துணுக்குத் தோரணங்கள் தாம்பரத்தைத் தாண்டுவதில்லை
பேரா. இந்திரா பார்த்தசாரதி தமிழ் இலக்கிய ஜாம்பவான். பன்முகத் திறமைகள் கொண்டவர். 1930-ல் கும்பகோணத்தில் பிறந்த ரங்கநாதன் பார்த்தசாரதி குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் பட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார். இவர் 'ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்களில் வைணவ மதம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் (1963-88) பேராசிரியராகப் பணிபுரிந்த பின், 1988 முதல் ஐந்தாண்டுகள் போலந்தில் உள்ள வார்சா பல்கலைக் கழகத்திலும் பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத் துறையிலும் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

தனது மகனுடன் அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் தற்போது வசித்து வரும் பேராசிரியர், இதுவரை 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைத் தொகுதிகள், 10 நாடகங்கள், 2 கட்டுரைத் தொகுதிகள் ஆகியவற்றைப் படைத்திருக்கிறார். இவரது 'குருதிப்புனல்' நாவல் சாகித்திய அகாதமியின் தமிழுக்கான விருதைப் பெற்றது. 'வேதபுரத்து வியாபாரிகள்' நாவல் பாரதீயா பாஷா பரிஷத் விருதையும், 'அவுரங்கசீப்' நாடகம் தமிழக அரசின் விருதையும், 'இயேசுவின் தோழர்கள்' நாவல் ரங்கம்மாள் நினைவுப் பரிசையும், அனந்தாச்சாரி அறக்கட்டளை விருதையும் இவருக்குப் பெற்றுத் தந்தன. இந்தியாவின் பெருமைக் குரிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை 'ராமானுஜர்' நாடகத்திற்காகப் பெற்றுள்ளார். இவரது நாடகங்களுக்காக அண்மையில் சங்கீத நாடக அகதமி விருதையும் பெற்றார். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும், சாகித்ய அகாதமி தேர்வுக் குழுவிலும் பணிபுரிந்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

இனிச் சந்திப்போம் இ.பா.வை...

தென்றல்: எப்போது எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்தீர்கள்?

இந்திரா பார்த்தசாரதி: எனக்குச் சிறு வயது முதலே இலக்கிய ஆர்வம் உண்டு. கும்ப கோணத்தில் நான் ஆரம்பக் கல்வியைத் தனியாக ஆசிரியர் வைத்துப் படித்த பொழுது எனக்குக் கற்பித்த வேங்கடாச்சாரி அவர்களுக்கு அபாரமான இலக்கிய ஆர்வம். அவர் பாடத்துடன் எனக்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள், டால்ஸ்டாயின் 21 டேல்ஸ் போன்றவற்றை மிகவும் ரசித்துப் படித்துக் காண்பிப்பார்.

குடந்தையில் கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் போன்ற பிரபல எழுத்தாளர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. தி.ஜானகிராமன் எனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நான் எழுதத் தொடங்கிய கதை, கவிதைகளை அவரிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டது உண்டு.

அதே காலத்தில் கி.ரா. கோபாலன் என்ற ஒரு எழுத்தாளருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவர் கல்கியில் கதைகள் எழுதி வந்தார். கோபாலன், 'கல்கி' நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அவருடனான எனது நட்பும் நான் எழுத ஆரம்பித்ததற்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. நான் தில்லி சென்ற பிறகுதான் நாடகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. தில்லி தேசீய நாடகப் பள்ளியின் நாடகங்கள் என்னை ஈர்த்தன. என்னை ஈர்த்த மேற்கத்திய நாடக ஆசிரியர்கள்: இப்ஸன், பிராண்டலோ, பெக்கட், ஆர்தர் மெய்லர், டென்னஸி வில்லியம்ஸ் போன்றோர். ஷேக்ஸ்பியருக்கு இணையான நாடக ஆசிரியரை நான் இன்னும் படித்ததில்லை.

