தென்றல் பேசுகிறது...
காங்கிரஸின் இரண்டு அவைகளுமே தத்தமது உடல்நலச் சட்ட வரைவுகளைத் தயார் செய்துவிட்டன. எத்தனை மாறுதல்களுக்குப் பிறகு அதிபரின் கையொப்பம் பெற்றுச் சட்டமாகும் என்பதைச் சொல்ல முடியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது--இரண்டு வரைவுகளுமே சிறுதொழில் முனைவோரின் கவனத்தைத் தமது பணியாளரின் மருத்துவக் காப்பீட்டுக் கவலைகளிலிருந்து திருப்பி, தொழில் உயர்வுக்கான முயற்சிகளில் குவிய வழிவகை செய்கின்றன. இந்த உலகமயமான போட்டா போட்டி யுகத்தில், புதியன செய்யும் திறன் மிக முக்கியமானது. சற்றே அரசியல்ரீதியாக ஆபத்தானது என்றாலும் இந்தச் சீரமைப்பைச் செய்ததற்கு ஒபாமாவைப் பாராட்டியாக வேண்டும்.

*****


உலக நாடுகளிடையே 2008ல் 4வது வளமான நாடாக (Prosperity Index) இடம்வகித்த அமெரிக்கா 2009ல் 5 இடங்கள் நழுவி 9வது இடத்துக்குப் போய்விட்டதாக லண்டனைச் சேர்ந்த தற்சார்பு அமைப்பான லெகேடம் இன்ஸ்டிட்யூட் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 2010ல் அமெரிக்காவின் வேலையற்றோர் சதவிகிதம் 9.3 ஆக இருக்கும் என்று பன்னாட்டு நாணய நிதி (WMF) கூறியிருப்பதும் அதிர்ச்சியைத் தருவதே. இப்படிப்பட்ட செய்திகளுக்கு நடுவே வருகின்ற புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்று, 'ஊழையும் உப்பக்கம்' காண்பதில்தான் பெருமை இருக்கிறதே அன்றிச் சலித்துக் கொள்வதிலோ தொய்ந்து போவதிலோ அல்ல. இன்னமும் உற்சாகம், புதுமை, வளம், சுதந்திரம் என்கிற வார்த்தைகளை நினைக்கையிலேயே கண்முன் தோன்றுவது அமெரிக்காதான். அந்த பிம்பம் மாற வேண்டிய அவசியமில்லை. உலகமெங்கும் சென்று உங்கள் நாட்டைத் திருத்துகிறேன் என்று புறப்படுகிற கொள்கையைக் கைவிட்டு, தன்னகத்தை முதலில் செப்பனிட்டுப் புதுக்கும் பணியை ஒபாமா அரசு செய்தாலே போதும். மக்கள் புதிய உற்சாகத்தோடு அதற்குத் தோள் கொடுப்பார்கள்.

*****


சூறாவளித் துறவி என்று உலகம் குறிப்பிட்ட சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12, தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. யார் மறந்தாலும் நாம் மறவோம் என்று இந்த இதழை இளைஞர் சிறப்பிதழாகத் தயாரித்தளிப்பதில் தென்றல் குழு பெருமிதம் கொள்கிறது. சுவிட்சர்லாந்தில் சென்று சொகுசாகச் சம்பாதிக்கும் வாழ்க்கையைத் தியாகம் செய்தார் 27 வயதான இளைஞர் அக்ஷயா கிருஷ்ணன். எதற்காகத் தெரியுமா? சித்தம் கலங்கி மதுரையின் தெருக்களில் கதியற்று அலைவோர் 400 பேருக்கு அன்றாடம் மூன்று வேளையும் திட்டமிட்ட உணவு தயாரித்து அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று உணவளிக்கும் அரும்பணியைச் செய்வதற்காக.

தன்னம்பிக்கை நூல்கள் இன்றைக்கு ஆயிரக்கணக்கில் வெளிவருகின்றன. ஆனால், முதன்முதலில் வார இதழ்களில் தன்னம்பிக்கைக் கட்டுரைகளை எழுதி எண்ணற்ற இளைஞர்களைத் துணிந்து இறங்கித் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் சிறப்பதற்கான வழி கோலியவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. கழுத்துக்குக் கீழே செயலிழந்தும் கூடத் தன் வாழ்வை மற்றோருக்கு இணையானதாகச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் பாசிடிவ் அந்தோணி. அதேபோல, தொடர்ந்து வருடத்தில் பல மாதங்கள் வயிற்றுநோய் காரணமாக வலுவிழந்து இருந்தாலும், 'அழகி' என்னும் மொழிமாற்ற மென்பொருளை வடிவமைத்து, அதை இலவசமாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்துள்ளார் 'அழகி' விஸ்வநாதன்.

அமெரிக்காவுக்கு அறுபதுகளிலேயே படிக்க வந்து, நிலையான சம்பளம் தரும் வேலையை உதறிச் சுயதொழில் தொடங்கி, மரபியல் மருத்துவ ஆராய்ச்ச்சியை முன்னெடுத்துச் சென்றதோடு, இங்கே பல தமிழ்ச் சங்கங்களுக்கு வித்திட்டு, FeTNA, TNF போன்ற அமைப்புகளுக்கும் கணிசமான பங்காற்றி நிற்கும் முன்னோடிகளில் ஒருவர் டாக்டர் வி.ஜி. தேவ்.

சமுதாய உணர்வு, தியாகம், தன்னம்பிக்கை, தேசப்பற்று, புரட்சிச் சிந்தனை என்னும் சொற்களுக்குப் புதிய பரிமாணம் கொடுத்தவர் வேதாந்தச் சிங்கம் விவேகானந்தர். அவர் நினைவாக வரும் இந்த இளைஞர் சிறப்பிதழில் மேலே கூறிய ஒவ்வொருவருமே இந்த குணங்களைப் பெற்றுத் தமிழகத்தை, ஏன், இந்தியாவைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறவர்கள். அவர்களை அமெரிக்கத் தமிழரின் கவனத்துக்குக் கொண்டு வருவதில் தென்றல் மகிழ்ச்சியடைகிறது.

பல பயனுள்ள தகவல்கள், தமிழ்ச் சங்கச் செயல்பாடுகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், சமையல் குறிப்பு என்று எல்லாத் தரப்பினருக்கும் ஏதோவொன்றைத் தரும் அட்சயபாத்திரமாக இந்தத் தென்றல் உருவாகியுள்ளது. இனி, ரசிப்பது உங்கள் கையில்....

வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், பாரதக் குடியரசு தின வாழ்த்துக்கள்!


ஜனவரி 2010

© TamilOnline.com