்பம் வரும்' என்று சீடர்களிடம் அறிவுரை கூறினார்.

அன்புடன்
சுப்புத்தாத்தா

© TamilOnline.com