தெ: தமிழில் மேற்படிப்பு படித்த உங்களுக்கு நவீன இலக்கியத்தில் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

இ.பா: அந்தக் காலகட்டத்தில் தமிழாசிரியர்கள் எழுத்துத் துறைக்கு வருவது மிக அரிது. ஆகவே நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என்னைச் சற்றே ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் சக தமிழாசிரியர்கள் பார்த்தார்கள். பள்ளிக் காலத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியிருந்தாலும், நான் எழுதியது கவிதை இல்லை என்பது எனக்குத் தெரிந்ததால் அதை நிறுத்தி விட்டேன். இருந்தாலும் கதை எழுதுவது தொடர்ந்தது. டெல்லிக்குச் சென்ற பின்னர் நான் விகடனுக்கு அனுப்பிய முதல் கதையான மனித இயந்திரமே முத்திரைக் கதையாக வெளியானது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்தக் காலத்தில் விகடன் ஜெயகாந்தன் கதைகளை வெளியிட்டதால் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு எனது கதைகளையும் அனுப்ப ஆரம்பித்தேன். தொடர்ந்து நான் அனுப்பிய அசலும் நகலும் போன்ற 6 சிறுகதைகள் வரிசையாக முத்திரைக் கதைகளாக வெளியாயின. எனது முதல் கதை நிராகரிக்கப் பட்டிருக்கு மானால் நான் எழுதுவதையே நிறுத்தி இருக்கலாம்.

தெ: மரபிலக்கியத்தில் இருந்த ஆழ்ந்த படிப்பு, நவீன இலக்கியப் படைப்பு களுக்கு எவ்விதத்தில் உதவியதா?

இ.பா: ஆம். பழந்தமிழ் இலக்கிய அறிவு நிச்சயமாக எனது எழுத்துக்கு ஒரு பலமாக இருந்தது. ஆங்கிலப் படிப்பின் வழியே தமிழ்ப் படைப்புலகத்துக்கு வந்த பெரும் பான்மை மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்குத் தங்கள் இலக்கியப் பண்பாட்டின் அடிவேர் களைப் பற்றிய அக்கறை இல்லை. ஷேக்ஸ் பியரையும் மில்டனையும் எலியட்டையும் ஆழமாகப் படித்த இலக்கியவாதிகள் கம்பனையோ, சங்கப் பாடல்களையோ பொருட்படுத்தவில்லை. ஆனால் வங்காளத் தின் சரத்சந்திர சட்டர்ஜி போன்றவர்கள் தங்கள் மொழியின் புராதன இலக்கியங் களை நன்கு அறிந்திருந்தனர். மரபை மீறுவதற்கு எது மரபு என்று அறிவது அவசியம்.

தமிழின் ஆரம்பகால நாவல் எழுத்தாளர் கள் வேதநாயகம் பிள்ளை, ராஜமையர், போன்றவர்களுக்குப் பண்டைய இலக்கியப் பரிச்சயம் இருந்தது. புதுமைப் பித்தனுக்குக் குடும்பப் பின்னணி காரணமாகத் தமிழ் இலக்கிய அறிமுகம் இருந்தது. பின்னாள் எழுத்தாளர்கள் மரபிலக்கியத்தைப் படிக்க முற்படவில்லை. தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் சிறப்புமே அதன் பலமாகவும், பலவீனமாகவும் அமைந்தது. அவ்வளவு சிறப்பாக நம்மால் எழுத இயலவில்லையே என்று எழுத்தாளர்களிடம் தோன்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களை மரபிலக்கியத் தைத் தவிர்க்க வைத்தது.

தமிழ் இலக்கியத்தின் சிறப்பான கூறுகளை நவீன நாவல்களில் பயன்படுத்துவது கூடச் சிரமமாக இருக்கிறது. அதைப் படித்துப் பாராட்டுபவர் யாரும் இல்லை. அருமை தெரியாதவர்களிடையே அவற்றை எச்சரிக் கையுடன் எழுத வேண்டியுள்ளது. 'நவீனம்', 'மரபு' என்பவை காலத்தைப் பொருத்தவை யல்ல; சிந்தனையைப் பொருத்தவை. செவ்வியல் இலக்கியத்தின் அடையாளமே இதுதான். திருக்குறள் கருத்துக்கள் நவீன இலக்கியமாகவும் இருக்கமுடியும்; இது படிப்பவரைப் பொருத்தது.

