புத்தக மழை
2010ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி முந்தைய ஆண்டே, அதாவது டிசம்பர் 31, 2009 அன்றே தொடங்கிவிடுகிறது. சென்ற இரண்டு ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சியில் கூட்டமும் சரி, விற்பனையும் சரி இரண்டுமே சரிவுதான். இந்த ஆண்டு நல்லபடி இருக்கும் என்கிறார்கள்.

ஆனால், பதிப்பாளர்கள் புத்தகங்களைப் பதித்துத் தள்ளுகிறார்கள். உயிர்மை பதிப்பகம் 30 நூல்களை ஒரு நாளைக்குப் பத்து என்ற வீதத்தில் வெளியிட்டு மூன்று நாள் விழா எடுத்தது. புதிதாக வந்துள்ள திரிசக்தி பதிப்பகம் ஒரே நாளில் 9 எழுத்தாளர்களின் 27 நூல்களை வெளியிட்டு அமர்க்களப்படுத்தியது.

திரிசக்தி (ஆன்மீகம்), தேவதை (பெண்கள்), தமிழக அரசியல் என்று மூன்று சஞ்சிகைகளைத் தமிழகத்தில் 2009ல் வெளியிடத் தொடங்கிய திரிசக்தி பதிப்பகம் இருபதே நாட்களில் 27 நூல்களைத் தயாரித்து வெளியிட்டு, வரவிருக்கும் புத்தகக் கண்காட்சிக்குத் தன் தயார்நிலையைப் பறையறைந்தது. இந்த விழாவின் சிறப்பு நூலாசிரியர்களுக்குத் தரப்பட்ட ராஜ மரியாதைதான். அதுவுமன்றி, அந்த மேடையிலேயே நூலாசிரியர்களின் கையில் காசோலை தரப்பட்டது! இது தமிழகம் காணாத அதிசயம்.

தென்றல் இணையாசிரியர் அர்விந்த் சுவாமிநாதன் எழுதிய 'சுவாமி விவேகானந்தர்', எமது கட்டுரையாளர் வி. ஹரி கிருஷ்ணன் எழுதிய 'கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும்', 'ஓடிப்போனானா?' ஆகிய நூல்கள் இந்த மேடையில் வெளியானதில் நமக்கு மகிழ்ச்சி. 'ஹரி மொழி' பகுதியில் தொடர்ந்து வெளியான 22 கட்டுரைகளின் தொகுப்பே 'கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும்'. அதன் முன்னுரையில் ஹரி கிருஷ்ணன் கூறுகிறார்: "தமிழ் நாட்டுப் பத்திரிகைகளே வெளியிடத் தயங்கும், யோசிக்கும் தலைப்புகளை, 'இந்தக் காலத்து வாசகர்களுக்கு இது ஒத்துவராது' என்று ஒதுக்கியிருக்கக் கூடிய கனமான விஷயங்களை, எனக்கு முழுச் சுதந்திரம் அளித்து தென்றல் பத்திரிகை வெளியிட்டது. தொடர்கதைகள் மட்டுமல்லாமல், சிறுகதைகளே வெளியிடப்படாமல் நின்று போயிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், என்னைத் தொடர் கட்டுரைகளாக எழுதும் அளவுக்கு, என்னுடைய கட்டுரைகளின் அளவையும் நீளத்தையும் பொருட்படுத்தாமல் எவ்வளவோ இட நெருக்கடிகளுக்கு இடையில் இந்தக் கட்டுரைகளை என் போக்கில் எழுத வாய்ப்பையும் அளித்து, இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்த தென்றல் பத்திரிகைக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்".

நாம் பேச வந்தது அவர் பட்ட கடனைப் பற்றியல்ல. மேம்போக்கான ஜிகினா எழுத்துக்கள் இயல்பாகிவிட்ட தமிழ் இதழ் உலகில், கனமான விஷயங்களுக்கு நாம் இடம் கொடுத்தோம் என்பது பற்றியும் அல்ல. இவற்றை தென்றலில் அவர் எழுதியமைக்கு நாம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதைச் சொல்வது முக்கியம். ஜனவரி இதழை இளைஞர் சிறப்பிதழாகக் கொண்டுவரும் தருணத்தில் அரவிந்த் சுவாமிநாதனின் 'சுவாமி விவேகானந்தர்' நூலும் வெளியாகியுள்ளது மற்றொரு சிறப்பம்சம். கவிஞர் பா. வீரராகவன் அவர்களின் உற்சாகமான 'விதை வனமாகும்' என்ற கவிதைத் தொகுப்பு இதே மேடையில் வெளியானது.

"நூலை யார் வெளியிடப் போகிறார்கள் என்று எழுத்தாளன் அலைந்த காலம் மாறி, ஐந்தாறு தரமான பதிப்பகங்கள் நமது நூல்களை வெளியிடத் தயாராக இருப்பது மிக மகிழ்ச்சியான விஷயம்" என்று நாஞ்சில் நாடன் விழா அரங்கில் மூத்த எழுத்தாளர் வெங்கட் சாமிநாதனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மைதான், வெளியீட்டாளரின் தேடல் தரமான எழுத்தாளர்களுக்காகத்தான். பதிப்பாளர்கள் தயார், நீங்கள்?

மதுரபாரதி

© TamilOnline.com