ஜனவரி 2010: வாசகர் கடிதம்
'தென்றல்' அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாகிவிட்டது என்று கூறினால் சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலாகும். ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும் போதும் எனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காகத் தென்றலை என்னோடு எடுத்துச் செல்கிறேன்.

உலகின் பல பாகங்களிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி அவர்களது ஒரு படைப்பையும் 'தென்றல்' வெளியிடுவது, நல்ல எழுத்தாளர்களைத் தேடி மேலும் எங்களைப் படிக்கச் செய்கிறது. இந்தியத் தமிழ்ப் பத்திரிகைகளில் காணக் கிடைக்காத விஷயம் இது. முதல் 10 ஆண்டுகளில் தென்றல் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் தொலை தூரத்தைத் தொடும். வாழ்த்துகள்.

சரஸ்வதி சிவகுமார், கலிஃபோர்னியா.

*****


'தென்றல்' டிசம்பர் இதழில் சீதா துரைராஜின் பண்டரிபுரம் பற்றிய கட்டுரையைப் படித்தவுடன், 1950ல் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய 'வடநாட்டு யாத்திரை' என்ற நூலில் குறிப்பிட்டிருந்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. விட்டோபா விக்ரஹத்தின் மேல் ஒரு சிறிய லிங்கம் இருப்பதை அர்ச்சகர் காட்டினார் என்று வாரியார் கூறியிருப்பதைப் பண்டரிபுரம் பற்றிய வேறெந்தக் கட்டுரையிலும் படித்ததாகத் தெரியவில்லை. இதுபற்றி ஆசிரியருடைய மற்ற தென்றல் வாசகர்களுடைய கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

சந்திரசேகரன், மோர்கன் ஹில், கலிஃபோர்னியா

*****


இசையுலக ஜாம்பவான்களான ஜி. ராமநாதன், செம்மங்குடி ஆகியோரைப் பற்றிய விவரங்களை அடுத்தடுத்த தென்றல் இதழில் படிக்க ஆனந்தமாக இருந்தது. இருவரும் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

அப்போது ‘ஹரிதாஸ்' படம் வெளியாகியிருந்த சமயம். ஜி. ராமநாதன் கோயம்புத்தூரில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். ஒருநாள் இரவு அவரது அறைக் கதவு தட்டப்பட்டது. வழக்கமாக ரசிகர்களோ, திரைப்படத்தில் பாட விரும்புபவர்களோதான் வருவார்கள். கதவைத் திறந்தால் செம்மங்குடி! ஒரு குருவுக்கு உரிய மரியாதையோடு அவரை ராமநாதன் வரவேற்றார். சாருகேசி ராகத்தில் அமைந்த ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடலைத் தான் மிகவும் ரசித்ததாகச் செம்மங்குடி கூறியதும் ராமநாதனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கிருஷ்ணன் ராமஸ்வாமி, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா.

*****


தென்றலை ஆவலுடன் படித்து மகிழும் ஆயிரக்கணக்கானோரில் நான் ஒருவன். தென்றல் ஒரு சிறந்த பத்திரிகையாக மட்டும் அல்லாமல் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் உயர்ந்த செய்தி மலராகவும் விளங்குகிறது. தமிழகத்திலிருந்து தற்பொழுது வரும் பத்திரிகைகளோடு பார்த்தால் தென்றல் தொடுவானத்தைத் தொட்டுவிட்டதாகவே கருதுகிறேன். டிசம்பர் தென்றலில் பிதாமகர் செம்மங்குடி சீனுவாசய்யரைப் பற்றிய கட்டுரையைப் பார்த்தேன். ரமணன் அவர்கள் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது. தென்றலை அமெரிக்காவில் தருகிற தங்கள் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த புதுவருட வாழ்த்துக்கள்.

திருக்கோடிக்காவல் டி.எஸ்.வைத்யநாதன், நியூயார்க்

*****


2009 செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முடிய நான்கு தென்றல் இதழ்கள் குறித்து எழுதுகிறேன். காலதாமதமானாலும் எழுதாமலிருக்க முடியவில்லை. நகைச்சுவைச் சிறப்பிதழில் பிறர் மனதைச் சிறிதும் புண்படுத்தாமல் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் இரண்டு மகா மேதைகள் பாக்கியம் ராமசாமி, க்ரேஸி மோகன் ஆகிய இருவர் பற்றிப் படித்து ரசித்து மகிழ்ந்தேன். இருவருமே நல்ல மனம் படைத்த மனிதர்களாக இருப்பதால்தான் இவ்வளவு நகைச்சுவையை மக்களுக்கு வழங்க முடிகிறது. க்ரேஸி மோகன் அவரது தாத்தாவைப் பற்றி எழுதியதை இப்போது நினத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதுபோல் பாக்கியம் ராமசாமி அவர்களின் அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் நகைச்சுவைக் காவியம். இதே இதழில் இல்லினாய்ஸ் சேகரின் ‘கலைமகள் கைப்பொருளே', எல்லே சுவாமிநாதனின் 'முதலீடு' இரண்டு சிறுகதைகளும் சிரிப்பு விருந்தாக இருந்தது. பின் இதழ்களிலும் தங்கம் ராமசாமியின் ‘நாய் விற்ற காசு'ம், கூத்தரசனின் நல்லமனமும் அருமையான சிறுகதைகள். இரண்டிலும் படிப்பவர்களுக்கு கருத்தழமிக்க செய்தி ஒன்று இருந்தது தனிச்சிறப்பு. கலா ஞானசம்பந்தம் அவர்களின் 'பாலைவனத்து இளநீர்' வித்தியாசமான நல்ல கதை.