தெ: நாடகக்கலை பிற தென்னிந்திய மொழிகளில் எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது? அங்கு அவை வெகுஜன மக்களை ஈர்த்துள்ளனவா?

இ.பா: மராத்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் சிறுபான்மையோர் நாடகம், இன்னும் சிறுபான்மையோரின் ஆதரவை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் தமிழைக் காட்டிலும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது, அவ்வளவுதான். அறிவுஜீவி நாடகமாக இருந்தாலும் அது பார்க்கின்ற வனுக்குப் புரிய வேண்டும். நாடகம் ஒரு சமுதாயச் செயல். தமிழில் இந்தக் குறைபாடு இருப்பதால்தான் நவீன நாடகத்தின் பக்கம் வர மக்கள் தயங்குகிறார்கள்.

தமிழில் நாடகம் என்பது இசையும், நடனமும் கூடிய கூத்து வடிவிலேயே பல நூற்றாண்டுகளாக இயங்கி வந்துள்ளது. ஆனால் கூத்துக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்காததால் அதன் வளர்ச்சி இலக்கிய வளர்ச்சிக்கு ஈடானதாக இல்லை. சிலப்பதி காரம் நாடக வடிவத்துக்கு உகந்ததாக இருந்த பொழுதினும் அது காப்பியமாகப் படைக்கப்பட்டதற்கு, இலக்கிய அங்கீகாரம் இல்லாததும் ஒரு காரணமாக இருந்திருக் கலாம் என்று நான் கருதுகிறேன்.

தெ: நாட்டுப்புற நாடகங்கள், கூத்து போன்ற பாரம்பரியக் கலைகளின் தற்கால நிலைமை என்ன?

இ.பா: கிராமியக் கலைகள், கூத்துக்கள் அவற்றுக்கான சூழ்நிலையில் நடத்தப் பட வேண்டும், அவை மியுசியம் தியேட்டரிலும் மாக்ஸ்முல்லர் பவனிலும் நடத்தப்படும் பொழுது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போகின்றன. கிராமியக் கூத்துக்கள் மக்களால் நன்கு உள்வாங்கப் பட்டு அனுபவித்து ரசிக்கப் படுபவை. இரவு முழுக்க நடப்பவை. மக்கள் அவர்கள் விரும்பிய பகுதிகளைக் கண்டு ரசிக்கும் வண்ணம் நடப்பவை.

பிராட்வேயில் ஒரு நாடகம் சிறுபான்மை முயற்சியாக ஆரம்பிக்கப் பட்டு ஆ· ஆ·ப் பிராட்வே, ஆ·ப் பிராட்வே, அப்புறம் பிராட்வே என்று நாடகங்கள் பெறும் வரவேற்புக்கேற்ப அடுத்த நிலைக்குப் போகும். தமிழ் நாட்டுச் சூழலில் அவை சிறுபான்மை முயற்சிகளாகவே நின்று விடுகின்றன. அவை அறிவு ஜீவிகளுக்கு மட்டுமேயானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மக்களிடம் செல்லாமலே போய் விடுகின்றன.

தெ: பொதுவாகவே கிராமப்புறக் கூத்துக்களில் உடலுறவு சார்ந்த கொச்சை யான வசனங்களும் பாடல்களும் நிரம்பி இருக்கின்றன; இது போன்ற ரசனைகள் இந்தக் கலைகளின் தொடக்க காலத்தில் இருந்தே இருக்கின்றனவா?

