பனை மரத்தின் கீழ் குடித்த பால்!

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



அன்புள்ள சிநேகிதியே.

இந்த பிரச்சனையை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய மாமனார் ராணுவத்தில் இருந்தவர். குடிப்பழக்கம் உண்டு. என் கணவரும் அதேபோல் பழகியிருந்தார். திருமணமான புதிதில் எனக்குப் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனால் மாமனார், மாமியாருடன் இரண்டு வருடம் நன்றாக இருந்தோம். இவருக்கு அதே இடத்தில் வேலை இருந்த காரணத்தால். அப்புறம் வந்த 'பார்ட்டி கலாசாரம்' பழகிவிட்டது.

நாங்கள் அமெரிக்கா வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு பையன் இங்கே வந்தபிறகு பிறந்தான். என் மாமனார், மாமியார் அவன் பிறந்தநாளுக்கு வந்தபிறகு மூன்று வருடம் கழித்து வருகை. (மாமியார் இப்போது இல்லை). பையன் பிறந்த பிறகு கணவரின் குடிப்பழக்கத்தை குறைக்க வைத்தேன். அவரும் மாறிவிட்டார்.

##Caption##சமீபத்தில் என் மாமனாருக்காக அவர் இரண்டு, மூன்று வகை பாட்டில்கள் வாங்கி வைத்திருந்தார். மெல்ல அப்பாவுக்குக் கம்பெனி கொடுக்கத்தான் என்று சொல்லி இவரும் ஆரம்பித்துவிட்டார். இந்தக் குடிப்பழக்கத்தைத் தவிர மற்றபடி மாமனார் கட்டித் தங்கம். என்னை மிகவும் அன்பாக நடத்துவார். என் மாமியார் இருந்த காலத்தில் அவர் ஏதாவது சொன்னால் என் மாமனார் என்னை மிகவும் ஆதரித்துப் பேசுவார். எங்களுடன் அவர் வந்து தங்கியிருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்தான்.

ஆனால் இந்த ஒரு பழக்கம் என் குடும்பத்தில் ஒரு பூகம்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஏற்கனவே நான் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தேன். கஷ்டப்பட்டு நிறுத்திய என் கணவரின் குடியை இவர் மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டாரே என்று. என் பயத்தை எடுத்துச் சொன்னால் இருவரும் அலட்சியப்படுத்தி விட்டார்கள். "அப்பா நம்முடன் கொஞ்ச நாள்தானே இருப்பார். அம்மாவின் நினைவு வேறு அவர் மனதை வாட்டுகிறது. கவலைப்படாதே, நான் மறுபடியும் நீ சொல்கிறபடி கேட்கிறேன்" என்று கணவர் சத்தியம் செய்தார். மாமனாரிடம் அவர் உடம்புக்கு நல்லதில்லை என்று எடுத்துச் சொன்னேன். "இனிமேல் எனக்கு என்ன வந்தால் என்ன. நான் முழு வாழ்க்கை வாழ்ந்தாச்சு. நான் அடிக்ட் இல்லையம்மா பங்காரு" என்பார்.

எங்களது திருமணம் காதல் திருமணம். நான் தமிழ், அவர்கள் தெலுங்கு. "பங்காரு, பங்காரு" என்னை அன்போடு கூப்பிட்டு, என் மாமனார் அவர்மேல் பாசத்தை வளர்க்க வைத்தார்.

ஆனால் நேற்றைய முன்தினம் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது. நான் எங்கோ மளிகைக்கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தேன். அப்பாவும் பிள்ளையும் கையில் கிளாஸை வைத்துக் கொண்டு ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தனர். நான் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டேதான் என் அறைக்குச் சென்றேன் (அவர்கள் குடிப்பதைப் பார்த்து அல்ல; அந்த அன்னியோன்யத்தைப் பார்த்து). சடாரென்று திரும்பிப் பார்க்கிறேன், என் நான்கு வயது மகன் ஒரு கிளாஸில் எதையோ குடித்துக் கொண்டிருக்கிறான். எனக்குப் பெரிய அதிர்ச்சி. ஓடிப்போய் அவனிடமிருந்து கிளாஸைப் பிடுங்கி எறிந்து ஒரு அறை விட்டேன். என் கணவரையும், மாமனாரையும் அப்படியே சொற்களால் குதறி எடுத்தேன்.

என்ன வார்த்தைகளைக் கொட்டினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் மாமனார் அவமானத்தால் குன்றிப் போய்விட்டார். முகம் சிவக்க உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விட்டார். இதுவரை யாரும் அந்த அளவுக்கு அவரை அப்படி மரியாதைக் குறைவாகப் பேசியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். என் கணவரோ என்னிடம் கோபப்பட்டு அடிக்கக் கை ஓங்கினார். அதைக் கண்டு மேலும் என் பையன் மிரண்டு பெரிதாக அழ, நான் திரும்பிப் பேய்போலக் கத்தினேன். இப்படி என் பையனையும் குடிவெறியனாக ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினேன்.

"உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அவன் உன்கூடத்தான் போயிருக்கிறான் என்று அப்பா நினைத்துக் கொண்டு ஃபேமிலி ரூமில் டிரிங்க்கை எடுத்துக்கொண்டு வந்தார். இவன் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து வந்து தனக்கும் அதேபோல் கிளாஸில் வேண்டுமென்று அடம்பிடித்தான். அவனை சமாதானப்படுத்த டானிக் வாட்டரை முதலில் கிளாஸில் கொட்டி, அப்புறம் அந்தப் பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார். 'Dangerous Situtaion. நான் தப்புப் பண்ணிட்டேன். இனிமேல் பேஸ்மெண்ட்டில்தான்' என்று அப்பா சொன்னார். நாங்கள் என்ன அவ்வளவு முட்டாளா? உனக்குத்தான் உன் பிள்ளை என்ற பொறுப்பா? எனக்குக் கிடையாதா?" என்று அந்த பிளாஸ்டிக் டம்ளரைக் கொண்டு வந்து என் மூக்கில் வைத்தார்.

மனது கொஞ்சம் சமாதானம் ஆனது. நான் எதுவும் பேசாமல் என் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். இவர் தன் அப்பாவைச் சாப்பிடக் கூப்பிட்டார். அந்தப் பெரிய மனதுக்காரர் பிகு செய்துகொள்ளாமல், வந்து மௌனமாகச் சாப்பிட்டுவிட்டுப் போனார். இரண்டு நாளாக என்னிடம் முன்போல் அன்பாகப் பேசுவதில்லை. அளவாகப் பேசுகிறார். எனக்கு என் வீட்டிலேயே முள்மேல் இருப்பது போலத் தோன்றுகிறது. ஒருபக்கம் என்ன இருந்தாலும் டானிக் வாட்டர்கூட ஒரு குழந்தைக்குக் கொடுத்தது தப்புதான் என்று சமாதானம் செய்து கொள்கிறேன். ஆனால் குற்ற உணர்ச்சிதான் பெரிதாகத் தெரிகிறது. மாமனார் பெரிய மனிதர். வீட்டிற்கு விருந்தாளி. ஆக, எந்த நோக்கில் பார்த்தாலும் அவரை அவமானப் படுத்தியிருக்கிறேன். இனிமேல் இந்த தந்தைப் பாசம் முறிந்து போய்விட்டது போல ஒரு ஏமாற்றம். இருந்தாலும் நான் எதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது. ஒரு தாயின் கோணத்தில் இருந்து பார்த்து பதில் சொல்லுங்கள், நான் தவறு செய்து விட்டேனா என்று.

இப்படிக்கு
......................

##Caption## அன்புள்ள சிநேகிதியே,

கண்டிப்பாகத் தாயின் கோணத்தில் இருந்துதான் பார்க்கிறேன். உள்ளுக்குள் குமைந்த கோபமும், தன் குழந்தையைப் பற்றி இதனால் ஏற்பட்ட பயமும் உங்களை வெடிக்க வைத்திருக்கிறது. தன் குழந்தைக்கு ஆபத்து என்று ஒரு தாயின் உள்ளுணர்வு நினைக்கும்போது ஒரு பூனைகூடப் புலியாக மாறிவிடும். நடந்தது நடந்துவிட்டது. இது ஒரு பாடம், மூன்று பேருக்கும். ஆனால் நீங்கள் குதறி எடுத்தபோதும் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு பெருந்தன்மையாக நடந்த பெரியவரிடம் - ஒரு பெண் என்று உரிமை எடுத்துக்கொண்டு - அவரிடம் உங்கள் மனநிலையை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். குடிப்பழக்கம் மிகவும் கொடுமைதான். ஆனால் இந்த வயதில் திருந்துவதும் கடினம். திருத்த முயற்சி செய்வதும் கடினம். அவர் மனதில் வாங்கிய அடி உரைத்துக் கொண்டேதான் இருக்கும். குடிப்பது தொடரும். ஆனால் பெஸ்மெண்ட்வரை. குடிப்பது அவருக்கு இருக்கும் பலவிதப் பழக்கங்களில் ஒன்று என்று எடுத்துக் கொண்டால் மற்றவை உங்களுக்குப் பிடித்திருந்தால் அந்த நிகழ்ச்சியை மறந்து, அவர் உங்களை பங்காருவாகப் பார்ப்பது உங்கள் கையில்தான் இருக்க்கிறது. பாசம் தொடரும். Pen your heart and speak.

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com