தென்றல் பேசுகிறது...
அதிபர் பராக் ஒபாமா பதவிக்கு வந்தபின் ஆற்றிய முதல் 'ஸ்டேட் ஆஃப் த யூனியன்' சொற்பொழிவு ஒரு முக்கியமான கொள்கை அறிக்கை. அவர் அரசுகட்டில் ஏறும்போதே நாடு பெரும் பொருளாதாரக் குழப்பத்தில்தான் இருந்தது. என்றாலும் "சூறாவளியின் உச்சம் தாண்டிவிட்டது" என்று அவர் நம்பிக்கையோடு குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய மருத்துவச் சீரமைப்பு ஒரு முக்கியமான, மிக அவசியமான செயல்திட்டம். அதைச் சின்ன அடுப்பில் வைத்துவிட்டு, வேலை வாய்ப்புகளை இன்னும் ஓராண்டுக்குள் இரட்டிப்பதை உடனடிப் பணியாக அறிவித்துள்ளார். இதை ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

எல்லா அரசும் எதிர்கொள்ளும் சிக்கல் இதுதான்: உடனடிப் பிரச்சனைகளில் மூழ்கிப் போய், நெடுநோக்குள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதில் அசட்டையாக இருந்துவிடுவது. ஒபாமாவும் அந்த வலையில் விழுந்துவிடக் கூடாது. அரசியல் நிர்ப்பந்தங்கள் கூட இருக்கலாம். ஆனால் குறுகியகால லாபங்களைவிட தேசநலன் பெரியது என்பதை ஆளுவோரும் எதிர்க்கட்சியும் உணர்வது அவசியம். மாற்று எரிசக்தி முயற்சிகளை விரைவுபடுத்தல், மருத்துவக் காப்பீடு, தொழில்துறையை முடுக்கிவிடுதல், நிதித்துறைச் சுணக்கத்தை அகற்றுதல் - இவற்றில் எது முக்கியமில்லை? ஒருவகையில் ஒன்றையொன்று சார்ந்தவையும்கூட. ஒன்றுக்காக மற்றொன்று நிற்கக் கூடாது. அதிபர் ஒபாமாவின் சொல்லில் இருக்கும் மிடுக்கு செயலிலும் ஏற்பட்டாக வேண்டும், விரைந்து!

*****


மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் எல்லா விருதுகளுமே விவாதத்துக்குரியவைதாம். விருதுக்குத் தகுதியானவர் என்று ஒருவர் கருதுவதை மற்றவர் கருதாமல் இருக்கலாம். ஆனாலும் கவர்னர் பதவியைப் போல, விருதுகளும் ஆளுங்கட்சியின், அதன் கொள்கைகளின் ஆதரவாளர்களுக்குத் தரப்படும் அங்கீகாரமோ என்கிற ஐயம் அண்மைக் காலத்தில் பலருக்கும் எழாமல் இல்லை. ஆனாலும் இந்திரா பார்த்தசாரதி, உமையாள்புரம் சிவராமன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்படும்போது ஒவ்வொரு தமிழனும் மகிழவே செய்கிறான். அதிலும் இந்தமுறை பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் இவ்விருதுகளுக்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்; மற்றொருவர் அமெரிக்காவில் வசிக்கும் விஞ்ஞானி ஆரோக்கியசாமி ஜோசப் பால்ராஜ்.

தன்னைவிட இளையவருக்குத் தரப்பட்ட பின் தனக்கு ஒரு விருது வழங்கப்படுகிறது என்பதற்காக விருதை மறுதலிப்பவர்கள் இவ்வாண்டும் உள்ளனர். ஆனால் துறையில் மிக மூத்தவரான இளையராஜாவுடன் சேர்த்து இளவல் ரஹ்மானுக்கு பத்மபூஷண் வழங்கப்படுவதை ஒரு தவறாகவே இசைஞானி பேசவில்லை என்பது சரியானதும், மிகப் பெருந்தன்மையானதும் ஆகும். வயது, கலை ஆகியவற்றின் முதிர்ச்சியைவிட அவரது இந்தப் பண்பு முதிர்ச்சி அதிகம் பாராட்டத்தக்கது.

*****


பத்தாவது ஆண்டின் மூன்றாவது இதழ் இது. ஒவ்வோர் இதழும் முந்தையதைவிடச் சிறப்பாக இருப்பதாகக் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் முந்தைய தடவையை விட ஓரங்குலத்தில் பத்தில் ஒரு பங்காவது அதிக உயரம் தாண்ட வேண்டும் என்று முயன்று வந்த செர்கை புப்காதான் (Sergei Bubka) எங்கள் நினைவுக்கு வருகிறார். எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் கண்டுவிட்ட விமர்சனப் பிதாமகர் வெங்கட் சாமிநாதன் அவர்களின் நேர்காணலும், தலித் வாழ்க்கையைத் தனக்கே உரிய நடையில் பதிவு செய்து தமிழ் இலக்கியத்தை முன்னகர்த்தியுள்ள பாமா அவர்களைப் பற்றிய 'எழுத்தாளர்' பகுதியும் இதழுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. மே மாதம் 35ம் ஆண்டுவிழாவைக் கொண்டாடவிருக்கும் தமிழ்நாடு அறக்கட்டளையில் முக்கியப் பங்காற்றும் சோமலெ சோமசுந்தரம், டாக்டர் ராம் மோகனும் குறித்த கட்டுரை ஒரு கோடி காட்டுகிறது அவ்வளவே. 'தவம் செய்வோம்' , 'மிசோரம்' , 'சிவராத்திரி', பா. வீரராகவன் கவிதைகள் என்று பல்சுவை விருந்தாக மீண்டும் வந்திருக்கிறது தென்றல். நீங்களும் எங்களுக்கு உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து எழுதுங்கள்.

சிவராத்திரி, காதலர் தின வாழ்த்துக்கள்!


பிப்ரவரி 2010

© TamilOnline.com