இ.பா: கிராமங்களில் யார் கூத்து பார்க்க வருகின்றார்கள்? வயலில் வேலை செய்து விட்டுக் களைப்புடன் பொழுதை இனிமை யாகக் கழிக்க விரும்பும் தொழிலாள மக்கள். மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீடுகளை (middle class morality) அவர்கள்மீது திணிக்கக் கூடாது. பாலுணர்வு (sex) நம் மரபில் ஒரு கெட்ட வார்த்தையல்லை. நம் பண்டைய இலக்கியங்களில் எந்தவிதமான மனத்தடையுமின்றி இது சொல்லப்பட்டிருக் கிறது. Sex கிறித்துவப் பாரம்பரியத்தில் 'original sin'. காலனி ஆட்சிக்குப் பிறகு, பாலியல்பற்றிய நம்முடைய மத்தியதர வர்க்கப் பார்வையை அவர்களிடமிருந்து சீதனமாகப் பெற்றிருக்கிறோம்.

தெ: தமிழ் நாட்டில் நிலவும் மேடை நாடகச் சூழலில் துணுக்குத் தோரண நாடகங்களுக்கு உள்ள வரவேற்பு பற்றி உங்கள் பார்வை என்ன?

இ.பா: துணுக்குத் தோரணங்கள் தாம்பரம் தாண்டிச் செல்வதில்லை.

தெ: உங்கள் வரலாற்று நாடகங்களில் சொல்லப்பட்ட தகவல்கள் அல்லது கருத்துக்களுக்காக எதிர்ப்பு ஏதேனும் வந்ததுண்டா?

இ.பா: ராமானுஜர் ஒரு முறைதான் அரங்கேறியிருக்கிறது. தில்லி தேசியநாடகப் பள்ளியின் முயற்சியால் சென்னையில் அரங்கேறியது. அது போலவே அவுரங்கசீப் நாடகமும். அவுரங்கசீப் நாடகம் இந்துஸ் தானியில் மேடையேறிய பொழுது அதற்குச் சில கருத்து வேறுபாடுகள் வந்ததாகக் குறிப்பிட்டார்கள். ராமானுஜர் நாடகம் புத்தகமாக முதலில் வந்த பொழுது தமிழில் அதற்கான எதிர்ப்பு என்று ஏதும் வரவில்லை. அதற்குக் காரணம் அந்த நாடகத்தை யாரும் படித்திருக்க மாட்டார்கள். நாடகம் வந்த பொழுதும் எத்தனை பேர் இது போன்ற புதுமையான நாடகங்களைப் பார்க்க விரும்பியிருப்பார்கள்? ஆகையால் எதிர் வினைகள் ஏதும் வரவில்லை. இராமானுஜர் நாடகத்திற்காக எனக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப் பட்டது. அந்த நாடகத்தில் இராமனுஜர் தவறாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார் என்று கூறி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு 200 வைணவர்கள் கையெழுத்துப் போட்டு, விருது வழங்கும் பிர்லா அமைப் பிற்கு அனுப்பியிருந்தனர். அதன் இயக்குனரும் அவர்களின் எதிர்ப்பை எனக்கு ஒரு தகவலுக்காக அனுப்பி வைத்தார். அவருக்கு நான் பதில் எழுதுகையில் இவர்களுக் காகத்தான் நான் இந்த நாடகத்தையே எழுதினேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

தெ: இராமானுஜருக்குப் பிறகு அவர் வலியுறுத்திய சமத்துவ சமுதாயம் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ள வைணவர்கள் நடுவே எந்த அளவில் பின்பற்றப் படுகின்றன?