மேதை ஜி. ராமநாதன், தென்கச்சியார் இவர்களைப் பற்றிப் படித்தபின் இப்படிப்பட்ட மனிதர்கள் இறக்காமல் இருக்க வரம் பெற்றிருக்கக் கூடாதா என்று மனதிற்கு ஏக்கமாக இருந்தது. சாம். வெங்கட் அவர்கள் சென்னைத் தொலைக்காட்சியின் ஆரம்ப காலம் பற்றி எழுதியிருந்தது சிறப்பான உண்மை. அவர் கூறியது போன்று ஆரம்ப காலச் சென்னைத் தொலைக்காட்சியை என்னாலும் மறக்கவே முடியாது. இளம் அறிவிப்பாளர்களாக லோகேஸ்வரியும் ஹேமலதாவும் இனிய புன்சிரிப்புடன் அவ்வளவு அழகாகத் தோன்றுவார்கள். அரைமணி நேரத்தில் முடியும் கருத்தாழமிக்க நல்ல நாடகங்களைக் காட்டுவார்கள். கண்ணனின் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பன்' ஒரு மறக்க முடியாத காவியம். சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்தில் சீரியல் என்ற பெயரில் வருடக் கணக்கில் ரப்பரைப் போல் இழுத்து மக்கள் மனதில் நஞ்சை விதைப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் காலவிரயம் செய்யும் இயக்குனர்களுக்கு ஆரம்பகாலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காட்டி அவர்கள் திருந்த வழி செய்யலாம்.

டிசம்பர் இதழில் யுவன் சந்திரசேகரின் ‘நான்காவது கனவு' கதையின் நடையும் அவரின் கற்பனை வளமும் மிகவும் நன்று. தென்றல் இதழ் நாளுக்கு நாள் வளர்ந்து, உயர்ந்து வருவது மறுக்க முடியாத உண்மை.

எஸ். மோகன்ராஜ், நியூயார்க்

*****


கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய 'தென்றல்' இதழின் பெயரைத் தாங்கி அமெரிக்காவிலிருந்து தென்றல் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கவிஞருடன் நெருங்கிப் பழகியவன். புதுவை மாநகரில் கண்ணதாசனின் தென்றல் இதழ் விற்பனையாளராக இருந்தவன். அவரைப் போன்ற மாமனிதர்களைக் காண்பது அரிது. தென்றல் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என்னுடைய வருத்தம் என்னெவென்றால் இவ்வளவு சிறந்த இதழைத் தமிழக மக்கள் யாரும் படித்து இன்புற வாய்ப்பில்லாமல் இருக்கிறதே என்பது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நூலகங்களுக்கும் நீங்கள் தென்றல் இதழை அனுப்பி வைக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். இது நீங்கள் தமிழக மக்களுக்குச் செய்யும் தொண்டு ஆகும்.

நான் புதுவையிலிருக்கும் போது, கலிபோர்னியாவிலிருந்து எனது மகள் மாதாமாதம் தென்றலை அனுப்பி வைப்பாள். அந்தப் பயனை எல்லோரும் பெறட்டும் என்று அதனை சென்னை தேவநேயப்பாவணர் மாவட்ட மைய நூலகத்திற்கு அளிக்க விரும்பினேன். ஆனால் சில காரணங்களால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. அமெரிக்காவிலிருந்து இப்படிப்பட்ட இதழ் நல்ல விஷயங்களைத் தாங்கி வருகிறது என்பது எனக்கு மிகவும் பரவசமாக இருக்கிறது.

புதுவை வி.எஸ். கோவிந்தன், நியூஜெர்ஸி

*****


டிசம்பர் 09 மாத இதழில் சாம் கண்ணப்பன் நேர்காணல் என்னை மிகவும் கவர்ந்தது. அமெரிக்காவைத் தம் தாய்நாடுபோல் கருதியிருந்த மாமனிதர் அவர். அமெரிக்காவாழ் இந்தியர்களுக்கும், பிற மக்களுக்கும் அவர் செய்த தொண்டுகள் பாராட்டுக்குரியவை.

அதேபோல் செம்மங்குடி சீனிவாச ஐயர் வாழ்க்கையைப் பற்றி நுணுக்கமாக எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது. காரணம், நானும் ஒரு சங்கீத ப்ரியன். சகாராம ராவ் அவகளுடைய கோட்டு வாத்தியத்திற்கு இணையாக இன்னொருவர் இருந்தாரில்லை என்பர். அவர் கோட்டு வாத்தியம் வாசிக்கும்போது அது நாதஸ்வரமா அல்லது வாய்ப்பாட்டா என்று தெரியாத அளவுக்கு வாசிப்பு இருக்கும் என்று என் தந்தை ம.கி. வைத்தியநாத ஸ்தபதி அடிக்கடி சொல்லுவார். அவரும் நன்கு கோட்டு வாத்தியம் வாசிப்பார். எனது தாத்தா மகிழவனம் ஸ்தபதி அவர்களும் இசையார்வம் உடையவர்தாம். கால் ஆர்மோனியம் வாசிப்பதில் வல்லவர். நாடகத்தில் நடித்துமிருக்கிறார்.

காரைக்குடியில் படிக்கும் காலத்தில் செம்மங்குடியின் பல கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். “ஆசை முகம் மறந்து போச்சே” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்த ஒன்று. அதுபோல செம்மங்குடியின் ஒரு பாட்டுக்காகவே கூட்டம் வரும், காத்துக் கிடக்கும். இப்படிப்பட்ட செய்திகளைப் படிப்பதன் மூலம் தென்றலின் சுகத்தை அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்க தென்றல்.

டாக்டர் வை. கணபதி ஸ்தபதி, சென்னை

© TamilOnline.com