இ.பா: இராமானுஜரின் சீர்திருத்தக் கருத்துக்கள் அவர் காலத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பின்பற்றப்பட்ட போதிலும் அவர் காலத்திலேயே பலத்த எதிர்ப்பும் இருந்தது. இருப்பினும் காலப் போக்கில் இராமானுஜரும் நிறுவனப் படுத்தப் பட்டு விட்டார். நிறுவனப்படுத்தப்படும் இயக்கத்தின் கொள்கைகளும் சீர்திருத்தங்களும் சடங்காக மாறிவிடுகின்றன. இராமானுஜருக்கும் முன்பும் பின்பும் சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து செயல்பட்டே வந்துள்ளனர். அவரவர் காலகட்டத்தில் இருந்த சூழ்நிலைக் கேற்ப அவரவர் செயல்பட்டுள்ளனர். இயேசுவும் ஒரு சீர்திருத்தவாதியே ஆனால் பின்னாள் அவரும் நிறுவனப்படுத்தப் பட்டார். அதே நிலைமைதான் இராமானு ஜருக்கும் ஏற்பட்டது. ஈ.வெ.ரா. பெரியாரின் சீர்திருத்தங்களும் காலப்போக்கில் அவரது சீடர்களால் நிறுவனமாக்கப்பட்டு விட்டது. தாழ்த்தப்பட்ட மக்களால் மேலக்கோட்டை கோவில் கட்டப்பட்டதாக இராமனுஜரே சொல்லியுள்ளார் ஆனால் காலப் போக்கில் அவர்களுக்கு உரிமையுள்ள கோவிலில் அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

தெ: இராமனுஜர் காலத்திலோ பின்னரோ பிரபந்தங்களுக்கு சமஸ்கிருதத்தில் உரைகள் எழுதப்பட்டனவா?

இ.பா: திவ்யப் ப்ரபந்தத்தின் மேன்மையை சம்ஸ்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் இராமானுஜருடைய சிஷ்யர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். நாதமுனிகள், ஆள வந்தார், இராமானுஜர் போன்ற வைணவத் தலைவர்கள், ஆழ்வார் பாடல்களை ஒரு நீண்ட தத்துவார்த்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகக் கண்டு, இப்பாரம் பரியத்தின் பழகு மொழியாக இருந்த சம்ஸ்கிருதத்தில் இப்பாடல்களின் ஏற்றத் தைக் கூறியுள்ளார்கள். தமிழ்க்கடல் கடந்து, வடமொழிக்கு எல்லை நேர்ந்தவர்களால்தாம் இந்த வியாக்கியானங்களை எழுதியிருக்க முடியும். அவர்கள் காலத்துக்கு முந்திய எல்லாத் தமிழ் நூல்களையும் இவர்கள் கரை கண்டிருக்கிறார்கள். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் சம அந்தஸ் துடைய மொழிகளாக இவர்கள் கருதியதால், இரு மொழிகளும் விரவிய மணிப்பிரவாள நடையில் வியாக்கியானம் எழுதினார்கள். இவ்வுரைகளை நாம் சமயத்தோடு வைத்து எண்ணியதினால், இலக்கியமாகப் படிக்கத் தவறிவிட்டோம். நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர், இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களுக்குரிய இடம், தமிழிலக்கிய வரலாற்றில் இவ்வியாக்கியான காரர்களுக்கும் உண்டு.

தெ: இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஒரு நாடக ஆசிரியருக்கு, வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இ.பா: பரிசு பெற்றிருப்பவர் பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் ஹெரால்ட் பின்டர். பின்டர், முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் அரசியலைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். பின்டரின் புகழ்பெற்ற நாடகங் களைப் படிக்கிறவர்களுக்கு, அவர் நாடகங் களில் துளிக்கூட அவருடைய அரசியல் ஆக்ரோஷக் குரல் கேட்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். அகத்திணை, அவர் நாடகங்கள், புறத்திணை, அவருடைய அரசியல் கோட்பாடுகள், அறிக்கைகள்.

அவருடைய நாடகங்களில், உரையாடல் களுக்கு இடைப்பட்ட மௌனத்தை ஓர் அற்புதமான உத்தியாக அவர் பயன்படுத்து கிறார். இம்மௌனம், மன இறுக்கத்தை அதிகரிக்கக் கூடியது. சொற்சிக்கனம், சொல்லிச் சொல்லி உறைந்து போய் அர்த்தம் இழந்து போன வார்த்தைகள், திரும்பத் திரும்பச் சொல்லுதல் போன்ற பலவகையான உத்திகளால் தம்முடைய படைப்புலகுக்குத் தேவையான ஒரு சூழ் நிலையை இவரால் உருவாக்க முடிகிறது. தேர்ந்த இயக்குனர், சிறந்த நடிகர்கள் இருந்தால்தான் இவர் நாடகங்கள் மேடையில் வெற்றி பெற முடியும். அத்தனை நுணுக்க மானவை அவை.

தெ: தமிழ்ச் சூழலில் சங்க இலக்கியம் போற்றப்படும் அதே அளவிற்கு பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அமையாததன் காரணம் என்ன?

இ.பா: சங்க இலக்கியங்கள் இல்லா விட்டால் பக்தி இலக்கியங்கள் இல்லை. சங்க இலக்கியத்தின் அகத்துறை இலக்கிய மரபுதான், பக்தி இலக்கியத்தில் சொல்லப் படும் நாயகி-நாயக பாவத்தின் அடிநாதம். பக்தி இலக்கியங்கள் வழிபாட்டுக்குரிய வையாகக் கருதப்படத் தொடங்கிய காரணத் தினால், இலக்கியம் என்றளவில் அதன் முக்கியத்வம் குறைந்துவிட்டதோ என்று நினைப்பதற்கு இடமிருக்கிறது என்பது உண்மைதான். அவற்றை இலக்கியமாகப் படிக்கும்போதுதான் தமிழ் மொழியின் தரம் குறையாத நீண்ட இலக்கியப் பாரம்பரியத் தொடர்ச்சி நமக்கு விளங்கும்.

தெ: இலக்கியம் என்பது என்ன? பிரசார எழுத்துக்களும் இலக்கியம் தானா?

இ.பா: இது படிக்கிறவர்களுடைய தரத்தைப் பொருத்த விஷயம். ஒரு நல்ல நூல், படித்து முடித்த பிறகுதான் தொடங்குகின்றது என்பார்கள். ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது அர்த்தப் பரிமாணங்கள் தோன்ற வேண்டும். 'நவில்தொறும் நூல்நயம் போலும்' பிரசாரம், இலக்கியம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சொற்கள்.

தெ: ஒரு காலத்தில் உங்களுக்குச் சிறப்பானதாக, திருப்தியானதாகத் தோன்றிய உங்கள் படைப்பு, பிற் காலத்தில் திருப்தியற்றதாகத் தோன்றிய துண்டா?

இ.பா: என்னால் எழுதப்பட்டிருக்கும் நூல், என்னால்தான் எழுதப்பட்டிருக்கமுடியும் என்ற ஓர் இன்றியமையாத தன்மையைப் பெறும்போது, நான் என் படைப்பைப் பிற படைப்புகளுடன் ஏன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

தெ: எப்பொழுது நீங்கள் நாடக வடிவைத் தேர்வு செய்கிறீர்கள்?

இ.பா: ஒரு நிகழ்வைப் பற்றி எழுதத் தீர்மானிக்கும்போது, அது மனக்கண் முன் காட்சிப் படிமங்களாக விரிந்தால் அது நாடகம். இளங்கோ, சிலப்பதிகாரத்தை நாடகமாகத்தான் பார்த்திருக்க வேண்டு மென்று தோன்றுகிறது.

தெ: உங்கள் படைப்புகளுக்கு ஆதார நோக்கம் உண்டா?

இ.பா: மனிதன் சூன்யச் சூழ்நிலையில் வாழவில்லை. அவனுக்கும் சமுதாயத்துக்கு முள்ள தொடர்புதான் அவனுடைய எந்தச் சிந்தனைக்கும் ஆதாரம். இலக்கியம் இதற்கு விதிவிலக்கன்று. இலக்கியம் பிரச்னை களுக்குத் தீர்வு தராது. பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும். அவ்வளவுதான்.

தெ: தற்போதைய எழுத்தாளர்களிடம் பின் நவீனத்துவம், மாயா யதார்த்தம், க்யூபிசம், போன்ற பரிசோதனை முயற்சிகள் நிறையக் காணப்படுகின்றன. அதுபோன்ற உத்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

இ.பா: மேற்கத்திய இலக்கியத்தில் எதற்குமே பட்டயம் கட்டித் தொங்க விடுவதில் அலாதிப் பிரியம். அதன் விளைவுதான் இச் சொல்லாட்சிகள். 'போரிடுவதா, கூடாதா?' இதுதான் அருச்சனுனக்கு இருந்த பிரச்னை. மேல்நாட்டு பாணியில் சொல்லவேண்டு மென்றால் 'existential dilemma' இந்த மாதிரிதான் 'magic realism' ' post-modernism' 'neo-structuralism' போன்ற சொற்களும். நம்முடைய இந்தியத் தத்துவ ஞானிகளும் இவர்களுக்குக் குறைந்தவர்களில்லை. 'படைப்பாளி படைக்கின்றான், விமர்சனப் பாதிரி பெயரிடுகின்றான்'. 'மாஜிக் ரியலிஸம்' இருக்கின்றதா என்று எதற்குப் பார்க்க வேண்டும்? அவற்றை இருக்கிறபடியே படிப்பதில் என்ன தவறு? கடன்வாங்கிய அளவுகோல்கள் எதற்கு?

தெ: மிகவும் சிக்கலான, திருகலான ஒரு மொழி நடையில் எழுதும் பாணி அதிகரித்து வருகிறதே, அதற்கான தேவை என்ன?

இ.பா: உயர்ந்த கருத்துக்கள் எளிமை யாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. இதயத்தில் ஒளி உண்டாயின் வாக்கிலேயும் ஒளி உண்டு. டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நாவலை எழுதவிரும்பும் ஒவ்வொரு படைப்பாளியும் படிக்கவேண்டும். ஐன்ஸ்டீனின் 'சார்பியல் கொள்கையை' பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எவ்வளவு எளிமையாக 'ஏ.பி.ஸி ஆ·ப் ரி லேடிவிட்டி' என்ற நூலில் விளக்குகிறார்!

தெ: அழகியல் சார்ந்த வர்ணனை களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?

இ.பா: நான் வருணனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவை அழகியல் சார்ந்தவையா இல்லையா என்பதுபற்றி எனக்குத் தெரியாது. 'Truth is Beauty, Beauty Truth, this all I know, this is all you need to know' இதுதான் எனக்குத் தெரியும்.

தெ: உங்களது 'குருதிப்புனல்' சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற நாவல். அதன் கருவைத் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியது எது? அந்தச் சூழ்நிலை இப்போது மாறிவிட்டதா?

இ.பா: அச்சம்பவம் என்னுடைய மாவட்டத் தில் நடந்தது. அது என்னை மிகவும் உறுத்தியது. அக்காலக் கட்டத்தில் நாற்பதுக் கும் மேற்பட்டவர்களை உயிருடன் வைத்துக் கொளுத்தியது என்பது அனைவரையும் உலுக்கிய ஒரு செய்தி. இப்பொழுது இம்மாதிரியான சம்பவம் செய்தியன்று. நாம் மரத்துப் போய்விட்டோம்.

மாற்றமே இல்லை. என் நாவல் புரட்சியை உண்டாக்கிவிடும் என்று நான் எதிர் பார்க்கவுமில்லை. நான் என்னுடைய பாதிப்பை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிலரையாவது சிந்திக்கத் தூண்டியிருந்தால் அதுவே எழுதுவதின் பலன்.

தெ: இன்றைய சூழ்நிலையில் ஒரு படைப்பை எழுத இன்னின்ன சமூக, பூகோள, ஜாதி ரீதிகளிலான தகுதிகள் வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் பலமாக வைக்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய உலகின் இந்த சகிப்பற்ற சூழ்நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

இ.பா: இலக்கியத்துக்குச் சம்பந்தமில்லத காரணங்களினால் ஓர் எழுத்தாளனின் படைப்பை மதிப்பிடுவது போன்ற துர் பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது. எழுத்தாளனுக்குத் தன் எழுத்தில் நம்பிக்கை இருந்தால் இதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப் படவேண்டும்? நான் எழுதிய 'நந்தன் கதை' இன்றும் மேடையேறிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதநேயம் இருந்தால், துன்பப்படுவர்களின் துயரை எல்லாராலும் உணரமுடியும். இலக்கியம் ஒரு குறுகிய வட்டத்தில் முடிந்துவிடுவதன்று. தகவல் நுட்பம் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை, வாடும் பயிரைக் கண்டால் வாடும் மனச் செறிவுதான் நல்ல இலக்கியத் தின் அடையாளம்.

தலித் இலக்கியத்தில் இப்பிரச்னைகள் ஆழமாக விவாதிக்கப்படுகின்றன. இவற்றில் வேறுபட்ட பார்வைகள் இருக்கக்கூடும். அவ்வாறு இருப்பதுதான் சிந்தனைக்கு ஆரோக்கியமான விஷயம்.

தெ: ஞானபீடம், சாகித்திய அகாதமி போன்ற விருதுகள் குறித்த சர்ச்சை களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

இ.பா: அரசியலுக்கும் இதற்கும் சம்பந்த மில்லை. இருந்திருந்தால் கலைஞர் கருணாநிதிக்கு இவ்விருதுகள் எப்பொழுதோ கிடைத்திருக்கும். இந்த அமைப்புக்களின் செயல்முறை விதிகளின் கோளாறினால், தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்கமுடிய வில்லை. இவ்விதிகளைத் திருத்தி அமைக்க வேண்டுமென்ற ஓர் இயக்கம் தேவை.

தெ: தமிழில் இலக்கியத் திறனாய்வுகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

இ.பா: இந்திய இலக்கிய விமர்சன தளத்தில், மேற்கத்திய விமர்சனக் கண் ணோட்டத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதுகின்றவர்கள் தமிழில் மிகவும் குறைவு. மேல் நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்ளுகின்றவர்கள் தாம் அதிகம்

தெ: தற்போது நாவல், சிறுகதை போன்ற படைப்புகள் யாவும் வணிகப் பத்திரிகை களுக்கு வெளியே நடைபெறுவதால் வெகுஜன வாசகர்களின் கவனத்தை இழந்து விடுகின்றனவே. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

இ.பா: ஒரு நல்ல எழுத்தாளன் வணிகப் பத்திரிகையைத்தான் நம்பியிருந்தான் என்பது அவன் படைப்புக்குச் சில கட்டுப் பாடுகளை விதித்தது. இப்பொழுது அவன் அவற்றை நம்பி எழுதுவதில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம். புத்தகமாகவே வெளியிடப்படும் நாவல்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வெகுஜன வாசகர்கள் என்றுமே கனமான எழுத்துக் களைப் படிக்க அக்கறை கொண்டதில்லை.

தெ: நீங்கள் போலந்து பல்கலைக் கழகத்தில் பணியாற்றி உள்ளீர்கள்? அந்த நாட்டில் பணியாற்றிய அனுபவம் குறித்து..

இ.பா: தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்குத் தமிழைக் கற்றுத் தரும்போதுதான் நம் மொழியைப் பற்றிய உள்ளார்ந்த பல இலக்கண நுணுக்கங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. என் போலந்து அநுபவங்களை 'ஏசுவின் தோழர்கள்' என்ற நாவலில் கூறியிருக்கிறேன்.

தெ: அமெரிக்காவில் உங்கள் வாழ்க்கை எவ்வாறு உள்ளது?

இ.பா: 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'.

சந்திப்பு: சடகோபன் திருமலைராஜன்
தொகுப்பு: மணி மு. மணிவண்ணன், மதுரபாரதி
படங்கள்: முகுந்த் பார்த்தசாரதி

© TamilOnline.com